|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களுக்காக போராடிய கேரள கன்னியாஸ்திரி வல்சாஜான் படுகொலை!


ஜார்க்கண்டில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி வல்சா ஜான் என்பவர் சுரங்க மாஃபியாவால் படுகொலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியைச் சேர்ந்வர் வல்சா ஜான்(53). கடந்த 1984ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆனார். முதலில் கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் அதிகமுள்ள தும்கா பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். நிலக்கரி மாஃபியா அந்த பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டிவிட்டது. இதை எதிர்த்து போராடி வந்தார் கன்னியாஸ்திரி வல்சா ஜான்.

பழங்குடியின மக்களின் வாயை அடைக்க முடிந்த மாஃபியாவால் வல்சா ஜானை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாகூர் மாவட்டம், பச்வாரா கிராமத்தில் இருந்த கன்னியாஸ்திரியை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக வெட்டினர். இதில் வல்சா ஜான் பரிதாபமாக உயிர் இழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கன்னியாஸ்திரி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிதுள்ளார். அவரது மரணச் செய்தி கேட்டு கேரளாவில் உள்ள அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து அவரது மூத்த சகோதரர் எம்.ஜே. பேபி கூறியதாவது,

தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று வல்சா தெரிவித்தார். ஆனால் மாஃபியா ஆட்கள் அவரை இப்படி படுகொலை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. பெரும்பாலும் அவரது இறுதிச் சடங்கு தும்காவில் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். இரவு 2 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது என்று எங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வல்சா ஜார்க்கண்டில் சட்டப்படிப்பு படித்து வந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் அம்மாநில அரசியல் தலைவர்கள் சிபி சோரன், ஸ்டீபன் மாராண்டி ஆகியோரிடம் கூட தெரிவித்துள்ளார். நிலக்கரி மாஃபியா ஆட்கள் வல்சாவுக்கு பணம் தர முன்வந்துள்ளனர். அவர் மறுக்கவே அவரை படுகொலை செய்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...