|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

குடிசைகளில், 270 வாட்ஸ் திறன் மின் சாதனங்கள் பயன்படுத்த, சலுகை !


தமிழக அரசு வழங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் லேப்-டாப் பயன்பாட்டுக்கு, கூடுதல் மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கினாலும், அரசின் சார்பில், இலவச மின்சாரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலவச மின்சாரத்திற்கான தொகையை அரசு வழங்கினாலும், கட்டணத்தை மிகவும் குறைவாகவே கணக்கிட்டுத் தருகிறது. இதனால், மின் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு விளக்கு...இந்த நிலையில், "ஒரு விளக்கு' என்ற பெயரில், குடிசைகளுக்கு மட்டும், இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40 வாட்ஸ் திறனுள்ள ஒரே ஒரு பல்பு மட்டும், குடிசைகளில் பயன்படுத்தலாம். கடந்த தி.மு.க., ஆட்சியில், இலவசமாக "டிவி' கொடுத்ததால், "டிவி'யை பயன்படுத்துவதற்காக, கூடுதலாக 70 வாட்ஸ் திறன் அனுமதி தரப்பட்டது. இதனால், ஒரு விளக்குத் திட்டம், "ஒரு விளக்கு' மற்றும் ஒரு "டிவி' திட்டமானது.

தற்போது, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசில், இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. இவற்றையும், குடிசைவாசிகள் பயன்படுத்தும் வண்ணம், இலவச திட்டத்தின் சலுகையை அதிகரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மிக்சி, கிரைண்டர்,லேப்-டாப்இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றிற்கு, தலா 40 வாட்ஸ் திறன் என, கூடுதலாக 160 வாட்ஸ் வழங்கப்படும். இதனால், குடிசைகளில், 270 வாட்ஸ் திறன் மின் சாதனங்கள் பயன்படுத்த, சலுகை வழங்கப்படும். இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், சலுகைக்கான அனுமதி கேட்டு, மின் துறை விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தில், மொத்தம் 17.41 லட்சத்து 131 குடிசை இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கு, இலவச மின்சாரம் என்பதால், மீட்டர்களே கிடையாது. அதனால், இந்த குடிசைகளுக்கு இலவச மின்சார திறன் நிர்ணயிக்கப்பட்டாலும், மீட்டர்கள் இல்லாததால், குடிசை இணைப்புகளில் எவ்வளவு மின்சாரம் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். அளவே தெரியாமல்..."ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச மின்சாரத்தின் அளவையாவது குறித்து வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவே தெரியாமல், தோராயக்கணக்கில், ஆண்டுக்கு 120 ரூபாய் என, வாரியம் கணக்கிட்டு, அதற்கு அரசிடம் நடப்பாண்டு மானியமாக, 20.89 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதன்மூலம், ஒரு குடிசைக்கு, மாதம் 10 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால், 110 வாட்ஸ் திறன் பத்துமணி நேரம் பயன்படுத்துவதாக கணக்கிட்டால், தினமும் 1.1 யூனிட் வீதம், மாதம் 33 யூனிட் செலவாகும். இவற்றிற்கு, வீடுகளுக்கான குறைந்த கட்டணமான யூனிட்டிற்கு, 65 பைசா கணக்கிடும் போது, மாதம் 21.45 ரூபாய் கணக்காகிறது. ஆண்டுக்கு, 257.40 ரூபாய் செலவாகிறது.


அரசின் சார்பில், பாதிக்கும் குறைவான தொகையாக, மாதம் 120 ரூபாய் மட்டும், வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும், குடிசை இணைப்புகளுக்கான இலவச மின்சாரத்தால், வாரியத்திற்கு மாதம் ஒரு குடிசை இணைப்பிற்கு, 137.40 ரூபாய் வீதம், 17.41 லட்சத்து 131 குடிசைகளுக்கான மின் வினியோக கட்டணம், 23.92 கோடி ரூபாய் நஷ்டமாகிறது. பெரும்பாலான குடிசை இணைப்புகளில், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை விட, அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மீட்டர் வைத்தால் தான் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீட்டர் வைக்காமல், குறிப்பிட்ட அளவை நிர்ணயிப்பது, எந்த வித பயனையும் தராது என்பது, மின்துறை வட்டாரக் குமுறலாக உள்ளது.இதேபோல், லட்சக்கணக்கான இலவச இணைப்புகளிலிருந்து, வணிகப் பயன்பாடுகளுக்காகவும், ஆடம்பரச் செலவுகளுக்கும் மின்சாரம் திருடப்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், மின் துறையினரின் நீண்ட கால புலம்பலாக உள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...