சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, இனிமேல் புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே அளிக்க வேண்டுமே தவிர கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஒருவரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போதே சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், "முக்கிய பிரமுகர்கள் பலர் நேரடியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளிப்பது தவறான முன்னுதாரணம். புகார்கள் மீது நேரடியாக தலையிட கமிஷனர் அலுவலகத்திற்கு அதிகாரம் இல்லை. புகார்கள் மீது முதல்கட்டமாக 7 நாட்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் கோர்ட் தீர்ப்பு குறித்து டி.ஜி.பி., உள்துறை செயலரிடம் தெரிவிக்க வேண்டும்" என மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் எதிரொலியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், புதிய நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், "பொது மக்களிடம் இருந்து கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் பெறப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட வேண்டும். அங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர் அல்லது இணை கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுக்கலாம். அதன் பிறகும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கமிஷனர் அலுவலகத்தை நாடலாம்" என்று கூறப்பட்டுள்ளது.