|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

பெட்ரோலை விட, தண்ணீர் மிக அரிதான பொருளாக மாறி வருகிறது!


தற்போது எண்ணெய் வளத்தை அபகரிப்பதற்காக சண்டை நடப்பது போல், விரைவில் தண்ணீருக்காக சண்டையிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. நகர்ப்புறமயமாக்கல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேராபத்தை நன்கு உணர்ந்தவர் தான், அனுபம் மிஸ்ரா. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு போன்ற விஷயங்களுக்கு, முக்கியத்துவம் அளித்து, அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கல்வியை அடிப்படை உரிமையாக்கி, சட்டம் இயற்றியது போல், தண்ணீரையும் அடிப்படை உரிமையாக்க வேண்டுமென, இவர் வலியுறுத்தி வருகிறார்.கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் குடிநீர் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் எனக் கூறி வரும் மிஸ்ரா, இதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஆய்வு செய்து, தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கிணறு, குட்டை, ஏரி போன்றவற்றில் தண்ணீரை பாதுகாத்து வைப்பது எப்படி என்ற வழிமுறைகளையும் இவர் வலியுறுத்தி வருகிறார்.

நவீன தண்ணீர் மேலாண்மைத் திட்டத்தையும், இந்தியாவின் பழமையான தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமாக மிஸ்ரா செயல்பட்டு வருகிறார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று, தண்ணீர் பாதுகாப்புக்கான புதிய வழிமுறைகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், இவரது சேவையைப் பாராட்டி, ஜமன்லால் பஜாஜ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் வழிமுறைகளைக் கொண்டே, தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கலாம் என்பது தான், இவரது கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம்.

தண்ணீர் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். காந்தி அமைதி இயக்கத்தைச் சேர்ந்த இவர், அந்த இயக்கத்தின் சார்பில் "காந்தி மார்க்' என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தண்ணீர் பிரச்னைக்காக, அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வுகளை கண்டுபிடித்ததன் மூலம், இத்துறையில் இவர் புரட்சி செய்துள்ளார் என்று கூட கூறலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...