நாம எங்க வாழ்கிறோம்ங்கிற உணர்வு நமக்குள்ளே கேள்விக்குறி? கண்ட நாயெல்லாம் சவடால் பேசுது!
இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவிலும், இந்திய வீரர்கள் இலங்கையிலும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். நமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது. ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா கூறியுள்ளார்.தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந் நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் நாங்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதையே விரும்புகிறோம் என்று இலங்கையின் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சரும் அதிபர் ராஜபக்சேவின் சகோதருமான பஷில் ராஜபக்சே கூறியுள்ளார்.
இந் நிலையில் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவும் இதையே கூறியுள்ளார். ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,யுத்தத்திற்குப் பின் தீவிரவாதத்தை முழுமையாக அகற்றியுள்ளோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது. இந்தியாவில் சுமார் 800 இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதே போன்று இந்திய ராணுவ வீரர்களும் இலங்கையில் குறிப்பிட்ட சில தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது. ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான் தமிழகம். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய பிரதேசம் சவாலாக அமையாது.தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம். எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படை அணியை சார்ந்த 45 உயர் அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்ல உள்ளனர். முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும் என்றார் ஜகத் ஜெயசூரியா.