ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பொருளை ஒருவர், 300 ரூபாய்க்குவிற்பதாக கூறினால், அதையும் நம்பி ஓடோடிச் சென்று வாங்குகிறது ஒரு கூட்டம். 'முதலீட்டுக்கே மோசம் ஏற்படும் வகையில் நஷ்டத்துக்கு யாராவது வியாபாரம் செய்வார்களா' என, பலரும் யோசிப்பதில்லை. இது,ஏமாற்றுவோருக்கு வசதியாக போய்விடுகிறது. ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில், முதலில் அவரது ஆசையை துாண்டிவிட வேண்டும் என்ற விதியை, உணவுப் பொருள் கலப்படக்காரர்கள், மிககச்சிதமாக கடைபிடிக்கின்றனர். டீ துாளில் சாயம், மிளகாய் பொடியில் செங்கல் துாள், மிளகில் பப்பாளி விதை, சீரகத்தில் குதிரைச் சாணம் என, இன்னும் எத்தனையோ கலப்படங்களை செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். இவற்றை வாங்கி உண்ணும் மக்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு விழுந்து, ஆயுட்காலத்தையே குடித்துவிடுகிறது. சில உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள், 'கேன்சர்' உள்ளிட்ட கொடுநோய்களுக்கு காரணியாக அமைவதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இந்த சிறப்பு பக்கத்தின் நோக்கம். ஒவ்வொரு வகையான உணவுப் பொருளிலும், என்னென்ன பொருள் கலப்படம் செய்யப்படுகிறது, அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என,
கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறியதாவது:உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வோர், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காரணம், மனித குலத்துக்கு பெரும் தீங்கினை விளைவிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கலப்படங்களில் சிலவற்றை வேண்டுமானால், நாம் வீடுகளில் பரிசோதித்து, உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான கலப்படங்களை ஆய்வுக்கூடங்களில் தான் கண்டறிய முடியும். விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெய் கலக்கப்பட்ட கடலை எண்ணெயை பயன்படுத்தும்போது, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிகம் பயன்படுத்தும்போது, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. மசியவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்ட மற்றும் பழைய நெய்யின் நிறம் மாறாமல் இருக்க கலர் சேர்க்கப்பட்ட நெய்யை உட்கொண்டால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும். அன்றாட உணவில் சேர்க்கப்படும் பயறு வகைகளில் 'கேசரி டால்' என்ற விஷப்பயறு சேர்க்கப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை தாக்கி சிறிது சிறிதாக முடமாக்கி, படுத்த படுக்கையாக்கிவிடும். காரீயம் என்ற ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருளை பயன்படுத்தும் போது, ரத்தப்போக்கு ஏற்படுகிறது. வாசனைக்காக நாம் சேர்க்கும் இஞ்சி, மஞ்சள், மிளகாய்துாள், மிளகாய் துாள்களில் கலர்பொடி, செங்கல் பொடி கலப்பதால், வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு ஆளாக நேரிடும். மாட்டுச்சாணத்தை பொடியாக்கி கலக்கப்பட்ட, மல்லித்துாளை தொடர்ந்து பயன்படுத்தும்போது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.இவற்றை தரம் பிரித்து வாங்குவது என்பது சிரமம்தான் இருப்பினும், விலை குறைவான, தரமற்ற பொருளை நிராகரிப்பதே சிறந்த வழி. கோதுமையில் மணல், மண் துாசுகள், சுண்ணாம்பு கலக்கப்படுகின்றன; இவற்றை உட்கொள்ளும்போது, ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு ஜீரணக்கோளாறு ஏற்படுகிறது.எனவே, கோதுமை வாங்கும்போது தரம் பார்த்து வாங்கினாலும், அதை அப்படியே அரைக்காமல் துாசு நீக்கி நீரில் ஊறவைத்து, பின் காயவைத்து அரைத்து பயன்படுத்துவது நல்லது.உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கலர் சாயங்களாலும், அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவற்றாலும், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
டீத் துாள்:
கடைகளில் பயன்படுத்திய டீ துாள் கழிவை குறைந்த விலைக்கு வாங்கி, அதை வெயிலில் காயவைத்து, சிவப்பு நிறத்தை ஏற்றுகின்றனர். பின்னர், குறைந்த விலைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தரமற்ற மூன்றாம் தர டீ துாளை வாங்கி, இரண்டையும் கலக்கி, போலி லேபிள் கொண்ட பாக்கெட்களில் அடைத்து, டீக்கடை களுக்கு விற்றுவிடுகின்றனர். சில நேரங்களில், பிரபல பிராண்ட்கள் பெயரிலான லேபிள்களுடன் கூடிய போலி பாக்கெட்களில் அடைத்து, கடைகளுக்கும் விற்கின்றனர். கண்டறிவது எப்படி?
சாதாரண 'பில்டர் பேப்பரில்' சந்தேகத்துக்குரிய டீ துாளை கொட்டி, அதன் மீது சிறிது நீரை ஊற்றினால், நிறம் தனியே பிரிந்து அந்தபேப்பரில் பரவும்; இதுவே போலி டீ துாள்.
கடுகு:
சமையலறை அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது கடுகு. கசகசா வகையைச் சேர்ந்த'அர்ஜிமோன்' விதைகள், கடுகுடன் கலக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் தெரியாது. கண்டறிவது எப்படி? :
தரமான கடுகை, உள்ளங்கையில் வைத்து அழுத்தி தேய்த்தால், அதன் உட்புறம் மஞ்சளாக காட்சி தரும். போலி கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, விதைகளின்உட்புறம் வெள்ளையாக காட்சி தரும்.
மஞ்சள் துாள்:
மஞ்சள் துாளில், மாட்டுச்சாணப்பொடியும், 'மெட்டானில் எல்லோ' என்ற ரசாயனமும் கலக்கப்படுகின்றன.
கண்டறிவது எப்படி?
அரை ஸ்பூன் மஞ்சள்துாளை, 20 மி.லி., இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் 'ஹைட்ரோ குளோரிக்' அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் 'மெட்டானில் எல்லோ' கலந்திருப்பதை உறுதி செய்யலாம். பரிசோதனைக்கூடத்தில்தான் இதை கண்டுபிடிக்க முடியும்.
பச்சை பட்டாணி
பச்சை மிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிய, 'மாலசைட் கிரீன்' என்ற ரசாயனத்தில் முக்கி எடுக்கின்றனர். இதேபோல, உலர் பட்டாணியை ஊறவைத்து, 'மாலசைட் கிரீன்' கலந்து 'பிரஸ்'ஸாக இருப்பதுபோல் விற்கின்றனர்.
கண்டறிவது எப்படி?
கலப்பட பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை, வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால் அதில் 'மாலசைட் கிரீன்' கலந்திருப்பது உறுதியாகும்.
பட்டை
பட்டையில், கேசியா, சுருள் பட்டை என்ற இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகளும், நிறம் சேர்த்துக் கலக்கப்படுகின்றன.
கண்டறிவது எப்படி?
சந்தேகத்துக்குரிய பட்டைகளில் ஒன்றிரண்டை, கைகளில் வைத்து நன்றாக கசக்கினால், கையில் எவ்விதமான நிறமும் ஒட்டக்கூடாது. அவ்வாறு ஒட்டினால் அது கலப்படம்.
மல்லி
மாட்டுச் சாணம் கலக்கப்படுகிறது.
கண்டறிவது எப்படி?
கலப்பட மல்லியை தண்ணீரில் போட்டால்,மாட்டுச்சாணம் கரைந்து, நீரின் நிறத்தை மாற்றி, சாணத்தின் நாற்றம் எழும்.
மிளகு
பப்பாளி விதைகளைக் காயவைத்தால் மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில், 'மினரல் ஆயில்' எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது.
கண்டறிவது எப்படி?
மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில்,50 மி.லி., தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட்டால், மிளகு மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.
சீரகம்
சீரகத்தில், குதிரைச் சாணமும், அடுப்புக் கரியும் சேர்க்கப்படுகிறது.
கண்டறிவது எப்படி?
சீரகத்தைத் தண்ணீரில் போட்டால் சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது.
பால்
பால் 'சில்லிங்' சென்டருக்கு போகும் வரை, கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
கண்டறிவது எப்படி?
பாலையும், தண்ணீரையும், 10 மி.லி., அளவில் சமமாகக் கலக்கும்போது நுரை வந்தால், அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம்.
மிளகாய்த் துாள்
கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல் துாள் கலக்கின்றனர். அதுமட்டுமின்றி, கலப்பட மிளகாய்த் துாளுக்கு கவர்ச்சியான நிறத்தை ஏற்ற, புற்றுநோயை உண்டாக்கும் 'சூடான் டை' என்ற ரசாயனத்தை கலக்குகின்றனர்.
கண்டறிவது எப்படி?
ஒரு கிளாஸ் நீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் துாளைக் கலக்கும்போது, பளீர் சிவப்பு கலர் வெளிவந்தால் அதில் கலப்படம் உள்ளது.
தேன்
தேனில், வெல்லப்பாகு கலந்து நிறமேற்றுகின்றனர்.
கண்டறிவது எப்படி?
பஞ்சு எடுத்து, அதை தேனில் நனைத்து நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும்; அவ்வாறின்றி கரைந்தால்,அது வெல்லப்பாகு.
சமையல் எண்ணெய்
எண்ணெயை ரீபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயை பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம்.
நெய்
டால்டா மற்றும் வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கை கலக்கின்றனர்.
கண்டறிவது எப்படி?
வாணலியில் இட்டு சூடாக்கினால், நெய் கரைந்து, மற்ற சேர்மானங்கள் தனியாக நிற்கும்.
74 கலப்பட வழக்குகள்: ரூ. 15 லட்சம் அபராதம்
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவுப்பிரிவு) நியமன அலுவலர் விஜய் கூறியதாவது: உணவுப் பொருள் கலப்படம் குறித்து புகார் வந்ததும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அவ்வப்போது சோதனை நடத்துகிறோம். கலப்படம் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், பரிசோதனைக்கூட ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறோம். கலப்படம் உறுதியானால், விற்பனையாளருக்கு பொருளை மறு ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்குகிறோம்; 30 நாட்களுக்குள், அவர் மறு ஆய்வுக்கு பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மறு ஆய்விலும் கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் மீது, 'உணவு பாதுகாப்பு சட்டம்-2006'ன் கீழ் வழக்கு தொடரப்படும்; ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படும். விற்பனையாளர் மீதான புகார் விவரம், துறை அதிகாரிகள் நடத்திய சோதனை, ஆய்வு செய்த விபரம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தண்டனை, அபராதத் தொகை ஆகியவற்றைநீதிமன்றமே முடிவு செய்யும். கோவையில் கடந்த இரு ஆண்டுகளில் கலப்படப் பொருட்களின், 434 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; 74 பொருட்களில் கலப்படம் செய்திருப்பது உறுதிபடுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது; அபராதமாக, 15 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தாங்கள் வாங்கிய பொருளில் கலப்படம் இருப்பதாக சந்தேகித்தால், உணவு பாதுகாப்பு பிரிவில் புகார் தெரிவிக்கலாம். புகார் மனுவுடன், பொருள் வாங்கிய கடை, தேதி, பில் ஆகியவற்றை அளித்தால், சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தி மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்படும். சிறிய கடைகளில் பில் கொடுக்கப்படுவதில்லை என்பதால், மனுவில் தெரிவிக்கப்பட்ட புகார் அடிப்படையில், சோதனை நடத்தப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்; கடை முகவரி, கலப்பட பொருள் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக தெரிவிப்பது அவசியம். புகார்தாரருக்கு மனு பெற்றதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதுடன், 14 நாட்களில் அவர்களுக்கு ஆய்வின் முடிவுகளும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, விஜய் தெரிவித்தார்.
புகார் தெரிவிக்க...:
கோவை மாவட்ட உணவு
பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவுப்பிரிவு) அலுவலர், மாவட்ட
சுகாதாரத்துறை அலுவலக வளாகம், ரேஸ்கோர்ஸ், கோவை - 18.
தொலைபேசி எண்: 0422 - 222 0922.
இணைய தள முகவரி: doffsacbe@gmail.com.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும்
மருந்து நிர்வாகத்துறை(உணவுப்பிரிவு)
கமிஷனரிடம் புகார் தெரிவிக்க:
கமிஷனர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(உணவுப்பிரிவு), 359. அண்ணா சாலை, மருத்துவ பணிகள் இயக்குனரகம்
அலுவலக வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006.
தொலைபேசி எண்: 044 - 243 50 983.
ஹெல்ப் லைன்: 94440 42322.
இணைய தள முகவரி: commrfssa@gmail.com