|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2013

நாளைய பூமி நமக்கும் இல்லை?

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகள் அழிக்கப்படுவது தொடர்கிறது. இதன் எதிர்விளைவாக, யானைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு இன்மை காரணமாக, அங்கிருந்து வெளிப்பட்ட காட்டுயானைகள், அதன் அருகிலிருக்கும் மலையடிவார பிரதேசங்களில் உள்ள வயல்வெளி மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் திரிய ஆரம்பித்தன. இதையடுத்து பயந்து போன மக்கள் புகார் செய்யவே... அவற்றை மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியடிக்கும் முயற்சியை மேற்கொண்டது வனத்துறை. அது தோல்வியில் முடியவே... மயக்க ஊசி போட்டு அத்தனை யானைகளையும் பிடித்தவர்கள், அவற்றை முதுமலையிலிருக்கும் யானைகள் வளர்ப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
 
இதையடுத்து, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இ.சேஷன் என்பவர், ''யானைகளை பாகன் மூலம் பழக்குகின்றனர். இதன் மூலம், வாழ்க்கை முழுவதும் நிரந்தரமாக அவை பாகனின் பிடிக்குள் வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. யானைகளின் சுதந்திரத்தில் மனிதன் தலையிடக் கூடாது. அவற்றை காட்டில் விடுவதற்கு உத்தரவிட வேண்டும்'' நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.இதற்கு, ''சுமார் ஆறு வாரங்களுக்கு கூண்டில் அடைத்து பாகனுடன் பழக்கப்படுத்துவோம். முன்னதாக நல்ல உணவு அளித்து, மிருக வைத்தியர்கள், நிபுணர்களின் உதவியோடு சோதனை மேற்கொள்வோம். பாகனுடன் பழகிய பிறகு மீண்டும் காட்டில் கொண்டுபோய் விடப்படும்'' என்று பதில் மனு தாக்கல் செய்தார் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லட்சுமி நாராயண்.
 
இதை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன், ''மக்கள் தொகை பெருக்கத்தினால், வனப்பகுதி நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படுகிறது. இதனால், யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது தடுக்கப்படுகிறது. யானைகள், ரயில்களில் அடிப்பட்டு இறப்பதும் நடக்கிறது. இது மிகப்பெரிய வேதனையான விஷயமாகும்.எனவே, பிடிப்பட்ட 6 யானைகள் பழக்கப்பட்டுவிட்டன என்பதையும், இனி அது காட்டுக்குள் செல்ல தகுதியாகி விட்டது என்பதையும் உறுதி செய்தபின்னர், வனத்துறை அதிகாரிகள் காலதாமதம் இல்லாமல் அவற்றை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்'' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.இந்தத் தீர்ப்பை கேட்டதும் சிரிப்பதா... அழுவதா என்று தெரியவில்லை.
 
காட்டுக்குள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும் யானைகளை, காட்டை விட்டு வெளியேற வைத்தது யார் குற்றம்? அதைச் செய்தது... பேராசை பிடித்த மனிதர்கள்தான். அந்தத் தவறுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதைவிட்டு, பாதிக்கப்பட்ட யானைகளுக்கே தண்டனை கொடுக்கிறீர்களே!பிடிபட்ட யானைகளை ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்கு கடத்துவதே தவறு. அவை தங்களின் வாழ்விடங்களில் நிரந்தமாக வசிக்கும் சூழலை ஏற்படுத்தாமல், வேறு ஒரு காட்டுக்கு கடத்தியதோடு மட்டுமல்லாமல், அங்கேயும் அவை சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்காமல், முகாமில் வைத்து யானைப்பாகன் மூலமாக பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
 
அங்கே வழக்கமான யானைகளின் உணவிலிருந்து மாறுபட்ட உணவுகளும் நிச்சயமாக வழங்கப்படும். அதுமட்டுமல்ல, வேளாவேளைக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். மருத்துவ கண்காணிப்பும் நிச்சயமாக இருக்கும். ஆனால், இப்படி சொகுசு வாழ்க்கைக்கு ஆறு வாரங்களுக்குப் பழக்கி விட்டு, அதன் பிறகு காட்டுக்குள் அனுப்பினால், அவற்றின் இயல்பு வாழ்க்கை எப்படி நீடிக்கும்.ஒரு ஏழையைப் பிடித்து, ஆறு வாரங்களுக்கு மெத்தை, ஏசி, கட்டில், ஆறுவேளைசோறு என்றெல்லாம் பழக்கப்படுத்திவிட்டு, அதற்குப்பிறகு பழையபடி பிளாட்பாரத்துக்கே போ என்று விரட்டி அடித்தால் அவனுடைய நிலை என்னவாக இருக்கும்?
 
அதிலும், மற்ற விலங்குகளை விட யானைகளுக்கு நினைவுத்திறன் அதிகம். அதனால், ஏற்கனவே, சாப்பிட்ட உணவு ருசி எப்போதும் அவற்றை வாட்டிக் கொண்டே இருக்கும். இப்படியிருக்க, ஆறு வாரங்களுக்கு முன்பு வரை ஒருவிதமான உணவு மற்றும் உபசரிப்பில் வாழ்ந்துவிட்டு, அது கிடைக்காதபோது அவற்றின் மனநிலையும் வெகுவாக பாதிக்கப்படும்.ஏற்கெனவே பெருமளவில் யானைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவையும் அழிவின் விழிம்பில்தான் இருக்கின்றன. இத்தகைய சூழலில், இருக்கின்ற யானைகளையாவது அவற்றின் வாழ்வியல் சூழலிலேயே வைத்துக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எடுக்காமல்... இப்படி கொஞ்சம்கூட யோசிக்காமல், அவற்றை நாட்டு சூழலுக்குப் பழக்கிவிட்டு பிறகு, காட்டில் விடுவது என்பது கொடுமையே!'நாங்கள் மனிதர்கள்... எங்களுக்கு மட்டுமே இந்த பூமி' என்கிற இறுமாப்புடன்  இருந்தால்... நாளைய பூமி நமக்கும் இல்லை என்பதை எப்போதுதான் உணரபோகிறோமோ!
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...