|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு படித்ததில் பாதித்தது!ஐரோப்பியர்கள் அறிமுகப் படுத்திய இனத் தேசியவாதம் என்ற கற்பிதம் செயற்கையானது. இது பல தடவை நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனமும் பழம் பெருமை பேசத் தெரிவு செய்யும் சரித்திர நாயகர்கள், அந்தப் பெருமைக்கு தகுதியுடையவர் தானா, என்பது சந்தேகமே. இன்றைக்கு இருக்கும் மொழி சார்ந்த இனவுணர்வு, நூறாண்டுகளுக்கு முன்னர் காணப்படவில்லை. மதத்தை மாற்றுவது போல, மொழியை மாற்றிக் கொள்வதும் காலங்காலமாக நடைபெற்று வரும் மாற்றங்கள். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்கள் கூட அவ்வாறு தான் வாழ்ந்துள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், இன்று "தமிழர்கள்" என அறியப்படும் பல்லவர்கள். சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களுடன் பல்லவர்களையும் பண்டைய தமிழ் மன்னர்களாக உருவகித்துக் காட்டும் போக்கு, இனப்பெருமை பேசுவோரால் முன்னெடுக்கப் படுகின்றது. "தமிழ் மன்னர்கள்" எல்லாம், உண்மையிலேயே தமிழர்களா, அல்லது தமிழ் உணர்வுடன் ஆட்சி செய்தனரா, என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

பல்லவர்கள் என்றவுடன், சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்கள் நினைவுக்கு வரும். பல்லவர் காலத்து கோயில்களும், சிற்பங்களும் இன்றைக்கும் அழியாமல் உள்ளன. கருங்கல்லில் வடிக்கப் பட்ட சிற்பங்கள், இந்து புராணக் கதைகளை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்து பல்லவர்கள் நம்மவர்கள் என்று கருதிக் கொள்கிறோம். மாமல்லபுரம் கோயில்களை குடைந்தவர்களும், சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளும் தமிழ் பாட்டாளி மக்கள் தான். அதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால், அவற்றை செதுக்குவதற்கு உத்தரவிட்ட மன்னர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோழர் காலத்து கல்வெட்டுகள் தமிழில் இருக்கையில், பல்லவர் காலத்து கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் காணப் படுகின்றன. இந்தியாவின் கிழக்குப் பகுதியில், சமஸ்கிருதத்திற்கு முன்னர் பேசப்பட்ட பிராமி மொழி, அந்தக் காலத்தில் நாகரீகமடைந்த மொழியாக இருந்துள்ளது. அதுவே பல்லவர்களின் ஆட்சி மொழியாக இருந்திருக்கலாம். பல்லவர்களின் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம், மாமல்லபுரத்திற்கு மட்டுமே சிறப்பான ஒன்றல்ல.

முதலில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எதுவெனப் பார்ப்போம். இன்றைய ஆந்திரா மாநிலத்தின் தென் பகுதியும், தமிழ் நாடு மாநிலத்தின் வட பகுதியும் பல்லவர்களின் நாடாக இருந்துள்ளது. தென் ஆந்திராவில் உள்ள குண்டூர், வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் என்பன பல்லவர் காலத்தில் குறிப்பிடத் தக்க நகரங்களாக இருந்துள்ளன. ஒரு காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து தெற்கு நோக்கி விரிந்திருந்த சாதுவாகனரின் சாம்ராஜ்யத்தின் மறைவில் தான் பல்லவர்கள் தலையெடுக்கத் தொடங்கினார்கள். பண்டைய இந்தியாவில், சாதுவாகனரின் சாம்ராஜ்யத்திற்குள், இன்றைய இந்திய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியிருந்தன, சாதுவாகனரின் ஆட்சியில் பௌத்த மதம் அரச அந்தஸ்துப் பெற்றிருந்தது. இன்றைக்கும் ஆந்திராவில், குன்டூருக்கு அருகில் புத்தர் சிலைகளும், வேறு சில பௌத்த மத சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. மகாராஷ்டிராவில் தான் அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும் காணப் படுகின்றன. இவை யாவும் பௌத்த மத துறவிகளால் செதுக்கப் பட்டவை. இதற்கெல்லாம் நீங்கள் சரித்திரப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சாதாரணமாக, அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணியாக செல்லும் ஒருவர், அறிந்து வைத்திருக்க கூடிய தகவல்கள் இவை.

இன்றைக்கும் புத்தகக் கடைகளில் சூடாக விற்பனையாகும், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற "சரித்திர நாவல்கள்", வரலாற்றை திரித்து எழுதப் பட்டுள்ளன. கல்கியின் நாவல்களில் வரும் புலிகேசி என்ற "வில்லன்", உண்மையில் இந்தியர்கள் பெருமைப் படக் கூடிய சக்கரவர்த்தி ஆவார். ஆனால், அவர் காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப் பட்டமை, அவரை வில்லனாக காட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், "இந்து மதம்" (இந்து என்ற சொல் சர்ச்சைக்குரியது. பொதுவான அர்த்தத்தில் கூறப் படுகின்றது.) தலையெடுத்தது. 

பண்டைய காலங்களில், இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய ஆதிக்க மதமாக இருந்தது. யாகம் வளர்த்து மிருகங்களை பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை, வழிபாடாகக் கொண்டிருந்தது. சாதுவாகனரின் ஆட்சிக் காலத்தில், அந்த வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. புலிகேசி காலத்தில் அடங்கியிருந்த பிராமணர்கள், பல்லவர்கள் காலத்தில் தான் மறுபடியும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல்லவர்களும் பிராமணர்கள் என்றொரு சரித்திரக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்திய சாதி அமைப்பின் பிரகாரம், அரச பரம்பரையினர் சத்திரியர்களாக கருதப் பட வேண்டும். இருப்பினும், பிராமணர்களும், சத்திரியர்களும் ஆரிய வம்சாவழியை பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

வரலாற்றில் திராவிடர் என்றொரு இனம் இருந்ததில்லை. அது, ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தென்னிந்தியர்களுக்கு சூட்டிய பொதுப் பெயர். ஆனால், ஆரியர், அல்லது அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்ளும் இனம், இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. 200 க்குப் பின்னர், ஈரானிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சசானியர்கள் தம்மை ஆரிய இனத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் காலத்தில் தான் ஈரான் என்ற பெயர்ச் சொல்லும் பாவனைக்கு வந்தது. அதாவது, ஈரான் என்றால் "ஆரியர்களின் நாடு" என்று அர்த்தம்!

சசானியர்களுக்கு முன்னர், ஈரானை பார்த்தியர்கள் ஆண்டார்கள். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிப் பரப்பு, இன்றைய பாகிஸ்தான் வரையில் விரிந்திருந்தன. அதற்குமப்பால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் படையெடுத்து சென்றுள்ளனர். இரண்டு அரச பரம்பரையினர் காலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ளது போன்று சிற்பங்கள் போன்று செதுக்கும் கலை வளர்ந்திருந்தது. மேலும் ஒரு தகவல், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிக் காலத்தில், பெரும்பான்மை ஈரானிய குடிமக்கள் பேசிய மொழியின் பெயர், "பல்லவ மொழி"! அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்பின் பின்னர், பல்லவ மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய ஈரானியர்கள் பேசும் பார்சி மொழியில், நிறைய அரபுச் சொற்கள் கலந்துள்ளதால், புதிய மொழி போன்று தோற்றமளிக்கின்றது.

ஈரானியர்களுக்கும், வட-இந்தியர்களுக்கும் இடையில் மிக அதிகமான கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பார்சி, சமஸ்கிருதம், உருது, ஹிந்தி எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழிகள். இவற்றில் ஒரு மொழி தெரிந்தவர், இன்னொன்றை பயில்வது இலகு. மார்ச் 21 , அல்லது அதற்கு பிந்திய நாள், ஈரானில் புது வருடமாகவும், வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகவும் கொண்டாடப் படுகின்றது. இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய ஈரானிய மதக் கதைகள், இந்து மதக் கதைகளை ஒத்துள்ளன. மித்ரா, வருணா, போன்ற கடவுளர்கள் ஒரே பெயரில் வந்தாலும், அவர்களைப் பற்றிய கதைகள் சிறிது மாறு படுகின்றன. இந்துக்களின் "ரிக் வேதம்", ஈரானியர்களின் "அவெஸ்தா கதா" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். சுருக்கமாக, இந்து மதமும், ஈரானிய மதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்துக்களான பல்லவர்கள், ஈரானியர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை நிறுவுவதற்கு இது போதும்.

பண்டைய ஈரானிய மன்னர்கள் போரில் கைப்பற்றும் நாடுகளில், தமது மதத்தையோ, அல்லது மொழியையோ திணிக்கவில்லை. உள்நாட்டு மக்களின் மொழியை, மதத்தை அங்கீகரிப்பதன் மூலம், சிறந்த முறையில் அவர்களை ஆள முடியும் என்று நம்பினார்கள். இல்லாவிட்டால், கிரேக்கம் முதல் இந்தியா வரையிலான, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அவ்வளவு சுலபமாக நிர்வகித்திருக்க முடியாது. ஈரானிய ஆட்சியாளர்கள், "நெருப்பை வணங்கும், சரதூசரின் தத்துவங்களை பின்பற்றும்" மத நம்பிக்கையாளர்கள். ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில், தமது மதத்தை தமக்குள்ளே மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஈரானிய மன்னர்கள் வெளியிட்ட இலச்சினைகளில் எப்படியும் நெருப்பின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். தென்னிந்தியாவில் பல்லவர்கள் ஆண்ட இடங்களிலும், அது போன்ற இலச்சினைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் பல்லவர்கள் ஆண்ட பகுதி "பல் நாடு" என்று அழைக்கப் படுகின்றது. பல் நாடு பற்றிய செவி வழிக் கதைகள், "பல் நாட்டி வீருள்ள கதா" என்ற நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் உள்ள, பண்டைய இலக்கியங்களில் அது முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள், தமிழ் பேசும் மக்களைக் கவர்வதற்காக தமது பெயர்களையும் தமிழ்ப் படுத்திக் கொண்டார்கள். "மாமல்லன்" என்பது, தமிழாக்கப் பட்ட ஈரானியப் பெயராக இருக்க வாய்ப்புண்டு. தமிழில் மல்யுத்தம் செய்யும் வீரர்களை மல்லர்கள் என்று அழைப்பார்கள். மல்யுத்தம் என்ற வீர விளையாட்டு, பல்லவர்களின் தாயகமான ஈரானில் இருந்து வந்திருக்க வேண்டும். பல்லவ மன்னர்கள், தம்மை சிறந்த மல்யுத்த வீரர்களாக காட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. Varzesh-e Bastani என்பது ஈரானின் மரபு வழி மல்யுத்த விளையாட்டைக் குறிக்கும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, இன்றைக்கும் பயிற்றப் படும் மல்யுத்தமானது, ஈரானியக் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. ஈரானில் மல்யுத்த வீரர்களை "பஹ்லவன்" என்று அழைப்பார்கள்! ஈரானிய பஹ்லவன், தமிழில் பல்லவனாக மருவியிருக்கலாம். இன்றைக்கும் பல ஈரானியர்கள், பஹ்லவன் என்று பெயர் வைத்துக் கொள்வது வழமையானது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...