|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

பதிவிறக்க காப்புரிமை பிரச்னையால் மொபைல் போன் பாடல்களுக்கு சில்லறை வியாபாரிகள் கும்பிடு!


சினிமா பாடல்கள் பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்யும் மொபைல் போன் சில்லறை வியாபாரிகளின் உரிமத் தொகையை குறைக்க, ஐ.எம்.ஐ., அமைப்பு முன்வரவில்லை. இதனால், இந்த பணியை கைவிடும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர். மொபைல் போன் சில்லறை வியாபாரிகள், உரிய அனுமதியின்றி, சி.டி.,க்களிலும், மொபைல் போன்களிலும், வாடிக்கையாளர்களுக்கு பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்து தருகின்றனர். இந்திய காப்புரிமை சட்டப்படி தவறான இந்த செயலை தடுக்கும் பணியில், ஐ.எம்.ஐ., களம் இறங்கியது. இதையடுத்து, மொபைல் போன் சில்லறை வியாபாரிகளுக்கு, சென்னையில் 22 ஆயிரம் ரூபாய், மாவட்ட தலைநகரங்களில் 18 ஆயிரம் ரூபாய், சிறு நகரங்களில் 15 ஆயிரம் ரூபாய் என, உரிமக் கட்டணம் நிர்ணயித்தது.

உரிமம் பெறாமல் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் வியாபாரிகள் மீது, கடந்த மூன்றாண்டுகளில், சென்னையில், 184 வழக்குகளும், மதுரையில், 142 வழக்குகளும் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு தேவை : இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த மொபைல் போன் சில்லறை வியாபாரி கோபிநாத் கூறியதாவது: இந்திய காப்புரிமை சட்டம் குறித்து, சமீபத்தில், சென்னையில், காவல்துறையினருக்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது. அவர்களுக்கே இந்த சட்டம் குறித்து பயிற்சி தேவைப்படும்போது, இதுபற்றி எங்களிடம் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல், சட்டரீதியான நடவடிக்கை என, பயமுறுத்துவது நியாயமில்லை.

சினிமா பாடல்கள் உரிமை வாங்கும், எப்.எம்., ரேடியோக்கள் மற்றும் "டிவி' சேனல்களுக்கு, விளம்பர வருவாய் கிடைக்கிறது. மொபைல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து மாதாந்திர சேவை கட்டணம் பெறுகின்றன. ஆனால், "புளூ டூத்' போன்ற நவீன தொழில்நுட்பத்தால், எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, ஆண்டு உரிமத் தொகையை, 5,000 ரூபாயாக ஐ.எம்.ஐ., நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில், இப்பணியை நாங்கள் கைவிட வேண்டியது தான். இவ்வாறு கோபிநாத் கூறினார். குறைக்க முடியாது : ஐ.எம்.ஐ.,யின், தமிழக ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் எஸ்.பி.,யுமான சுப்ரமணியன் (பணி நிறைவு) கூறும்போது: சென்னை, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும், மொபைல்போன் சில்லறை வியாபாரிகள் மீதான எங்கள் நடவடிக்கை தொடரும். இந்திய காப்புரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆறு மாத ஆய்வுக்கு பின்பே, உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதை குறைக்க முடியாது. கட்டணம் செலுத்த முடியாதோர், பாடல் பதிவிறக்கத்தை தாராளமாக கைவிடலாம். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார். 

காப்புரிமை கட்டணம் ஏன்? : சோனி மியூசிக், வீனஸ், டிப்ஸ், சரிகம, மானசா உள்ளிட்ட 56, இசைப் பதிவு நிறுவனங்கள், "இந்தியன் மியூசிக் இண்டஸ்ட்ரி' (ஐ.எம்.ஐ.,) அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. சினிமா தயாரிப்பாளரிடமிருந்து பல லட்சம் ரூபாய்க்கு, சினிமா பாடல்களுக்கான உரிமத்தை இந்நிறுவனங்கள் பெறுகின்றன. இந்த பாடல்களை வானொலியிலோ மற்ற வடிவங்களிலோ பயன்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உரிமையை, இந்திய காப்புரிமை சட்டம் பாதுகாக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...