ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
09 January, 2012
என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறி?
சகோதரா மன்னித்துவிடு... தனுஷின் கொலவெறிப்பாட்டை அங்கீகரித்த ஒட்டு மொத்த தமிழர் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்... - தனுஷின் 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் அட்டகாசமான தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் 'என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறிடா?' என்ற பாட்டைக் கேட்ட பிறகு பலரும் உதிர்த்த கமெண்ட் இது! நாடே தனுஷின் கொலவெறி பற்றி பேசிக் கொண்டிருக்க, மொழி ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது இந்தப் பாடல்.
இந்தப் பாட்டைக் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து எஸ் ஜே ஸ்டாலின் உருவாக்கியுள்ள 'கொலைவெறிப் பாடலுக்கு’ அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏக வரவேற்பு. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலை உருவாக்கிய ஸ்டாலினை பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர். 'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் பப்பா பப்பா என பாடிக் கொண்டிருக்கும் தனுஷை 'தப்பு தம்பி தப்பு' என தலையில் குட்டுவது போல அமைந்துள்ளன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.30 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி 1.70 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள பாடல் இது. யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்தப் பாடலில் ஈழத் தமிழர்களின் அடையாளங்கள், மண் சார்ந்த நினைவூட்டல்கள் அழகாக இடம்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு.
'கொலவெறிடா - யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப் பாடலின் வரிகள் முழுமையாக:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
தமிழ்க் கொலையாளிகளுக்கு இதைவிட ஒரு வன்மையான கண்டனத்தை யாரும் சொல்லிவிட முடியாது!
குழந்தைங்க ஆக்டிவா இருந்தா நல்ல படிப்பாங்க!
துறு துறு வென ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள், கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள் என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக நேரம் குழந்தைகள் விளையாடினால் அவர்களை தடுக்க வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.குழந்தைகளின் விளையாட்டுத் திறனுக்கும், கல்விக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நெதர்லாந்தில் உள்ள வியு யுனிவர்சிட்டி மெடிகல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் அமிகா சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 6 முதல் 18 வயதுக்குட்பட்ட வயதினரை உள்ளடக்கிய இந்த ஆய்வுகள் 53 முதல் 12,000 பேர் இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் இயக்கத்துக்கும் கல்வித் திறனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
மூளைக்கு ஆக்ஸிஜன் அதிகம் விளையாடும்போது உடல் உறுப்புகள் இயங்கும். இதனால் அதிகப்படியான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோர்பைன்பிரின் மற்றும் எண்டோர்பைன்ஸ் அளவு அதிகரித்து மூளை சுறுசுறுப்படைகிறது.
இதன்மூலம் புதிய நரம்பு செல்கள் உண்டாவதால் கல்வியில் சிறந்து விளங்க காரணமாகிறது. எப்போதும் துறுதுறுவென ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களைவிட படிப்பில் சிறந்து விளங்குவது தெரியவந்தது. உடற்பயிற்சியும் இதுவிஷயத்தில் பலன் அளிக்கும். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவில் ஏற்கனவே நடத்தப்பட்ட 10 ஆய்வுகள் மற்றும் கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட தலா 1 ஆய்வு முடிவுகளையும் இந்த ஆய்வாளர் ஆராய்ந்ததில் இந்த முடிவு.
2011ல் கலக்கிய ஆங்கிரி பேர்ட்ஸ்...
எந்த நேரமும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கிய பொழுது போக்கே கேம்ஸ் விளையாடுவது தான். இந்த வசதியை கம்ப்யூட்டரிலும், மொபைல் போன்களிலும் எளிதாக பெறலாம். 2011-ஆம் ஆண்டு அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற கேம் தான்.
பல இளைஞர்களாலும், சிறியவர்களாலும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு என்ற பெருமையை இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் பெற்றுள்ளது. இந்த கேம் விதவிதமான ப்ளாட்ஃபார்மில் இருந்து 500 மில்லியன் தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக, நவம்பர் மாதம் ரோவியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ரோவியோ நிறுவனம் தான் ஆங்கிரி பேர்ட்ஸ் வீடியோ கேமை உருவாக்கியது.
2011 ஆண்டில் டாப் 10 கேம் அப்ளிக்கேஷன்களில் ஃப்ரூட் நின்ஜா, ஆங்கிரி பேர்ட்ஸ், கட் த ரோப், டைனி விங்ஸ் போன்ற விளையாட்டுகள் இடம் பிடித்து உள்ளது. அமேசான் ஆப்ஸ்டோர், ஆப்பிள் ஆப்ஸ்டோர், ஆன்ட்ராய்டு மார்கெட், பிளாக்பெர்ரி ஆப்ஸ்வேர்ல்டு, விண்டோஸ் போன்-7 மார்கெட், ஒவி ஸ்டோர் போன்ற இடங்களிலும் இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் அதிகம் டவுன்லோட் செய்யப்படுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதே போல் உதாரணத்திற்கு இன்னொரு விளையாட்டை சொல்ல வேண்டும் என்றால் டாக்கிங் டாம் கேட். இது அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது யார் என்ன பேசினாலும் அதை ஒரு பூனை பொம்மை திருப்பி பேசுகிறது. இந்த டாக்கிங் டாம் பல பேரை கவர்ந்து இருக்கிறது. இந்த டாக்கிங் டாம் கேட் அனிமேஷன் பூனைகுட்டியை காட்டினால் நிறைய முதியவர்களும் கூட இதனுடன் பேச ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கு மனோ ரீதியாக இன்னொரு காரணமும் சொல்லலாம். பொதுவாக வயோதிகர்களுடன் யாரும் அதிகம் பேசுவது இல்லை. இதனால் பேசியவுடன் திருப்பி பேசும் இந்த டாக்கிங் டாம் கேட் அனிமேஷன் பூனைகுட்டியிடன் முதியவர்கள் அதிகம் சிரித்து பேசுகின்றனர். கம்ப்யூட்டர்கள் மனிதர்களை எந்திரமாக மாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது. இப்பொழுது உள்ள ஒரு உண்மை என்னவென்றால் எந்திரமாக திரியும் மனிதர்களை இது போன்ற கேம்கள் மனிதர்களாக மாற்றுகிறது என்று தாராளமாக கூறலாம்.
அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க!
கறுப்புப் பணம் சம்பந்தப்பட்ட கணக்கு விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும், யாராவது வற்புறுத்திக் கேட்டாலும் சொல்லவே கூடாது என்றும் வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். தேசிய அவமானம். ஆனால் இதனை சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பலரே பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது குறித்து பல காலமாகப் பேசப்பட்டாலும், எந்த அரசும் இந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை.
இப்போது கறுப்புப் பணம் குறித்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டதால் உஷாராகிவிட்ட பலர், பணத்தை இடம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ரகசிய வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்றுள்ளது. லிச்டென்ஸ்டீனில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்து வருமான வரித்துறையின் உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) பெற்றுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து 9,900 தகவல்கள், ஆவணங்களைப் பெற்றுள்ளது. இந்த பெயர் பட்டியலின் ரகசியத்தை பாதுகாப்பதில் சி.பி.டி.டி. மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
ஒருவேளை இந்தப் பெயர்ப் பட்டியல் வெளியாகிவிட்டால், வெளிநாடுகள், கறுப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதை நிறுத்தி விடும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முன்வராது என்றும் சி.பி.டி.டி. கூறி வருகிறது. இந்த பெயர் பட்டியல், ஏற்கனவே கொச்சி, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வருமான வரித்துறை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், இந்த பெயர் பட்டியலைக் கேட்டு வருகின்றன.
சொல்லவே சொல்லாதீங்க... அப்படி கேட்கும் அரசுத் துறைகளிடம் எழுத்துமூலம் உறுதிமொழி பெற்ற பிறகே பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. உத்தரவிட்டுள்ளது. 'பெயர் பட்டியலை வரிவசூலுக்காகவோ அல்லது வரிஏய்ப்பு விசாரணைக்காகவோ மட்டுமே பயன்படுத்துவோம்' என்று எழுதி கையெழுத்து பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு இந்த பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது இவர்களை கைது செய்யவோ, இவர்கள் பற்றி செய்தி வெளியிடவோ கூடாது.
மேலும், இந்த பெயர் பட்டியல், எந்த அதிகாரி பெயரில் பெறப்படுகிறதோ, அவரே இந்த பட்டியலை ரகசியமாக பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், எத்தகைய சோதனையிலும் இந்தப் பட்டியல் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்றும் சி.பி.டி.டி. கூறியுள்ளது. பெயர் பட்டியலை கேட்டு வாங்கும் அரசு விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மானத்தை இத்தனை அக்கறையோடு காக்கும் அரசு, உள்நாட்டில் வரி செலுத்தாதவரிடத்திலும் இதே கரிசனம், கவனம், ரகசியக் காப்பைக் காட்டுமா?
புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை!
விடுதலைப் புலிகளின் ஸ்டாம்புகள் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொண்ட ஸ்டாம்புகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு ஸ்டாம்பும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.ஆனால், இது தொடர்பான சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் தொடர்பான அடையாளங்களுடன் கூடிய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று பிரான்ஸ் தபால்துறைக்கு இலங்கை தபால்துறை கோரிக்கை வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயல்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கப் போதில்லை என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
மாமியார் பெயரில் 550 ஏக்கர், தங்கச்சி பெயரில் 40 கோடியில் மாளிகை, அக்கா பெயரில் சொத்துக்கள்- ராமதாஸ்!
தமிழ், தமிழர் என்று பேசிக் கொண்டு எங்கு தனது தோட்டம், அலுவலகம், மக்கள் டிவி ஆகியவற்றில் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும்தான் வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் என்று வாங்கிக் குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன். விழுப்புரத்தில் நடந்த இளம்புயல் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில் டாக்டர் ராமதாஸை கடுமையாக சாடிப் பேசினார். தமிழ், தமிழர் என்று வசனம் பேசிக் கொண்டு மலையாளிகளையும், தெலுங்கர்களையும்தான் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் ஆதரித்து, வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அப்போது குற்றம் சாட்டினார் வேல்முருகன்.
அவர் பேசுகையில், பாமகவின் வளர்ச்சிக்கு 21 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களில் 20 பேர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த குடும்பங்கள் வாழ வழியின்றி தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றபோது, நான் என்ன கொட்டியா வைத்திருக்கிறேன், ஏன் நாயைப்போல் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்றார். உங்கள் மகன் மந்திரியாக, உறவினர்கள் எம்.எல்.ஏ.க்களாக உயிரை இழந்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ததுண்டா, உங்களால் அமைச்சராக்கப்பட்டவர்களால் இந்த மக்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு வழங்கியதுண்டா. அவரது எடுபிடிகள், நண்பர்கள், அன்புமணி ஆகியோர் அமைச்சர்களாவதற்கு தியாகம் செய்த தியாகிகளுக்கும், சமூகத்தினருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அவர்களது, பினாமிகளை அமைச்சர்களாக்கி சம்பாதித்தனர்
பேராசிரியர் தீரன் 1996-ல் சட்டப்பேரவையில் வாதாடி அந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும் பெற்றுத்தந்தார். பின்னால் வந்த அரசு அதை நிறுத்தியபோது இவர்கள் கேட்டதுண்டா. நாங்கள் போராட முயன்றதை ராமதாஸ் தடுத்தார். நாங்கள் அண்டா, குண்டாவை வைத்து, காணி நிலங்களை விற்று, கல்வி அறக்கட்டளையை உருவாக்கினோம்.இந்த சமுதாயத்தில் எத்தனையோ தியாகிகள் இருக்கும்போது, அந்த கல்வி நிறுவனத்திற்கு உங்கள் மனைவி சரஸ்வதி பெயரை வைத்தது ஏன். நீங்கள் நடத்தும் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் உண்டா. ஏன் ஒரு தமிழ்நாட்டு தமிழன் கூட இல்லையே மக்கள் டிவியிலும் அவர்கள் குடும்பத்தினரே உள்ளனர். மலையாளி, தெலுங்கர்கள் தான் நிர்வாகிகளாக, ஆசிரியர்களாக உள்ளனர். தைலாபுரம் பயிற்சி பட்டறை இயக்குனரும் மலையாளிதான். வாயில்லா பூச்சிகள் தான் அவரிடம் உள்ளனர்
வன்னியர்களிடம் நிதி திரட்டி கட்டிய பல்கலை., யில் யாருக்காவது வேலை கொடுத்தாரா. அவர் குடும்பத்தினர் டிரஸ்ட் நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநபராக இருந்த கோவிந்தசாமியும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் உள்ளன. தியாகிகளுக்கு 10 லட்சத்தில் வீடு கட்டச் சொன்னேன், கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைக்க கேள்வி கேட்டேன். பதில் கூறவில்லை. கோடிகள் வந்தது குறித்த புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளது. லாபத்திற்காக கட்சி நடத்துகின்றார்.
இந்த தேர்தலுக்கு கூட கருணாநிதியிடம் ராமதாஸ் குடும்பத்தினர் பெட்டி வாங்கியுள்ளனர். திண்டிவனம் வழக்கில் சி.பி.ஐ., உண்மை கொலையாளிகளை விசாரிக்க வேண்டும் டாஸ்மாக், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம், பின்னர் பெட்டி வாங்கிக் கொண்டு முடித்துக் கொள்வது. பவர் கார்ப்பரேஷனிடம் கோடிகளை வாங்கிக் கொண்டு ராமதாஸ் போராட்டத்தைப் பின் வாங்கினார். ஈழத் தமிழர் பிரச்னையின் போது அன்புமணியின் பதவிக்காக கூட்டணியை விட்டுவெளியேறவில்லை. அதை நான் சுட்டிக் காட்டியதை ராமதாஸ் ஏற்கவில்லை என்றார் வேல்முருகன்.
கை குலுக்கும் பழக்கம் குரங்குகளிடமிருந்து வந்ததா ?
ஷேக் ஹாண்ட் கொடுக்கும் பழக்கம் மேல்நாட்டுக்காரர்களிடம் இருந்து இன்று உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை டிவிகளில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்கு தெரியுமா? ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை பாணிக்ரஹணம் என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி க்ருஹயதாம் பாணினா பாணிம் என்றான். கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன் முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்களாம்.
கல்வித்துறையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டிய தருணம் இது டோரன்டோ கல்வியாளர் அனிதா சிங்!
கல்வித்துறையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டிய தருணம் இது என்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தின விழாவில் டோரன்டோ கல்வியாளர் அனிதா சிங் கூறினார். ஜெய்ப்பூரில் 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பாலின அடிப்படையில் கல்வியை அளித்தால், 50 சதவீத மனித சக்தி, முழுமையாக பயனடையும். பெண் கல்வியையும் ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் தெரிவித்தார். அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனிதா சிங், கணிதத்தை மாணவரும், மாணவியும் வெவ்வேறு வகைகளில் புரிந்து கொள்வார்கள். எனவே, அவரவர்க்கு ஏற்ற வகையில் கல்வியை கற்பித்தால் நிச்சயம் நல்ல பலனை அடையலாம். இந்தியாவில் பழமைவாதம், மூடநம்பிக்கை, கலாச்சாரம் போன்றவை நிறைந்துள்ளது. இவையே வளர்ந்த நாடுகளுக்கும் பொருளாதார அளவில் வரும் நாடான இந்தியாவிற்கும் இடையே உள்ள வித்தியாசமாகும். வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். கற்பித்தல் முறைகளில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும், ஒரே முறையில் அல்லாமல் பல்வேறு முறைகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் என்பது கிடைக்க வேண்டும் என்று கூறினார்.
அடிக்கடி ஆய்வு செய்தால் அணை பலவீனமாகிவிடும்!
"பலமாக இருக்கும் அணைப் பகுதியை பல முறை தொடர்ந்து ஆய்வு செய்தால், தானாகவே அணை பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது,'' என, முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றிய பொதுப்பணித் துறை இன்ஜினியர் (ஓய்வு) விஜயகுமார் கூறினார். தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த இன்ஜினியர்கள் சங்கம், கோவை கிளை சார்பில், "முல்லைப் பெரியாறு அணை - உண்மை நிலை' என்ற தலைப்பில் கருத்தரங்கு, கோவையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு பின், தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த இன்ஜினியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜயகுமார்(ஓய்வு) கூறியதாவது:பலமாக இருக்கும் அணைப் பகுதியை பல முறை தொடர்ந்து ஆய்வு செய்தால், தானாகவே அணை பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அணை குறித்து, "டேம் பிரேக் அனாலிசஸ்' செய்துள்ளேன். இதன்படி அணை உடைந்து தண்ணீர் வெளியேறினால், நிலத்தின் கீழ்மட்டத்தை நோக்கித்தான் பாயும். நிலத்தில் மேல்மட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
அகில இந்திய தமிழர்கள் மற்றும் மலையாளிகள் நல அமைப்பு தலைவர் அனுப் ஆண்டனி, பொதுச் செயலர் வினோத், பொருளாளர் அஜீத்குமார் ஆகியோர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. எங்கள் அமைப்பு சார்பில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். பொங்கல் பண்டிகை முடிந்ததும், கோவையிலுள்ள பல்வேறு மலையாளிகள் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்று, கேரள முதல்வரிடம் மீண்டும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவும், தமிழக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில் குறும்படம் திரையிடப்பட்டது.
நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைத்தால், அண்டை மாநிலங்களில் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை!
எனது பத்தாவது வயதில், 1941 ம் வருடம் என்னுடைய சகோதரர், முஸ்தபாகான் அவருடைய நண்பர், எம்.ஜி.ஆர்.மாணிக்கம் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்கள், இருவரும் கம்யூனிசம் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அங்கு, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கும். அங்கு, தான் என்னுடைய வாசிப்புப் பழக்கம் ஆரம்பமானது. குறிப்பாக, காரல்மார்க்ஸ், சுத்தானந்த பாரதியார் பற்றிய புத்தகங்கள் படித்தேன். அப்போது, ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தால், கற்பனைத் திறன் அதிகரிக்கும். நல்ல கற்பனைத் திறன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சமீபத்தில், இரண்டு புத்தகங்கள் படித்தேன். அவை என்னை வெகுவாக கவர்ந்தன. முதல் புத்தகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியர் தொகுத்த, "உழுதவன் கணக்கு' என்ற புத்தகம். இன்றைய விவசாயம் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
இயற்கை விவசாயத்தில் தொழில்நுட்ப மாற்றங்களை புகுத்த வேண்டும். துள்ளிய பண்ணைய பயிர் பாதுகாப்பு என்கிற நோக்கோடு, விவசாயத்தை அணுக ஆரம்பித்தால் விவசாயம் செழிக்கும். தனிமனித வருமானமும் பெருகும் என்கிற பல்வேறு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் இப்புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். மற்றொரு புத்தகம், காந்திகிராம பல்கலைக் கழக பேராசிரியர் சோம.ராமசாமி, "செயற்கைக்கோள் பார்வையில் தமிழக நதிகள்' என்ற புத்தகம். செயற்கைக்கோளின் வழியாக தமிழக நதிகளின் வழித் தடங்கள் பார்த்து புதுப்பாதை அமைப்பது குறித்தது. அதில், பல்வேறு அற்புதமான கருத்துக்கள் அமைந்துள்ளன. செயற்கைக்கோளின் வழியாக, தமிழகத்தில் உள்ள நதிகளின் பிறப்பிடம், செல்லும் வழித்தடம், சமவெளியின் அளவு, பாயும் வேகத்தின் அளவு போன்றவற்றை மையமாக வைத்து, நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைக்க வேண்டும்.
நீர்வழிச் சாலை அமைத்தால் தமிழகத்தில், 100 டி.எம்.சி., தண்ணீரை தேக்க முடியும். இதனால், எப்போதும் வளம் கொழிக்கும். அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு, தமிழக இளைஞர்கள் அவசியம் கை கொடுக்க வேண்டும். மற்ற சக்திகளை தாண்டிலும், இளைஞர்களின் சக்தி நாட்டையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது. இளைஞர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்; புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும்; உறக்கத்தின் போது வருவதல்ல கனவு; நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு; புத்தகம் கனவை வளர்க்கும்; கனவு படைப்பை வளர்க்கும்; படைப்பு சிந்தனையை வளர்க்கும்; சிந்தனை அறிவை வளர்க்கும்; அறிவு வளம் கொடுக்கும்; ஆதலால், அனைவரும் புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; படிக்கிற பழக்கம் அதிகரித்தால் வாழ்வு வளம் பெறும்.இவ்வாறு, அப்துல்கலாம் பேசினார்.
இதே நாள்...
- ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1951)
- நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது(1990)
- புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921)
- கனெக்டிகட், அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது(1788)
Subscribe to:
Posts (Atom)