|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மாநகர போலீசார் சார்பில் சபாநாயகருக்கு கடிதம்!


திருச்சி குமரன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராணி. இவர் கடந்த செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் அளித்த பேட்டியில் எனது முதல் கணவர் ராய் தங்கபாண்டியன் என்பவர் மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர் பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மெடிக்கல் போர்டு சேர்மனாக பரஞ்சோதி இருந்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2008 நவம்பர் 10ம் தேதி சென்னை தேவி கருமாரியம்மன் கோயிலில் என்னை அவர் 2வதாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் நான் என் வீட்டிற்கும் அவர் தன் வீட்டிற்கும் சென்றுவிட்டார். 

2011 சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு எல்லா ஆவணங்களிலும் என் பெயரை சட்டப்படி கொண்டு வருவேன். முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன் என்று கூறியவர் நான் இறந்த பிறகு எனது உடலுக்கு சடங்கு செய்ய உனக்கு சகல உரிமை உண்டு என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார். மேலும் கடந்த முறை எம்எல்ஏ தேர்தலில் நிற்க என்னிடம் இருந்து ரூ.10லட்சம் வரை பெற்றார். மேலும் 70பவுன் நகையையும் பறித்து கொண்டார். அதோடு மட்டுமின்றி ரூ.2.5லட்சம் மதிப்புள்ள காலி மனையையும் அபகரித்து கொண்டார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அவரிடம் போனில் தொடர்பு கொண்ட போது என்னை மிரட்டினார்.

எனது குழந்தைகள் உள்பட 3 பேருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பரஞ்சோதிக்கு தமிழக அமைச்சரவையில் சட்டம்- சிறை மற்றும் இந்து அறநிலையத்துறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடந்த நவம்பர் 11ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் டாக்டர் ராணி புகார் மனு அளித்தார். அதில் தான் அளித்த புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் புஷ்பராணி, பரஞ்சோதி மீதான புகார் தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றம் அளித்துள்ள கெடு முடிய இன்னும் 8 நாட்களே உள்ளநிலையில் அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, உதவி கமிஷனர் வீராசாமி ஆகியோர் அரசு வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,   பல வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை பொறுத்தவரை வழக்கு பதிவு செய்து பின்னர் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக எந்த ஒரு எம்எல்ஏ மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னர் முறையாக சபாநாயகரிடம் அனுமதி பெறவேண்டும். அதன் அடிப்படையில் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு செய்ய அனுமதியளிக்க கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...