|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

ரம்மி ஆடுவது சூதாட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர்நீதிமன்றம் !


 ரம்மி ஆடுவது சூதாட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சட்டவிரோத சீட்டுக்களை விளையாடினால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரைச்சேர்ந்த மகாலட்சுமி கலாச்சார சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மகாலட்சுமி கலாசார சங்கத்தில் ரம்மி சீட்டு விளையாடியவர்களை பாண்டிபஜார் போலீசார் கைது செய்தனர், அவர்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை எதிர்த்து மகாலட்சுமி கலாச்சார சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது :சென்னை தியாகராயநகரில் 1981-ம் ஆண்டில் எங்களது சங்கம் தொடங்கப்பட்டது. எங்கள் சங்கத்தில் பலர் 13 சீட்டுக்கள் கொண்ட ரம்மி என்ற சீட்டு விளையாட்டை விளையாடுவார்கள். காசு வைத்தும் வைக்காமலும் இந்த விளையாட்டை உறுப்பினர்கள் ஆடுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த 10.8.11 அன்று எங்கள் சங்கத்தில் ரெய்டு நடத்திய பாண்டிபஜார் போலீசார், அப்போது மங்காத்தா என்ற சூதாட்டத்தை ஆடுவதாகக் கூறி 56 பேர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 178 பண டோக்கன்களையும் கைப்பற்றினர்.

திறமை வளர்க்கும் ரம்மி ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றத்தின் கீழ் வருவதல்ல. அது திறமையை வளர்க்கும் விளையாட்டு. 3 சீட்டுக்களை வைத்து மங்காத்தா விளையாடுவதுதான் சூதாட்டம். 13 சீட்டுக்களை வைத்து விளையாடும் பந்தயமாக பணம் கட்டியோ, கட்டாமலோ 'ரம்மி' விளையாடுவது சூதாட்டம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே எங்கள் சங்கத்தில் ரம்மி சீட்டு விளையாடுவதை தடுக்கும் விதமாக போலீசார் தலையிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது சூதாட்டம்தான் இதற்கு பதில் மனு தாக்கல் செய்த பாண்டிபஜார் போலீசார், மகாலட்சுமி கலாசார சங்கத்தில் சீட்டுக்கட்டை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். இவர்களிடம் இருந்து ரூ.6.75 லட்சம் சூதாட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

ரம்மி ஆடினால் தப்பில்லை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், ரம்மி என்பது, ஞாபகசக்தி, திறமை, சரியான நேரத்தில் சரியான சீட்டை இறக்கும் யுத்தி போன்ற பல திறமையான அம்சங்களை உள்ளடக்கிய ஆட்டம் என்று உச்சநீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் கூறுவதுபோல், அவர்கள் ரம்மி ஆட்டம்தான் ஆடியிருந்தால் அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை கொட்டிக் கொடுக்கும் மற்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களைப்போல், ரம்மி ஆட்டத்தை கருத முடியாது. ஆனால் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் விருந்தாளிகள், சீட்டை வைத்து சூதாட்டம் விளையாடியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ரம்மி விளையாட்டை தவிர, வேறு ஏதாவது சட்டவிரோத சீட்டு விளையாட்டு விளையாடப்பட்டாலோ, அது தொடர்பான தகவல்கள் வந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...