|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

தமிழக காவல்துறைக்கு 34 திட்டங்கள்...!


 தமிழக காவல்துறையை மேம்படுத்தவும்,அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் 34 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நேற்றுடன் முடிவடைந்த காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டின் இறுதியில் ஆற்றிய உரையின்போது இந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் அவரது பேச்சு:

காவல்துறை சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருமுயற்சி எடுத்துள்ளேன். நான் உங்களிடம் ஒழுங்கு, சட்டப்படி செயல்படுதல், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றுதல் ஆகியவற்றை எதிர்பார்க்கிறேன். தேவையில்லாமல் தடியடி பிரயோகம், துப்பாக்கிச்சூடு, லாக்கப் மரணம் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

போலீஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட நடத்தை மிகவும் முக்கியம். போலீசாரின் செயல்பாட்டிற்கும், அரசின் மதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதுதான் நிர்வாகத்தினுடைய செயல்பாட்டை மக்களுக்கு பிரதிபலிக்கும். தமிழ்நாடு போலீஸ் இன்னமும் சிறப்பாக செயல்பட்டு, இதர மாநில போலீசாருக்கு முன்மாதிரியாக திகழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
ஸ்டேஷனுக்கு வரும் பெண்கள் உட்கார சீட்; 
1. போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் குறிப்பாக பெண்கள் உட்கார வசதியாக தமிழ்நாட்டில் உள்ள 1492 போலீஸ் நிலையங்களிலும் ரூ.1 கோடி செலவில் தலா 10 சேர்கள் வழங்கப்படும். இவ்வாறு வழங்குவது நாட்டில் இதுவே முதல்முறை.

2. சென்னை நகரில் போக்குவரத்து மேலாண்மையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

3. தேவைப்படும் மாவட்டங்களுக்கு கூடுதல் ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். பழைய ரோந்து வாகனங்கள் மாற்றப்பட்டு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

4. கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.

5. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலும் புதிதாக அனைத்து மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்படும்.

செக் போஸ்ட்கள் அதிநவீனமாகும்: 
6. மாநில எல்லைகளில் உள்ள போலீஸ் வாகன சோதனை சாவடிகளில் குடிநீர் வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், விரைவில் தகவல் தொழில்நுட்பம், நவீன சாதனங்களுடன் ஒருங்கிணைந்த வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.

7. தஞ்சாவூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

8. அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆயுதப்படை வளாகங்கள் அமைக்கப்படும்.

திருப்பூருக்கு போலீஸ் கமிஷனர்:
9. அரியலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு 4 பிளட்டூன்கள் (60 போலீஸ்காரர்கள் கொண்ட படை) அனுமதிக்கப்படும்.

10. மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் பிரச்சினைகள், இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருப்பூரில் புதிதாக போலீஸ் ஆணையரகம் ஏற்படுத்தப்படும்.

11. கோவையில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், புதிதாக போக்குவரத்து பிரிவுக்கு தனியாக துணை ஆணையர் பதவிக்கு அனுமதி அளிக்கப்படும்.

12. பெரம்பலூர், வத்தலக்குண்டு, சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.

13. அனைத்து வணிக நிறுவனங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.

பந்தோபஸ்து போலீஸாருக்கு தங்குமிடங்கள்: 
14. போலீஸ் பந்தோபஸ்துக்கு செல்லும் போலீசாரின் வசதிக்காக 500 பேர் தங்கும் வகையிலான தங்குமிடம் கமுதியிலும், திருவண்ணாமலையிலும் கட்டப்படும். பெண் போலீசாருக்கு தங்குமிடம் தனியாக கட்டப்படும்.

மதுரை, கோவையிலும் இனி ஸ்பாட் பைன்: 
15. சென்னையைப் போல இதர 5 போலீஸ் ஆணையரகங்களிலும் ஸ்பாட் பைன் வசூலிக்கும் இ-செலான் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும், சோதனை அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த முறை கொண்டுவரப்படும்.

16. விழுப்புரத்திலும், திருவண்ணாமலையிலும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்காக விருந்தினர் இல்லங்கள் கட்டப்படும்.

17. தேனியில் நக்சலைட் தடுப்பு படை அமைக்கப்படும்.

18. போலீசாரின் பயிற்சி காலம் முன்பு இருந்ததைப் போல 7 மாதங்களாக மாற்றப்படும்.

19. போலீஸ் பாய்ஸ் கிளப் நிதி ஒதுக்கீடு ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும்.

20. போலீஸ் பாய்ஸ் கிளப் உறுப்பினர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிக்கட்டிடங்களை வகுப்பு நேரம் முடிந்த பிறகு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

21. அரியலூர், திருப்பூர், தர்மபுரியில் போலீஸ் பாய்ஸ் கிளப் தொடங்கப்படும்.

22. சாலை விபத்துகளில் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.25 ஆயிரம் ரூ.50 ஆயிரமாகவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

23. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும்.

24. கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்கப்படுவோரின் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.

25. கிராம கண்காணிப்பு குழுக்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக ரூ.2 கோடி அனுமதிக்கப்படும்.

26. போலீசாரின் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, விடுதிக் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

27. மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கும், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கும் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

28. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், நகர போலீஸ் அலுவலகங்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் ரூ.5 கோடி செலவில் ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.

29. திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுகள் தொடங்கப்படும்.

30. சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு ஒரு அறிவியல் அதிகாரியும், ஒரு கிரேடு-1 அறிவியல் உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்படும்.

துப்பாக்கிச் சுடுதலில் ரவுண்டு 50 ஆக அதிகரிப்பு: 
31. துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்படும் ரவுண்டுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்படும். மேலும், துப்பாக்கி பயிற்சி ஆண்டுக்கு 2 முறை அளிக்கப்படும்.

32. கமாண்டோ போலீஸ் பயிற்சியாளர்களுக்கு உரிய தங்குமிட வசதி செய்து தரப்படும்.

33. கமாண்டோ போலீசாரைப் போல, வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்க செய்யும் போலீசாருக்கும் இடர்படி, மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

34. வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் பயிற்சிக்கூடம் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும்.

நீங்கள் வைத்த கோரிக்கைகளை பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டேன். ஒருவேளை ஏதாவது நிறைவேற்றப்படவில்லை என்றால், அவை பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...