|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்கள்தான் காலம் கடந்து நிற்கும்'!


நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும் என தமிழக ஆளுநர் ரோசய்யா கூறினார்.  ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சம்மேளனம் சார்பில் பழம்பெரும் நடிகைகள் அஞ்சலிதேவி, செüகார் ஜானகி, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சரோஜாதேவி, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, காஞ்சனா, கே.ஆர்.விஜயா, ஜெயந்தி, வாணிஸ்ரீ ஆகிய 11 பழம்பெரும் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் மறைந்த பிரபல நடிகைகள் காஞ்சனமாலா, பானுமதி, கண்ணாம்பா, சாந்தகுமாரி, பத்மினி, புஷ்பவல்லி, எஸ்.வரலட்சுமி, ஸ்ரீரஞ்சனி, டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, சாவித்ரி ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட்டன. 

விருதுகளை வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாக வரும் 11.11.11 என்ற இந்த நாளில் தகுதியான 11 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கிய ஸ்ரீ கலா சுதா அமைப்புக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 11 பழம்பெரும் நடிகைகளில் வாணிஸ்ரீயால் மட்டும் விழாவுக்கு வர இயலவில்லை. ஆனால் பழம்பெரும் நடிகையும் இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளருமான சச்சு கலந்துகொண்டு அந்தக் குறையைப் போக்கிவிட்டார்.எந்தெந்த நடிகைக்கு எந்தெந்த நடிகையின் பெயரால் விருது கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என துல்லியமாகத் தேர்வு செய்து இந்த விருதுகளை வழங்கியுள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. ஏனென்றால் இந்த 11 நடிகைகளும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் தங்களுடைய அபாரமான நடிப்பாற்றலால் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்கள். 

இந்த நடிகைகள் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த திரையுலகுக்கு பொக்கிஷமாகத் திகழ்ந்தவர்கள். அவர்கள் நடித்த படங்களைக் குடும்பத்தோடு சென்று தைரியமாகப் பார்க்க முடியும். அவர்களுடைய வசன உச்சரிப்பு, நடிப்புத்திறன், பாடும் திறன், நடனத்திறன் உள்ளிட்டவை அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தவை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்த நடிகைகள் அனைவரும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்து நடித்த கதைகள்தான். ஆனால் இப்போது வரும் திரைப்படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா? சண்டை, பாடல் என தொடர்பில்லாமல் ஏதேதோ வருகின்றன. இதற்காக படம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் குற்றம் சொல்லவில்லை. ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக அவர்கள் படம் எடுக்கிறார்கள். அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்பதற்காக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பழைய படங்கள், காலத்தைக் கடந்து இன்றும் மக்கள் மனதில் இருப்பதற்குக் காரணம் அவை நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலித்ததால்தான். அந்தக் காலத்துப் படங்களில் மக்களை நல்வழிப்படுத்தும் பல கருத்துகள் இருக்கும். அது போன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றார் ரோசய்யா. விழாவில் கலந்துகொண்ட பழம்பெரும் நடிகைகள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...