|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

ஆள் மாறாட்டம் செய்தோ, மோசடி ஆவணங்களைக் கொண்டோ பத்திரப் பதிவு செய்தால், கம்பி எண்ண வேண்டியிருக்கும். பத்திரப் பதிவுதுறை!


ள் மாறாட்டம் செய்தோ, மோசடி ஆவணங்களைக் கொண்டோ பத்திரப் பதிவு செய்தால், அவை ரத்து செய்யப்படுவது மட்டும் அல்லாமல், இனி கம்பி எண்ணவும் வேண்டியிருக்கும். பத்திரப் பதிவு அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் அதிகாரத்தை, தூசி தட்டி எடுத்துள்ளதால், துறையில் அனல் பறக்கிறது.எப்போதோ நடக்க வேண்டியது... முத்திரைத் தாளில் வாசகங்களை நிரப்பிவிட்டால், தலைமைச் செயலகத்தைக் கூட நம் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலை தான், காலாகாலமாக நிலவி வருகிறது. இதுவரை, இவ்வாறு சொத்தை இழந்து நிர்கதியாக நிற்பவர்கள், நீதிமன்றங்களே கதியாக இருந்தனர். இனி இந்த நிலைமை இல்லை. ஆள் மாறாட்டம், ஆவண மாற்றம் உள்ளிட்ட மோசடிகள் பற்றி, சார்பதிவாளர் அலுவலகங்களிலேயே புகார் தெரிவிக்கலாம். இது ஏதோ, இன்று நேற்று உருவாக்கப்பட்ட சட்டமல்ல, 1908ம் ஆண்டின் பத்திரப் பதிவு சட்டத்திலேயே, இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக, யாரும் இதைப் பயன்படுத்தவே இல்லை.தற்போது, பதிவுத் துறை தலைவராக பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதாப் யாதவ், "இச்சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்' என, அத்தனை சார்பதிவாளர்களுக்கும், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் 

கடந்த 3ம் தேதி அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆள் மாறாட்டம், தவறான உறுதிமொழி, பொய் வாக்குமூலம், போலியான ஆவணங்கள், வரைபடம், திட்ட வரைபடம் வழங்குதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவர்கள் மீது, கிரிமினல் புகார் கொடுக்கும் அதிகாரத்தை, பதிவாளர்களுக்கு, பதிவுத்துறைச் சட்டத்தின் 83வது பிரிவு வழங்குகிறது.இதை, அனைத்து சார்பதிவாளர்களும், இனி கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். இதன்படி, தன் சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி, உரிய ஆவணங்களுடன் ஒருவர், எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் புகார் தரலாம்.


தண்டனை என்ன? இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி கூறியதாவது: பதிவுத் துறையின் இந்த நடவடிக்கை மூலம், இத்தகைய மோசடி தொடர்பாக நீதிமன்றங்களுக்குச் செல்லும் புகார்களின் எண்ணிக்கை குறையும். நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளுக்கு ஆதாரமாக, மாவட்டப் பதிவாளர்களின் விசாரணை அறிக்கையும் அமையும். வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிபதிகளுக்கு ஏதுவாகவும் இருக்கும்.எப்போதோ பதியப்பட்ட ஆவணம் பற்றியும், இப்போது புகார் தெரிவிக்கலாம்.இப்பிரச்னை தொடர்பாக இதுவரை வந்த 73 புகார்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால், போலீஸ் விசாரணைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு, முறையானதா, முறைகேடானதா என்பதை மட்டுமே, மாவட்டப் பதிவாளர்கள் முடிவு செய்வர். மோசடிக்கான தண்டனை என்ன என்பதை, காவல் துறையும், நீதிமன்றமுமே முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...