|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2012

மூலிகை அக்கரகாரம்


மூலிகை அக்கரகாரம் 
1) மூலிகையின் பெயர் -: அக்கரகாரம்.   
2) தாவரப்பெயர் -: ANACYCLUS PYRETHRUM.   
3) தாவரக்குடும்பம் -: COMPOSITAE.   
4) வேறு பெயர்கள் -: அக்கார்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோரி,அக்கரம் முதலியன.   5) தாவர அமைப்பு -: அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை 5 - 6 சிறந்தது. வட ஆப்பிரிக்க வரவான இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ் நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு உடையது. இலைகள் 15 செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்சியாகின்ற தருணத்தில் லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும். ஜெர்மனி, எகிப்து, கனடா, நாடுகளில் பயிர் செய்யப்படிகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. வேர்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோரின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின்,இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய், செசாமையின்I, II, III, IV, அமைடுகள் ஆகியவை குறைந்த அளவில் வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயதுடைய நாற்றை நடவேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வேர்களை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி பத்து நாட்கள் உலர்த்த வேண்டும். இது பயிரிடஏற்ற பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். அக்கரகாரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.   6) பயன் படும் பாகங்கள் -: வேர்கள் மட்டும்.   
7) மருத்துவப் பயன்கள் -: மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன.இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப்பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோயிக்கும் உடனடி நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. "அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால் உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய் கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம் கண்டால் பயந்தோடுங் காண்." அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.   உபயோகிக்கும் முறை - :இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம். ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம். இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும், இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும். அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து வதுண்டு.   தளகண்டாவிழ்தம் -: அக்கரகாரம், அதிமதுரம்,சுக்கு, சிற்றரத்தை,கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கோம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு கோப்பையில் வழித்துச் சேகரமு செய்யவும். அப்பால் முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில்தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளிலொவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனாலேற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும். இதற்குமேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித்தேனில் தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும் சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விழாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும் நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.   

அக்கரகார மெழுகு - :அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7,கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி,சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய்பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின்கொடுத்தல் நன்று. (இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும்.)

இறுதிப்போரில் தமிழர்கள் படுகொலை வேதனை...

இலங்கையில் விடுதலைப் புலிகள் ராணுவம் இடையேயான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. இந்த காட்சிகளை இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் லண்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. படுகொலை காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி இயக்குனர் கல்லம் மக்ரே தொகுத்து வெளியிட்டுள்ளார். அவர் லண்டன் பி.பி.சி. யின் சிங்கள சேவை பிரிவுக்கு பேட்டி அளித்துள்ளார் . அப்பேட்டியில்,    ‘’சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள புதிய ஆவணப்படம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தெளிவாக உறுதி செய்கிறது. 

இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த படங்கள் நிபுணர்களால் கவனமாக ஆய்வுக்குட் படுத்தப்பட்டு அது உண்மையானதே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களும் போராளிகளும் முறைப்படியாக திட்டமிட்ட அடிப்படையில் இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ராஜபக்சே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே ராணுவத்தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டுகிறது. இலங்கை ராணுவம் மிகமிக ஒழுக்கமானது. நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது என்றும் போரைத்தாமே வழி நடத்தியதாகவும் ஜனாதிபதி ராஜபக்சேயும் பாதுகாப்புச் செயலாளரும் தொடர்ச்சியாக கூறி வந்தனர். 

பாதுகாப்பு வளையங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இலங்கையின் உயர்மட்டக் கட்டளையின் பேரிலேயே போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியாக பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபையின் நிபுணர் குழு அறிக்கையும் விக்கிலீக்கில் வெளியான அமெரிக்காவின் குறிப்புகளும் ஐ.நா.வின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோன் ஹொம்ஸ்சின் செவ்வியும் உறுதி செய்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் அனைத்து உலக சட்டங்களின் கீழ் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியது ஐ.நா.வின் முதன்மையான கடமை, அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறு இழைத்து விட்டது. மேற்கத்திய நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைத் தடுக்க தவறியதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. அப்போதைய சூழலில் தீவிரவாதத்துக்கு எதிராக உலகளாவிய போர் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளின் பிரசாரத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு தமது செயல்பாட்டை நியாயப்படுத்தியது. 

பொது மக்களுக்கோ விடுதலைபுலிகளுக்கோ யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் தன்மையின் மூலம் அந்த இறப்பு ஒரு மோசமான படுகொலை என்பதை உறுதி செய்கிறது. ஐ.நா. பதுங்கு குழிகள் மீதும் அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை ராணுவம் மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் அதன் பின்னர் சற்று விலகி தாக்குதல்கள் தொடர்ந்தன. யுத்தத்தில் பொதுமக்களை கேடயமாக பாவித்தது உள்ளிட்ட விடுதலை புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தெளிவானவை ஆவணப்படுத்தப்பட்டவை அவற்றுக்கு சவால் விடமுடியாது’’ என்று கூறியுள்ளார்.

மாட்டுக்கறி மனித ஆயுளை குறைக்கும்

ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழிக்கறியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினசரி மாட்டுக்கறி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டுக்கறியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டுக்கறிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டுக்கறியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.76,933


உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று எனப் பெயரைப் பெற்றிருந்தாலும், இந்தியாவின் தனி நபர் வருவானம் இன்னும் சிலாகிக்கும் அளவுக்கு பெரிதாக உயரவில்லை. இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ 76933 (1527 டாலர்) மட்டுமே. இந்தியாவின் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை சற்று உயர்ந்தது என்றாலும், நடப்பு விலைவாசியோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும்.
ஜி 20 அமைப்பில் உள்ள நாடுகளில் மிகக் குறைந்த தனி நபர் வருவாய் கொண்ட நாடு என்ற 'அந்தஸ்து' இந்தியாவுக்கு மட்டும்தான். உலகின் பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் இருந்தும், தனிநபர் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லையே என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் தனி நபர் வருவாயில் 117வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது 94வது இடத்தைப் பெற்றுள்ளது. 1990-ல் சீனா 127வது இடத்திலிருந்தது. இப்போது அந்நாடு 74 வது இடத்தைப் பெற்றுள்ளது.
அதே நேரம், நாட்டின் மொத்த உற்பத்தி - ஜிடிபி- என்று பார்த்தால், உலகின் மற்ற நாடுகளைவிட நல்ல வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. 1980 முதல் 2010 வரை உலக ஜிடிபி 3.3 சதவீதம் அதிகரித்ததென்றால், இந்தியாவின் ஜிடிபி 6.2 சதவீத உயர்வு கண்டுள்ளது. உலக உற்பத்தி வீதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி. கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இந்தியாவை வெகுவாக பாதித்துள்ளதாகவும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 

அமெரிக்காவின் தலைமையில் அதன் ஆதரவு நாடுகள், இலங்கையை மண்டியிட வைக்குமா எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ்உலகம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைத் திரட்டும் முயற்சிக்காக 100 பிரதிநிதிகளை அமெரிக்கா இறக்கியுள்ளது. இவர்கள் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் ஆதரவையும் உறுதி செய்து வருகின்றனர்.

இந்த பிரமாண்ட பிரதிநிதிகள் குழு ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறதாம். இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக அரசுத் தரப்பே போராட்டங்களைத் தூண்டி வருவதாலும், அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் பேசி வருவதாலும், அமெரிக்கா கடும் கோபமடைந்திருப்பதாகவும், எனவே இலங்கையை மனித உரிமைகள் கவுன்சில் முன்பு தோலுரித்துக் காட்ட அது தீவிரமாகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் முன்பு அமெரிக்காவின் தலைமையில் அதன் ஆதரவு நாடுகள், இலங்கையை மண்டியிட வைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் உலகம் காத்திருக்கிறது. 

மிஞ்சிய இலங்கைத் தமிழர்கள்.


இதே நாள்...

  • உலக நுகர்வோர் தினம்
  •  தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
  •  முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே மெல்பேர்ணில் நடைபெற்றது(1877)
  •  முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
  •  சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)

ஒரு மாணவனும், மாணவியும்? இதெல்லாம் ஒரு குற்றமா?


ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மாணவனும், மாணவியும், கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன் வைத்திருந்ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்றனர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது.
ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மாணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. தனது உத்தரவில் சென்னை ஐகோர்ட் கூறியிருப்பதாவது: ஒரு நாகரீகமான மற்றும் முன்னேற்றமடைந்த சமூகத்தில், ஒரு மாணவனும், மாணவியும் சகஜமாகப் பழகுவதை, ஒரு கல்வி நிறுவனம், குற்றமாகப் பார்க்க முடியாது. இதுபோன்ற அம்சங்களை குற்றமாக பார்க்க ஆரம்பித்தால், அது, மாணவ, மாணவியரின் அன்றாட செயல்பாடுகளை பாதித்துவிடும்.
கல்வி நிறுவனங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில், நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், வெறுமனே, மொபைல் போன் வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும், அவர்களை நீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. கல்வி என்பது ஒவ்வொரு மாணவரின் அடிப்படை உரிமை. ஒரு தொழில்நுட்ப சாதனைத்தை வைத்திருந்தார்கள் என்பதற்காக, யாருக்கும் அந்த உரிமையை, யாரும் மறுக்க முடியாது.
அந்த 2 மாணவர்களும், தங்களது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க வாய்ப்பு தரப்படவில்லை. கருத்தை கேட்காமலேயே தண்டனை வழங்கியது முதல் குற்றம். மேலும், அந்த கல்வி நிறுவனத்தின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கையானது, சாதாரண மற்றும் இயற்கையான நீதியை மறுப்பதாகும். எனவே, அந்த மாணவர்களை உடனே கல்லூரியில் சேர்த்து, அவர்கள் தேர்வெழுதுவதற்கு பிரச்சினை ஏற்படாத வகையில், நீக்கம் செய்யப்பட்ட காலத்தையும் அவர்களின் வருகைப் பதிவாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மீண்டும் மமூத் யானை இனம் உருவாகிறது!

கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மமூத் என்ற இன ராட்சத யானை இருந்தது. மிகப்பெரிய உருவமும், நீண்டு சுருண்ட தந்தங்கள் மற்றும் உடலில் ரோமங் களுடனும் இருந்த அந்த யானை இனம் காலப்போக்கில் அழிந்து விட்டது.    அந்த யானை இனத்தை ரஷியா, மற்றும் தென் கொரியா விஞ்ஞானிகள் இணைந்து மீண்டும் உருவாக்க உள்ளனர். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதை தொடர்ந்து மமூத் யானை இனத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர். 

இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள்...


தமிழர்கள் என்றாலே இந்திய அரசு தொடர்ந்து அலட்சியம் திருமாவளவன்.


பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை முற்றிலும் தமிழினத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேரவை தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று அறிக்கையை கிழித்தெறிந்தார். அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திருமாவளவன் அப்போது அவர்,  ‘’குடியரசு தலைவரின் உரையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆனால், தலித் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு தொடர்பாக குறிப்பிடும்படியான கருத்துக்கள் ஏதும் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாமல் தலித்துகள் சிறுபான்மையினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய முடியாது. ஆகவே தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனிச்சட்டம் ஒன்றை இந்த அரசு இயற்றவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து குடியரசு தலைவரின் உரையில் ஈழத் தமிழர்கள் குறித்து ஒரே ஒரு வரிச்செய்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது. அங்கே ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் மீது சிங்களப்படையினர் அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். தமிழர்களின் தாயகத்தை சிங்கள ராணுவம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்களாக்கப்பட்டு கர்ப்பமடைந்துள்ளனர் என்கிற தகவல்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. இத்தகைய அரசு பயங்கரவாதத்தில் இருந்தும், கலாச்சார சீரழிவிலிருந்தும் தமிழ் மக்களை இந்திய அரசு பாதுகாத்திட வேண்டும். 

இன்னொரு நாட்டின் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதில்லை என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக இந்திய அரசு ஏற்கனவே உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பங்காளதேசத்தை உருவாக்கியுள்ளது. சீனாவுக்கு எதிராக தலாய்லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மட்டும் இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழர்கள் என்றாலே இந்திய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை சிக்கல், காவிரி நீர் சிக்கல், பாலாற்று அணை சிக்கல், தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்ற அனைத்திலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.தமிழினத்துக்கு எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.   இந்நிலையில் ஜெனிவா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காத நிலை எடுத்தாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக் கொண்டு நிறைவு செய்கிறேன்’’ என்று கூறினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...