|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது !


இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது பதவிப் பொறுப்புக்கு வந்தாலும், அவருக்கு முந்தைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும் என்னென்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டன என்று கண்டறிந்து, அவைகளுக்கெல்லாம் மூடு விழா நடத்துவதிலேயே மகிழ்ச்சி அடைபவர். அந்த வரிசையில் நேற்றைய தினம் அறிவித்திருக்கின்ற மற்றொரு மூடுவிழா 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை கொஞ்சமும் இரக்கமின்றி வீட்டிற்கு அனுப்புகின்ற சாதனையாகும்.

தி.மு.கழக ஆட்சி 1989ம் ஆண்டு மீண்டும் அமைந்த போது, தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கிய ஒரு திட்டம் தான் மக்கள் நலப் பணியாளர்களை நியமித்த திட்டமாகும். இந்தத் திட்டத்தைத் தொடங்கிய போது மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ 750 மதிப்பூதியம் என்ற அளவிலே நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் இரண்டாண்டுகளில் 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும், அவருடைய பரந்த உள்ளம் காரணமாக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் டிஸ்மிஸ் செய்து 13-7-1991 முதல் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.  1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும், பதவியிழந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வாய்ப்பளித்தோம். அதைப் போலவே பத்தாயிரம் சாலைப் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், காழ்ப்புணர்ச்சி எதுவுமே இல்லாத அவர், கருணை உள்ளத்தோடு கழக ஆட்சியிலே நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி அவர்களின் வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டார். 

1-6-2001 முதல் மக்கள் நலப் பணியாளர்களையெல்லாம் பணி நீக்கம் செய்து ஜெயலலிதா ஆட்சியின் ஊரக வளர்ச்சித் துறை ஆணை எண். 149 அறிவித்தது. பணியிழந்த 13 ஆயிரத்து 247 பேரில் சுமார் பாதி பேர் பெண்களாகும். ஐந்தாண்டு காலம் பணியாற்றி மாதந்தோறும் ஊதியம் பெற்று வந்த அந்தக் குடும்பத்தினர் எல்லாம் திடீரென்று வேலையில்லை என்றால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? அந்த ஊதியத்தை நம்பி பல பேர் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள். பலர் தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள். அவர்களின் கதி எல்லாம் என்னவாகியிருக்கும்? அதைப் பற்றி ஜெயலலிதாவிற்கு என்ன கவலை? பல பேர் தற்கொலையே செய்து கொண்டு மாண்டார்கள். இந்த வேலையை நம்பி பலருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வேலை போனதால் திருமணங்கள் நிறுத்தப்பட்டு, அதை நம்பியிருந்த பல பெண்கள் நிர்க்கதிக்கு ஆளானார்கள்.

உதாரணமாக ஒரு சிலவற்றை கூற வேண்டுமேயானால், நாகை மாவட்டம், கீழையூர் அருகேயுள்ள வைரவன்கட்டளை என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் வேலை போனதின் காரணமாக 11-6-2001ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சி. கந்தசாமியின் வேலை பறி போன காரணத்தால், அவருடைய மனைவி பிரபா என்பவர் 11-6-2001ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  12-6-2001ல் நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களின் குடும்பத்திற்கு அப்போதே தி.மு. கழகத்தின் சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி பணி பறி போனதும் சோகத்தில் பட்டினி கிடந்தே மாய்ந்து போனார்.

நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடியைச் சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமனாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன் வேலை போன காரணத்தால் பட்டினி கிடந்து உயிர் துறந்தார் என்று பட்டியல் நீளுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய எந்தப் போராட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. 2006ம் ஆண்டு தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த மக்கள் நலப் பணியாளர்கள் என்னைச் சந்தித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். 1-6-2006 முதல் மீண்டும் அவர்கள் எல்லாம் தி.மு.கழக அரசினால் பணி நியமனம் பெற்றார்கள். பணி அளித்தது மாத்திரமல்லாமல், கால முறை ஊதியத்தின் கீழ் மக்கள் நலப் பணியாளர்களை கொண்டு வர வேண்டுமென்ற எண்ணத்தோடு தி.மு.கழக ஆட்சியில் 1-6-2009 முதல் ரூ. 2500 - 5000 மற்றும் ரூ. 500 தர ஊதியம் என்ற அளவில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை காரணமாக 12,653 மக்கள் நலப் பணியாளர்கள் பயன் பெற்றனர்.

மக்கள் நலப் பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவதிலும் குடிப் பழக்கத்தின் தீமைகளை மக்களுக்கு உணர்த்துவதிலும் தெரு விளக்குகளைப் பராமரிப்பதிலும் மற்றும் சத்துணவு மையங்களைக் கவனிப்பதிலும் தங்களது பணிகளைச் செலுத்தி வந்தார்கள். அ.தி.மு.க. அரசு எப்போது பதவிப் பொறுப்புக்கு வந்தாலும், அரசு அலுவலர்களையெல்லாம் ஏதோ எதிரிகள் என்பதைப் போல நினைத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த ஏழைகளின் வயிற்றிலே ஒரு அரசு இப்படியெல்லாம் அடிக்கலாமா? கோடிக் கணக்கிலே அரசின் நிதியைச் செலவழித்துக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை வீணாகப் போட்டு வைத்திருப்பதும் அண்ணாவின் பெயரிலே உள்ள நூலகக் கட்டிடத்திலே குழந்தைகளுக்கான மருத்துவமனையைத் தொடங்கப் போகிறேன் என்பதும் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதெல்லாம் பொய் வழக்குகளைச் சுமத்தி, அவர்களை சிறையிலே அடைத்து வைத்து இன்பம் காண்பதும் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...