|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

அன்னிய முதலீடு மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க திமுக முடிவு?!


சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்க் கட்சிகளோடு சேர்த்து காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து, இந்த விவகாரத்தில் திமுக மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக முயன்று வருகிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக, இரு அவைகளிலும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், அதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. அரசின் மீது ஓட்டெடுப்பு நடந்தால், ஆதரித்து வாக்களிக்க திமுக ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் இன்று நாடாளுமன்றம் 5வது நாளாக முடங்கியது. இந்த பிரச்சினை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மான விவாதத்தை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக கோரி வருகிறது. இதையடுத்து திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி இன்று நாடியது. இதில் திமுகவின் ஆதரவு மத்திய அரசுக்குக் கிடைத்துவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூத்த எம்பிக்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பண்டோபாத்யாயா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, முஸ்லீம் லீக் கட்சியின் இ.அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் அன்னிய முதலீடு குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா விளக்கினார். 
அப்போது நாடாளுமன்றத்தை இயங்க வைக்க உதவுமாறும், ஓட்டெடுப்பு நடந்தால் அரசை ஆதரித்து வாக்களிக்குமாறும் அவர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்தச் சந்திப்பின்போது, அன்னிய முதலீடு முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று அவர்களிடம் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அப்போது, அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கோரிய டி.ஆர்.பாலு, அரசை ஆதரித்து வாக்களிப்போம் என்று உறுதிமொழியும் தந்ததாகத் தெரிகிறது.

இக் கூட்டத்தையடுத்து நி்ருபர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பதை திமுக எதிர்க்கிறது. இதனால் சில்லறை வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவர். ஆனாலும், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். அதனால் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தால், அரசை ஆதரித்து வாக்களிப்போம். இந்தப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், ஒருமித்த கருத்தை எட்ட முயல வேண்டும் என்றார். அதே போல அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் 

இதனால் திமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மாட்டோம் என்று திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரதமரிடம் தனது நிலையைத் தெளிவாக்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அன்னிய முதலீடு திட்டத்தை திரிணமூல் வெளியில் எதிர்ப்பதாகவும், தேர்தலுக்குப் பின் மத்திய அரசின் முடிவை அந்தக் கட்சி ஆதரிக்கும் என்று தெரிகிறது. அதுவரை அந்தக் கட்சி அன்னிய முதலீட்டுக்கு எதிராக சும்மா சத்தம் போடும் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே நேற்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பாஜக தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த விஷயத்தில் பாஜக தனது எதிர்ப்பு நிலையை கொஞ்சம் கைவிட்டு நாடாளுமன்றத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அன்னிய முதலீடு என்ற திட்டத்தையே மத்திய அரசு வாபஸ் பெற்றால் தான் நாடாளுமன்றத்தை செயல்பட விடுவோம் என்று அத்வானி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் பங்கேற்றனர்.மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, அன்னிய நேரடி முதலீடு முடிவு குறித்து விளக்கம் தந்தார். இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வரும் ஓட்டெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மான விவாதத்தை ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டும் என்றால் முதலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தான் இன்று திமுக, திரிணமூல் காங்கிரசுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவும், திரிணமூல் காங்கிரசும் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் மக்களவையில் 282 வாக்குகள் கிடைக்கும். இவர்களின் வாக்கு கிடைக்காவிட்டால் 264 வாக்குகள் தான் கிடைக்கும், இது பெரும்பான்மையைவிட 8 ஓட்டுகள் குறைவாகும். இதனால் அரசே கவிழும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கட்சிகளுக்கும் தலா 18 எம்பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...