சென்னையைச் சேர்ந்த டிவி தொகுப்பாளர் ரோஷல் மரியா ராவ் இந்த ஆண்டின் பேண்டலூன் பெமினா சர்வதேச மிஸ் இந்தியா 2012 அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சர்வதேச இந்திய அழகிகள் தேர்வு போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் பேண்டலூன் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2012 அழகியாக வன்யா மிஷ்ராவும்,பேண்டலூன் பெமினா மிஸ் இந்தியா எர்த் 2012 அழகியாக பிராச்சி தேசாயும் தேர்வு செய்யப்பட்டனர்.பேண்டலூன் பெமினா சர்வதேச மிஸ் இந்தியா 2012 அழகியாக சென்னையின் ரோஷல் மரியா ராவ் தேர்வு செய்யப்பட்டார்.
ரோஷல் சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலையை சேர்ந்தவர். அவரது தந்தை டாக்டர் என்.வி.ராவ், தாய் வென்டி ராவ். ரோஷல் தற்போது சானல் யு.எப்.எக்ஸ். டி.வி. யில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.அழகி பட்டம் வென்றது குறித்து ரோஷல் கூறுகையில், "எனக்கு சிறு வயதிலேயே அழகு கலைகளில் நாட்டம் உண்டு. எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்ததும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டேன். எப்படியாவது அழகி பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு எனது உள்ளத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதற்காக கடுமையாக உழைத்தேன்.இப்போது இந்திய அழகி பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறேன். வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி சீனாவில் சர்வதேச அழகி போட்டி நடக்கிறது. அதிலும் சர்வதேச அழகி பட்டத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.