|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

டேம் 999 படத்தை தடை செய்ய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை!

முல்லைப்பெரியாறு அணை உடைவதாகக் காட்டும் டேம் 999 என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். திரையிட்டால் அத்திரையங்கம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாகவும், அணை உடைத்து ஆயிரக்கணக்கான மக்கள் பலியாவர் என்றும் சித்தரித்து கேரள அரசு தொடர்ந்து பொய்பரப்பி பீதியை கிளப்பி விடுகிறது. அதன் உச்சக்கட்டமாக தற்போது டேம் 999 என்ற திரைப்படத்திற்கு நிதி வழங்கி தனியார் நிறுவனம் மூலம் தயாரித்து திரையிட உள்ளது. இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும், அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் பலியாவதும் போலவும் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஏற்கனவே வல்லுநர் குழு ஆய்வின் அடிப்படையில் அணை வலுவாக உள்ளதாக ஒருமுறைக்கு இருமுறை உச்சநீதிமனறம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இப்படம் திரையிடப்பட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும். நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கை இது கடுமையாக பாதிக்கும். மக்களிடையே அச்ச உணர்வை பரப்பி இந்தியாவில் வாழும் இருமொழி இனங்களுக்கிடையே பகைமையைத் தீவிரப்படுத்தும் செயலாகும். எனவே மத்தியஅரசு டேம் 999 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். தமிழக திரையரங்குகளில் இத்தமிழர் விரோத படத்தை திரையிட்டால் திரையிடப்படும் அரங்குகள் முன்பு தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி மறியல் போராட்டத்தை நடத்தும் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...