தமிழ் மொழியைக் கற்பதில், உலகளவில் ஆர்வம் பெருகி வருகிறது. குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைக் கற்பதில், தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனம், தமிழ் பண்பாடு, இலக்கியம், வரலாறு மற்றும் ஆசிய மொழிகளை ஒப்பிட்டு, உயர்நிலையில் ஆய்வு மேற்கொள்ளும், பன்னாட்டு நிறுவனமாகும். தமிழர்களின் கடல் கடந்த தொடர்பு குறித்த ஆய்வுக்கும் முன்னுரிமை தரப்படுகிறது. இந்நிறுவனத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், சீனா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர், தமிழ் மொழியைக் கற்பதோடு, தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் குறித்த ஆராய்ச்சிகளும் செய்து வருகின்றனர். மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் வரை, சென்னையில் தங்கி படிக்கின்றனர். இது தமிழ் மொழியின் மீதான ஆர்வம், உலகளவில் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
தற்போது, ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ் கற்று வரும், ஜப்பான் நாட்டின் ஓசாகாவை அடுத்த ககாவா ஊரைச் சேர்ந்த கோகி கூறுகையில், "நான் சீன மொழி படித்துள்ளேன். மொராக்கோவில் அரபி மொழி கற்றேன். தற்போது, தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கடந்த ஆறு மாதமாக தமிழ் படித்து வருகிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி. அது வாழும் மொழி. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில், தமிழக கலாசாரத்திற்கு தனித்தன்மை உள்ளது. தமிழ் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்து வருகிறேன்' என்றார். ஜப்பான் நாட்டின் கியூட்டோ மாநிலத்தைச் சேர்ந்த தொமாகா கூறுகையில், "சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவ, மாணவியருக்கு ஜப்பான் மொழி கற்றுத் தருவதற்காக, என் நாட்டு அரசின் சார்பாக இந்தியாவிற்கு வந்துள்ளேன். நான் இங்கு வந்தவுடன், தமிழ் மொழி குறித்தும், தமிழக பாரம்பரிய கலாசாரம், பண்பாடு, இலக்கியம் குறித்தும் கேட்டறிந்தேன். இதனால், எனக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது, தமிழ் படித்து வருகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருக்கப் போகிறேன். நான் எனது நாட்டிற்கு திரும்பும் போது, தூய தமிழில் எழுதி, படித்து, பேசும் அளவிற்கு தயாராகி விடுவேன்' என்றார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வெய்பென் கூறுகையில், "எனது தாய்மொழி ஆங்கிலம். இது தவிர மாண்டரின், இந்தி, கொஞ்சம் தமிழ் தெரியும். ஆசிய பண்பாடு மற்றும் தெற்காசிய பண்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மேலும், சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். அதற்காக, ஆசியவியல் நிறுவனம் மூலம் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. மாண்டரின் மொழிக்கும், தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சிங்கப்பூரில் இந்தி மற்றும் தமிழ் பேசக் கூடியவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் உள்ள வேறுபாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த மசகாசுகோனா என்பவர் கூறுகையில், "மொழியியல் துறையில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளேன். சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை பார்த்தேன். சிங்கப்பூரில் இருந்த போது, தமிழ் மொழியை கேட்டறிந்தேன். அங்குள்ள தமிழர்களுடன் பழகி, கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்தேன். ஆனால், அங்கு தமிழ் முறைப்படி படிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதையடுத்து, தமிழகத்திலுள்ள ஆசியவியல் நிறுவனம் குறித்து கேட்டறிந்தேன். அதன் பின், இங்கு வந்தேன். இங்கு, தமிழ்மொழி மூலம் ஜப்பானிய மொழி கற்றுத் தருகின்றனர். அதற்கான சிறப்பு கையேடுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது ஆசியவியல் நிறுவனத்தின் வாயிலாக, சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்-ஜப்பானிய மொழி உறவு குறித்து, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழ் மொழி பேச ஆசையாக இருந்தாலும், மிகவும் கடினமாக உள்ளது. எனது நோக்கம் ஜப்பானியர்களுக்கு தமிழ் மொழியும், தமிழர்களுக்கு ஜப்பான் நாட்டு மொழியும் கற்றுத் தரவேண்டும் என்பதும், இரு மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்து ஆராய்ச்சி செய்வதும் தான்.
வெளிநாட்டினர்களுக்கான தமிழ்ப் பயிற்சி போதித்து வரும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் சாமுவேல் கூறிய தாவது: கடந்த 1983ம் ஆண்டு முதல், இந்நிறுவனம் வெளிநாட்டினருக்கு தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு குறித்த வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை, 750க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், இங்கு தமிழ் பயின்றுள்ளனர். தொடக்க நிலையில் தமிழ் கற்க, அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் வந்து சென்றனர். தற்போது, ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியைக் கற்பதிலும், ஆராய்ச்சி மேற்கொள்வதிலும், ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிகம் தமிழாராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். ஜப்பானியர்கள், கொரிய நாட்டினர், சீன நாட்டினர் ஆகியோரும் தமிழாராய்ச்சியில் சிறப்பு ஆர்வம் காட்டுகின்றனர். ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், தற்போது, தமிழாராய்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். எனவே, கடல் கடந்த நாடுகளில், தமிழாராய்ச்சியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு, ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல் கூறினார்.