சொன்னது:
இலங்கையில் போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இதே போல்தான் தமிழகத்திலும் திருவரங்கம்- ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூர்- ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர்- ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப் பகைவர்களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது. அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நன்றி கூறுகிறேன். அவர்களும் எங்களை வாழ்த்தும் பெருங்குணம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிரார்த்திக்கிறேன் என்றால் யாரை? அவர்களைத்தான் பிரார்த்திக்கிறேன்....
சொல்ல மறந்தது:
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஸ்ரீ என்பது மட்டுமே வடசொல் என்பதுதான்! கருணாவும், நிதியும், அன்பும் செல்வமுமாய் மாறியிருக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம் 'சுத்த’ தமிழ்ப் பெயர்தான் என்று தமிழர் தலைவனாகிய நான்... நான்... நானேதான் ஏற்றுக் கொண்டதால், அது தமிழ்ப் பெயர்தான் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறேன். தமிழர்களாகிய நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு 'நிதி’ அளித்தீர்களோ... அவ்வளவுக்கு எங்கள் குடும்பத்தில் இருந்து தமிழகத்துக்கு நாங்கள் எத்தனை 'நிதி’களைத் தந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்!
தயாவும் நிதியும், கலாவும் நிதியும், உதயமும் நிதியும், இவ்வளவு ஏன்... உதயமும் சூரியனும் கூட சுத்த சுத்த தமிழ்ப் பெயர்களே என்பதை எண்ணி எண்ணி நான் பூரிப்படைகிறேன். எத்தகைய இன அழிப்பு, மொழி அழிப்பு வேலைகளை மற்றவர்கள் செய்யாமல் நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்! பிரார்த்தனை என்கிற 'சுத்த’ தமிழ்ச் சொல்லைக் கூறி, வேண்டுகோள் என்ற 'அசுத்த’ வடமொழிச் சொல்லை நான் தவிர்த்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பாருங்கள்!
எப்படி எல்லாம் இன அழிப்பு, மொழி அழிப்பு வேலைகளைப் பிறர் செய்திடா வண்ணம் நான் விழித்திருந்து... விழி திறந்து... மொழிப் பணி ஆற்றியிருக்கிறேன் என்பதை எண்ணி எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்ளுங்கள்!