|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 December, 2011

கருப்பு மற்றும் மஞ்சள் ஆடை அணிவது ஏன் ?

பழனி,  சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கருப்பு, காவி மற்றும் கருநீலம், பச்சை ஆகிய நிறங்களில் ஆடைகள் அணிகிறார்கள். ஆனால் கருப்பு ஆடை அணிவது தான் ஏற்றது. கருப்பு ஆடை அணிந்தால் தீங்கு விளைவிக்கக் கூடிய மிருகங்கள் நெருங்காது. இதற்கு அடுத்ததாக காவி உடையை தேர்வு செய்யலாம் இந்த ஆடை அணிந்தால் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது.  மஞ்சள் ஆடையின் மகிமை: சில ஊர்களில் கோயில் திருவிழா ஆரம்பித்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொள்வார்கள். அது பக்தியின் அடையாளம் தான் என்றாலும், அதனால் பல நன்மைகளும் இருக்கிறது. அதாவது, திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி இந்த மஞ்சள் ஆடைக்கு உண்டு. மேலும் மன ரீதியாக தெய்வ நம்பிக்கையையும் இந்த மஞ்சள் ஆடை அதிகரிக்கிறது.

நேர்முகத் தேர்வு வியூகங்கள்....


நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை. இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும். அத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.
முக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்,
* உங்களின் தோற்றம் 
* உங்களின் பேச்சு  
* உங்களின் நடத்தை

எனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.பொலிவான தோற்றம் நேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் பணி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஷேவ் செய்து, சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
நல்ல ஆடை Formal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.
ஆயத்தமாதல் நேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்! இன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.
கவனமாக பேசுங்கள் நேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
நம்பிக்கையுடன் பேசுங்கள் பேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.
நிதானமாக பேசுங்கள் படபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.
விவாதம் செய்யாதீர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
ஆர்வமாக செயல்படுங்கள் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.சிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

இதே நாள்...


  •  கத்தார் தேசிய தினம்
  •  நைஜர் குடியரசு தினம்(1958)
  •  நியூஜெர்ஸி,அமெரிக்காவின் 3வது மாநிலமாக இணைந்தது(1787)
  •  ஹச்.டி.எம்.எல்., 4.0 வெளியிடப்பட்டது(1997)
  •  லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்(1987)

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் ...

பொள்ளாச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மகள் மணிமேகலை. இவர் பொள்ளாச்சி காந்தி நகரை சேர்ந்த மாற்று திறனாளி ரத்தினகுமாரை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரத்தினகுமாரின் சொத்துக்களை தனது தம்பிகள் ராமன், லட்சுமணன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டு மணிமேகலை தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ரத்தினகுமார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணிமேகலை இதேபோல கடத்தூரை சேர்ந்த சதீஷ், மானூரை சேர்ந்த சசி ஆகியோரை திருமணம் செய்து மோசடி செய்திருப்பதும் தற்போது 4-வதாக குணசேகரன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மோசடி பெண் மணிமேகலை அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் வீரம்மாள், சகோதரி சித்ரா, தம்பிகள் ராமன், லட்சுமணன், பாஸ்கரன், குணசேகரன், சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் மணிமேகலை உள்பட 8 பேரும் பொள்ளாச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.தப்பி ஓடியவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மா துரை, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, சேலம் உள் ளிட்ட பகுதிகளுக்கு சென்று மோசடி பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர். மோசடி பெண்மணி மேகலை போலீசில் சிக்கினால்தான் மேலும் ஏதாவது வாலிபரை இதுபோல் மோசடி செய்து சொத்துக்களை பறித்துள்ளாரா என்ற விபரங்கள் தெரியவரும்.

சாலை ஓரம் பிறந்து சில மணித்துளிகளே ஆன ஆண் குழந்தை...


திருவண்ணாமலை அடுத்த ஆவூர் கிராமத்தின் சாலை ஓரம் பிறந்து சில மணித்துளிகளே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அதை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஒரு ஆந்திரா பெண்மணி பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்லி அதை கொண்டு வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கடந்த 10ந்தேதி சேர்த்தார். அக்குழந்தை தீவிர சிகிச்சை அளித்து இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ராவிடம் குழந்தையை கொண்டு வந்து தந்தனர். அதை அவர் தொட்டில் குழந்தை திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் தந்தார். அதை தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் வைத்து வளர்க்க தந்துள்ளனர். 

இது 3 மாதத்தில் 3வது குழந்தையாக தொட்டில் திட்டத்திற்க்கு வந்துள்ளது. ஒரு குழந்தை இறந்து போய்வுள்ளது. பச்சிலம் குழந்தைகள், எதுவும் அறிய இந்த உலகத்தை கண் திறந்து பார்க்கும் முன்பே வீசப்பட்டுள்ளது. உடல் சுகத்துக்காக தவறு செய்தவர்கள் அதை மறைக்கவே அ வறுமையில் வாடுபவர்கள் யார் இதை செய்திருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம். 

பொது நுழைவுத்தேர்வு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!


எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் ஆதரவு கட்சிக்காரர் போல செயல்பட்டு நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி மத்திய, மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகள் என அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாகும்.

நுழைவுத் தேர்வில் விலக்கு ஆனால் மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ள சில ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென பல மாநிலங்கள் கேட்டுக் கொண்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார்.

உச்சநீதிமன்றம் குட்டு முன்னதாக மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ஓராண்டு காலதாமதமாக 2013-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் எச்.எல்,தத்து, சி.கே. பிரசாத் ஆகியோர் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் கூறியவற்றைக் கேட்ட பின்புதான் பொது நுழைவுத் தேர்வுக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது 2012-13-ம் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் நீங்கள் ஓராண்டு தாமதமாக நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகக் கூறியுள்ளீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன? ஒன்று நாங்கள் உங்கள் மனுவை நிராகரிக்க வேண்டும். அல்லது நீங்களாகவே மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதே நல்லது.இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். உங்களது முடிவுகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு கட்சிக்காரராக நீதிமன்றம் செயல்பட முடியாது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழகான பெண்களை கொடுக்கிறீர்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கேட்டால் மட்டும் கொடுக்க மாட்டேன்கிறீர்களே? நடிகர் ஜெகன்.


சென்னையில் நடந்த வேட்டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெகன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனால் விழாவுக்கு வந்திருந்த மலையாள நடிகர், நடிகைகள் நெளியும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு நிலைமையின் இறுக்கத்தை தளர்த்தினார்.

மாதவன் நடிக்க, சமீரா ரெட்டி நாயகியாக நடிக்க, லிங்குசாமி இயக்க உருவாகியுள்ள படம் வேட்டை. இப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆர்யா, அமலா பால் ஆகியோரும் ஜோடி போட்டு நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியை நடிகர் ஜெகன் - ரம்யா (இருவரும் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள். ஜெகன் பல படங்களில் ஹீரோவுக்கு தோழனாக நடித்துள்ளார்.) இருவரும் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஜெகன், அமலா பாலைப் பார்த்து, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழகான பெண்களை கொடுக்கிறீர்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கேட்டால் மட்டும் கொடுக்க மாட்டேன்கிறீர்களே? என்று டைமிங்காக வாரினார்.

பார்த்ததில் பிடித்தது!


சென்னை, திருச்சியில் ரூ.50 கோடியில் உலகத் தரம் வாய்ந்த பூங்காக்கள்!


சிங்கப்பூரில் உள்ள சென்டோசா பூங்காவைப் போன்ற உலகத் தரம்வாய்ந்த சுற்றுலாப் பூங்காக்களை சென்னை மற்றும் திருச்சியில் ரூ.50 கோடி செலவில் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுற்றுலா என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும், ஒருமைப்பாட்டிற்கு உறுதுணையாகவும், இளமை காலத்தில் அறிவையும், முதுமைக் காலத்தில் அனுபவத்தையும், தரக்கூடியதாக விளங்குகிறது. பொருளாதார வளமைக்கான ஊக்க சக்தியாகவும், சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதோடு புதிய அனுபவங்களை சுற்றுலா அளிக்கிறது.வான் வழி, ரயில், தரை வழிப் போக்குவரத்து மற்றும் கடல் வழிப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், தொலைத் தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளிலும் பன்முக பொருளாதார வளர்ச்சிக்கான தாக்கத்தினை சுற்றுலா ஏற்படுத்துகிறது.

சுற்றுலா நேரடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளூர் மக்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. சேவைத் துறை என்ற நிலையிலிருந்து, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சாதனங்கள் உற்பத்தி போன்ற தொழில்களைப் போல, முன்னணி ஏற்றுமதி தொழிலாக உருவாகி வரும் சுற்றுலாத்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆக்கமும், ஊக்கமும், முன்னுரிமையும் அளித்து வருகிறது.உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவை எளிதாகவும், நல்லமுறையிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதன் மூலம், அவர்கள் பயணம் செய்த இடத்திற்கே மீண்டும் வருகை புரிவதற்கும், அவர்களின் நல்ல அனுபவத்தை பிறருக்கு பகிர்வதன் மூலம் கூடுதல் பயணிகள் வருகை புரிவதற்கும் வழிவகுக்கும்.

இந்த ஆண்டு சுற்றுலா பூங்கா மேம்பாடு, ஊரக சுற்றுலாத் தொகுப்பு மேம்பாடு, சுற்றுலா சுற்றுகளின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு, சாலை யோர சுற்றுலா வசதிகள், தமிழ்நாடு சுற்றுலாவின் தூய்மை கழிப்பிட விழிப்புணர்வு திட்டம், ஹெலிகாப்டர் சுற்றுலா, சொகுசுக் கப்பல் சுற்றுலா மற்றும் கம்பி வழி சுற்றுலா (ரோப் கார்) திட்டம் என 7 முக்கிய பரிமாணங்களுடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.சுற்றுலா பூங்காக்கள் அமைத்தல் என்ற திட்டத்தின்படி சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும், மற்றொன்று திருச்சியிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம், எல்லாவித பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒவ்வொன்றும் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ஊரக சுற்றுலா தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தனித்துவம் வாய்ந்த கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட, 5 முதல் 7 கிராமங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒரு சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கி, வர்த்தக யுக்தியாக மேம்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமி மலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள்; திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள்; கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள்; மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள்; கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள்; நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள், கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்று) காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று) மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக் குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாவுக்கு உகந்த தலங்கள் கண்டறியப்பட்டு, அவைகளை 450 கோடி ரூபாய் செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதற்கட்டமாக கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று 2011ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தென்னகச் சுற்றுலா சுற்றும் விரைவில் தொடங்கப்படும் ,திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும் பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு, தனியார் ஒட்டுநர் பயிற்சி மூலம் வாகன ஒட்டுநர் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோர சுற்றுலா வசதிகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும், தரம் வாய்ந்த தூய்மையான கழிப்பிடங்கள் மற்றும் ஓய்வறைகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும். இவையன்றி, சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுத்திடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைத்திடும் வகையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கம்பி வழிச் சுற்றுலா (ரோப் கார்) திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த புதிய சுற்றுலா திட்டங்கள் மூலம் தமிழகம் உலக சுற்றுலா வரைப்படத்தில் முக்கிய இடத்தை அடைவது மட்டுமல்லாமல், அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரவும் இது வழி வகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது நேத்து இது இன்னைக்கு கேரளா குறித்த கருத்தை வாபஸ் பெற்றார் சிதம்பரம்!

நாளைக்கு இதெல்லாம் நடக்காதமாதிரி உங்களிடம் ஒட்டு கேட்டுவரும் பணமும் குடுப்பான் நீங்க ஓட்டும் போடுவிங்க.

கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் 17-12-2011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-கேரள மக்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும், கவுரவம், கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது பேச்சில் கேட்டுக் கொண்டேன். முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சம் நியாயமானது அல்ல. அதே சமயம் அணையின் பாதுகாப்பு குறித்த இரு மாநில மக்களின் அச்சத்தை போக்குவதும் மத்திய அரசின் கடமை என்றும் குறிப்பிட்டேன். அணையின் பாதுகாப்பு என்பது கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் கவலை அளிக்ககூடிய விஷயம்தான். முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதுவரையில் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற பேச்சாளர்கள் சுட்டிக் காட்டியது போல நானும் அங்கு (கேரளாவில்) இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக கூறினேன். அந்த கருத்தை திரும்ப பெறுகிறேன். அப்படி நான் கூறியது தேவையற்ற கருத்து. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. இரண்டு மாநில மக்களின் ஒத்துழைப்பு, மற்றும் சகோதரத்துவம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.சென்னை காமராஜர் அரங்கில் நடந்த முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை ஒரு விளக்கம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், பிரவோம் இடைத் தேர்தலை மனதில் கொண்டே கேரள கட்சிகள் முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீவிரப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும்!


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் உள்ள மிகப் பெரிய மற்றும் மிக முக்கிய தமிழர் அமைப்புகளில் ஒன்று கனடா படைப்பாளிகள் கழகம். இந்த அமைப்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 


ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்த அமைப்பு தற்போது தமிழகம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சியினையில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் கனடாவைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தைத் தாண்டி சர்வதேச அமைப்பு ஒன்று தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை தங்கவேலு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருக்கு நெருக்கமானவர். தமிழீழத்தின் முக்கிய அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.



அறிக்கை விவரம்: ’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்! ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்பு லம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது.இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரர்கள் சொல்கிறார்கள்.



முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது!



இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது. முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.



கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன.இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள். தமிழ்நாடு சட்டசபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.



இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.



கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும். கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...