|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 October, 2011

இப்போதும் நான் போரிடத் தயார் அன்னா!


நான் ராணுவத்தில் இருந்தபோதே பாகிஸ்தானுடன் போரிட்டவன். அப்போது என்னுடன் இருந்தவர்கள் எல்லாம் வீர மரணம் அடைந்து விட்டார்கள். நான் மட்டும் உயிர் தப்பினேன். இப்போது போர் வந்தால் கூட நான் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போரிடத் தயார் என்று வீராவேசமாக கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.

காஷ்மீர் குறித்து அன்னா குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதையடுத்து டெல்லியில் அவரது அலுவலகத்தில் வைத்தே பூஷன் தாக்கப்பட்டார். அதேபோலே அரவிந்த் கேஜ்ரிவாலும் நேற்று தாக்கப்பட்டார். இந்த நிலையில் அன்னா ஹஸாரே, காஷ்மீர் குறித்த தனது கருத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் மெளன விரதம் இருந்து வருவதால் கடிதம் மூலம் தனது கருத்தை மக்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அன்னா கூறியுள்ளதாவது எனதருமை சகோதரிகளே, சகோதரர்களே, நமஸ்கார். சிலர் உண்மை நிலவரம் தெரியாமலேயே காஷ்மீர் குறித்து பொருத்தமில்லாத கருத்துக்களைப் பேசி வருகிறார்கள். நான் இந்திய ராணுவத்தில் இருந்தவன் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஒரு வீரனாக நான் தீவிரமாக செயல்பட்டவன் என்பதை அவர்கள் அறியத் தவறி விட்டார்கள். என்னுடன் எல்லைப் போரில் ஈடுபட்ட பலரும் வீர மரணத்தைத் தழுவி விட்டனர். ஆனால் மட்டும் ஆச்சரியகரமான வகையில் தப்பினேன். அப்போதுதான் நான் முடிவெடுத்தேன், எனது மீதமுள்ள வாழ்க்கையின் இறுதி வரை நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்று. பாகிஸ்தான் புல்லட் எனக்குப் பரிசாக விட்டுச் சென்ற தழும்பை இப்போதும் கூட எனது நெற்றியில் பார்க்கலாம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அது அப்படியேதான் இருக்கும் என்ற எனது ஆழமான கருத்துக்கு இது ஒன்றே சிறந்த சாட்சியாகும்.

இப்போதும் கூட பாகிஸ்தான் போர் வந்தால் இந்தியாவுக்காக போர்க்களம் செல்ல நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் சிலர் வெறுமனே பேச மட்டுமே செய்கிறார்கள், களத்தி்ல இறங்கி போரிடத் தெரியாதவர்கள் அவர்கள். இது துரதிர்ஷ்டவசமானது கே.பி. ஹஸாரே (அன்னா) என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.

தனது கடிதத்தில் காஷ்மீர் குறித்து பிரஷாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கள் தவறு என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஹஸாரே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஹஸாரே குழுவினருக்கும், பூஷனுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...