|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

நகை வடிவமைப்பு துறையில் எதிர்காலம்!

நாகரிக வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் பிறரை கவர்வதாக அமைய வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பொதுவாக பெண்களுக்கு தங்களை அலங்கரித்துக்கொள்வதில் தொடங்கி, தாங்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இது ஒருவிதத்தில் பெண்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, உடல் நலனை பேணுவதிலும் அக்கறையை ஏற்படுத்தும். மனித வாழ்வு நவீன மயமாகி வரும் சூழ்நிலையில் அழகுப் பொருட்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. பேஷன் நகை, ஹேண்ட்பேக், ஸ்கார்ப், பெல்ட், ஸ்டைலான காலணி, பெண்களுக்கான அழகூட்டப்பட்ட பைகள் போன்றவை அழகுப்பொருட்கள் வரிசையில் அணிவகுக்கின்றன. இவற்றில் முதன்மையாக விளங்குவது நகை. நகைகளை விரும்பாத பெண்கள் யாரும் கிடையாது. சந்தையில் புதிய டிசைனில் களமிறங்கும் நகைகளை வாங்குவதில் இந்திய பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். காலத்தால் அழியாத தொழி லாக நகை வடிவமைப்புத் துறை மாறிவிட்டது. விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றாலும் நகை விற்பனை குறைந்தபாடில்லை. அதனால் வேலைவாய்ப்பும் பிரகாசமாகி வருகிறது. தரமான, அழகான நகைகளை தயாரிப்பதில் வடிவமைப்பாளர்களின் பங்கு பிரதானமானது. தொடக்கத்தில் அனுபவம் சிந்தனைத்திறன், வாடிக்கையாளர்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு படிப்பு முறை அல்லாத தொழிலாக விளங்கிய இத்துறை தற்போது கல்வி சார்ந்த தொழிலாக மாறியுள்ளது. பள்ளிப் படிப்பு அல்லது பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு அழகுப்பொருட்கள் வடிவமைப்புத் துறையில் பல்வேறு டிப்ளமோ படிப்புகள் வந்துவிட்டன. 

கல்லூரி அல்லது பல்கலையில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. கலைநயமிக்க படைப்பாக்கத் திறனும், கற்பனை செய்து தெளிவாக வரையும் திறனும் இருந்தால்போதும் இத்துறையில் ஜொலிக்கலாம். நகை வடிவமைப்பில் ஒரு வெற்றிகரமான மனிதராக இருக்க, வாடிக்கையாளரின் தோற்றம் மற்றும் உருவ அம்சத்திற்கு ஏற்ப சிறந்த வடிவமைப்பைத் திட்டமிடும் வல்லமை இருக்க வேண்டும். பாரம்பரிய முறையிலான வடிவமைப்பாக இருந்தாலும், நவீன முறையிலான வடிவமைப்பாக இருந்தாலும் அல்லது இரண்டையும் கலந்த முறையாக இருந்தாலும் அந்த நகையை காலத்தின் ரசனைக்கேற்ப, அனைவரையும் ஈர்க்கும்படி வடிவமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.சூழலுக்கேற்ப மாறும் திறன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான முக்கியத் தேவையா கும். அதேசமயம் தொழிலின்பால் அதிக ஆர்வம், கடின உழைப்பு ஆகியவைதான் மூலதனம். ஆரம்ப நிலையில் ஒரு வடிவமைப்பாளர் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். போதிய அனுபவம் பெற்ற பிறகு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஜெம்மாலஜி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் நகை வடிவமைப்பு படிப்புகளையும் வழங்குகின்றன. சவுதி அரேபியா, குவைத், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் நகை வடிவமைப்பாளர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...