|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டம்!

பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, அடுத்த 10 ஆண்டுகளில், 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் இழப்பை ஈடு செய்து, மீண்டும் லாப பாதைக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்நிறுவனம் ரொக்க லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, நிறுவனம் லாப பாதைக்கு திரும்பும் நிலையில், மத்திய அரசு, இந்நிறுவனத்தை கண்காணித்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், குழு ஒன்றை அமைக்க உள்ளது. இக்குழுவில், மத்திய நிதி அமைச்சகத்தின் பிரதிநிதியும் இடம் பெறுவார். நிறுவனத்தின் செயல்பாடு, செலவினங்களை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.

ஏர் இந்தியா நிறுவனம், தற்போது, மொத்த இருக்கைகளில், 67 சதவீத பயணிகளுடன் இயங்கி வருகிறது. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 73 சதவீதம் என்றளவில் மேம்படுத்தப்படும். மேலும், நிறுவனத்தின் விமானங்கள், தற்போது, 71.7 சதவீத அளவிற்கு குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவையை வழங்கி வருகின்றன. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 90 சதவீதம் என்றளவில் உயர்த்தப்படும்.ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களின், மனித வளம் குறித்த கொள்கை திட்டம், மறு பரிசீலனை செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களில், தன் விருப்ப ஓய்வுத் திட்டம் குறித்தும் முடிவெடுக்கப்படும்.கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு, 20 ஆயிரத்து, 320 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, நிறுவனத்தின் இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு லாபம் ஈட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லாபம் ஈட்ட தொடங்கியவுடன், ஏர் இந்தியா தொடர்ந்து நன்கு செயல்படும் வகையில், சிறந்த கூட்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவும், அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...