|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

2ஜி வழக்கு குற்றச்சாட்டுகளைத் திருத்தக் கோரி மனுத்தாக்கல்!

ஜி வழக்கில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் உள்ள "முரண்பாடுகளையும் பிழைகளையும்' திருத்த வேண்டும் என்று கோரி குற்றம் சாட்டப்பட்ட மூவர் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.


தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சண்டோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா, குசேகாவ்ன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவன இயக்குநர் ஆசிப் பல்வா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் திருத்தங்களைக் கோரினர். குற்றச்சாட்டுப் பதிவு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 22-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் முறையைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 213-ன்படி குற்றம் நடந்த முறை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நேர்மையான விசாரணை நடைபெறும் வகையில் குற்றச்சாட்டுப் பதிவில் உள்ள முரண்பாடுகளும் பிழைகளும் களையப்பட வேண்டும். பிழைகளை அனுமதித்தால் ஒட்டுமொத்த விசாரணையே நேர்மையற்றதாகி விடும் என்று நீதிபதி ஓ.பி. சைனி முன்பு மனுதாரர்கள் ஆசிப் பல்வா, சண்டோலியா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால் வாதிட்டார்.


நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், நேர்மையற்ற முறையில் சொத்துகளை அளிப்பது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்போது எவ்வளவு பணம், சொத்து மதிப்பு அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். போலியான ஆவணங்களை உருவாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அப்படி எந்த ஆவணம் போலியாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. போலியாக உருவாக்கப்பட்டாகக் கூறப்படும் ஆவணத்தைக் குறிப்பிடாவிட்டால் எதை எதிர்த்து மனுதாரர்கள் வாதிடுவது என்று அகர்வால் கேட்டார். ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து குற்றம் புரிந்ததாக பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு சாஹித் பல்வா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.என். மித்தல் எதிர்ப்புத் தெரிவித்தார்.


இப்படி இணைத்துக் குற்றம்சாட்டியிருப்பது பொருத்தமற்றது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஆதரவாக யூனிடெக் நிறுவனம் வாதாடும் என்று எதிர்பார்க்க முடியுமா? எனவே, தங்கள் தரப்பு நியாயங்களைத் தெரிவிக்கும் வகையில் இந்த இரு நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாகப் பிரித்துப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். இவர்களின் மனு மீதான விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, "வயதானவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள்', முக்கியச் சாட்சிகள் போன்றோருக்கு முக்கியத்துவம் அளித்து முதலில் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று ராஜீவ் அகர்வால் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...