பத்தாயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றினை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டு
வரலாற்று ஆராய்ச்சியாளர் டேவிட் பிராலே ( David Frawley ) என்பவர் தான்
பத்தாயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றினை முழுமையாக ஆய்வு செய்திருக்கிறேன்.
அந்த ஆய்வின் அவர் "கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இந்தியா ஒருமுறை கூட
அண்டை நாட்டிலுள்ள ஒரு அங்குல இடத்திற்குக் கூட ஆசைப்பட்டதில்லை ( India
never invaded any country even for an inch of land in Her past 10,000
years of history)"" என்று குறிப்பிட்டதைப் படிக்கும் போது பெருமையாகவும்,
மெய் சிலிர்ப்பாகவும் இருக்கிறது.
கடந்த
10000 ஆண்டுகளில் இந்தியா எப்படி அண்டை நாடுகளின் ஒரு அங்குல நிலத்திற்காக
ஆசைப்பட்டதில்லையோ - அண்டை நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிப்பது நியாயமற்றது
என்று எப்படி இந்தியா நினைத்ததோ - அதேப்போல் தான் இந்த தேசத்திற்கு
சொந்தமான நிலத்தை அபகரிப்பதை அனுமதிப்பதும் - மக்கள் தொகையில் அதிகமாகவுள்ள
இந்த தேசத்திற்கு சொந்தமான நிலத்தை வேற்று நாட்டுக்கு தானமாகவோ அல்லது
பரிசாகவோ கொடுப்பதும் கூடாத செயலாகும். நம் தேசத்திற்குச் சொந்தமான கச்சத் தீவு பிரச்சனையையும் அப்படித்தான் நாம் பார்க்கவேண்டும்.
பிரிட்டிஷாரின்
ஆவணங்களில், கச்சத் தீவு என்பது ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது
என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான
ஒன்பது தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று என்று தான் அந்த ஆவணம்
குறிப்பிடுகிறது. அப்படித் தான் கடந்த 1974 - ஆம் ஆண்டு வரையில் கச்சத்
தீவு இந்தியா வசம் தான் இருந்தது. அது வரையில் இந்தியாவிலிருந்து
கச்சத்தீவிலுள்ள அந்தோனியார் கோயிலுக்கு இந்திய மக்கள் சென்று வருவதும்,
இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை அங்கு சென்று உலர்த்துவதும்
வாடிக்கையாக வைத்திருந்தனர். இதற்கிடையில் 1956 - ஆம் ஆண்டில் இலங்கை
கடற்படை வீரர்களுக்கு கச்சத்தீவில் பயிற்சியளித்த போதே பெரும் பிரச்சனை
எழுந்தது. இருப்பினும் அன்றைய இந்தியப் பிரதமர் நேரு அந்த பிரச்னையை பெரிது
படுத்த விரும்பவில்லை.
இந்த சூழ்நிலையில் தான், 1974 - லில் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அணுகுண்டு சோதனை நடத்திய போது, ஐக்கிய நாடுகள்
சபையில் இந்திய நாட்டின் மீது கண்டனத் தீர்மானத்தை கொண்டுவர பாகிஸ்தான்
முயற்சி செய்தது. அப்போது ஐ. நா.- வில் முக்கிய பதவியை வகித்த இலங்கையின்
மூலம் அந்த கண்டனத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடனாகத்
தான் இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக
வழங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 1974,
1976 ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் எல்லையிலிருந்து
பிரிக்கப்பட்டு இலங்கையோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. நியாயமாகப்
பார்த்தால், இந்திய அரசு இத்தீவை இலங்கை அரசுக்குக் குத்தகைக்கு
விட்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கே சொந்தமாக்கியிருக்கக்கூடாது என்பது
தேசத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இத்தீவை
இலங்கைக்கு தாரைவார்க்கும் போது அதை எதிர்த்திருக்கவேண்டிய தமிழக அரசோ
கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர்
இன்றைய மு.கருணாநிதி தான் என்பது தான் வேடிக்கையானது.
அதுமட்டுமல்ல, கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று
வருவதும், இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும்
எப்போதும்போல, இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று
அன்றைய அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இது வெறும் எழுத்தில்
இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை. இந்திய மீனவர்கள் அங்கு சென்றால்
இலங்கைக் கடற்படை பயங்கர கெடுபிடிகளை செய்து வருவது என்பது இந்திய மக்களின்
மனதில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து
மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் உலர்த்தவும்கூட
அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்படுவதும்இந்திய மக்களுக்கு வேதனையை
அளித்து வருகிறது என்பது தான் உண்மை. இந்த நிலையிலும் கடந்த திமுக அரசு இந்தப் பிரச்சனையில் அக்கறைக் காட்டாமல், பிரதமருக்கு கடிதம் எழுதியே காலத்தை ஒட்டியது.
.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் தீவை இலங்கைக்கு
வழங்கியது செல்லாது என்று முந்தைய ஆட்சியின் போது, செல்வி.ஜெயலலிதா தொடுத்த
வழக்கில், தமிழக அரசு தன்னையும் சேர்த்துக்கொண்டு இருந்தாலும்கூட,
இந்நேரம் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் போனதற்கு, அரசியல்
கருத்துமாறுபாடு காரணமாக இந்த வழக்கை திமுக தலைமையிலான தமிழக அரசு கண்டும்
காணாமலும் இருந்துவிட்டது தான் காரணம். அதிலும் குறிப்பாக, மத்திய
கூட்டணி அரசில் மிக முக்கிய இடம்பெற்றிருந்தும்கூட, திமுக ஏனோ இதில் அதிக
அக்கறை காட்டவில்லை. இப்போது தமிழக அரசு, இந்த வழக்கில் தமிழகவருவாய்த் துறையையும்
சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதன் மூலம்,
ஏற்கெனவே உள்ள வழக்கு வலிமை பெறும் என்ற நம்பிக்கைப் பிறந்திருக்கிறது.