ஒரு பணியிலிருந்து, இன்னொரு பணிக்கு மாறுவதென்பது பலவிதமான காரணகாரியங்களை உள்ளடக்கிய பெரிய மற்றும் சற்றே சிக்கலான செயல்பாடு எனலாம். ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டத்தில் பணி மாறுதுல் என்பது பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கை நிலை மாறுதல் ஒரு பணியில் சேரும்போது, நீங்கள் திருமணமாகாமல் தனியாளாகவோ அல்லது குடும்பப் பொறுப்பின்றியோ இருந்திருப்பீர்கள். ஆனால் பின்னாளில், உங்களின் திருமணம் காரணமாகவோ அல்லது பிற காரணங்களாலோ அல்லது அதிகமான போக்குவரத்து தேவைகளின் காரணமாகவோ உங்களுக்கு பொருளாதாரத் தேவைகள் அதிகரித்து, கூடுதல் சம்பளத்திற்காக பணி மாற வேண்டிய தேவை ஏற்படும்.
சூழ்நிலைகள் மாறுதல் நீங்கள் ஒரு பணியில் சேரும்போது, அந்நிறுவனத்தில் உங்களுக்கு நீடித்த வாய்ப்பு இருப்பது போலவும், உங்களுக்கு பணிநிலை வளர்ச்சி இருப்பது போலவும் தெரியும். ஆனால், நிறுவனத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார மாற்றம் ஆகியவை காரணமாக, பணி நிச்சயமின்மை சூழலை உணர்வீர்கள். எனவே, ஒத்துவரக்கூடிய இன்னொரு பணியை தேடி செல்லும் நிலைக்கு செல்வீர்கள். சலிப்பு பணியைத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகள் அல்லது சில குறிப்பிட்ட காலங்கள் வரை, அப்பணியில் கடினமாக உழைப்பீர்கள் மற்றும் அதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால், நெடுங்காலத்திற்கு அந்த மனோநிலையில் இருக்க முடியாது. பணி அழுத்தம் சிலவிதமான பணிகள் இயல்பிலேயே அதிக அழுத்தம் வாய்ந்ததாக இருக்கும். பணிக்கு சேர்ந்த புதிதில் அந்த அழுத்தத்தை நீங்கள் சமாளிப்பீர்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அழுத்தம் அதிகமாகி, உங்களின் மனம் மற்றும் உடல் நலன் பாதிக்கப்படும். எனவே, வேறு வழியின்றி, பணி மாறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்
சவால் குறைதல் ஒரு பணியானது, ஆரம்ப நிலையில், ஆர்வமூட்டுவதாகவும், சவால் நிறைந்ததாகவும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அதே பணியில் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு நீங்கள் உயரும்போது, சவால் குறைந்தும், அலுப்பூட்டுவதாகவும் அப்பணியானது மாறிவிடும். எனவே, இந்தக் காரணங்களாலும் நீங்கள் பணிமாறும் கட்டாயம் ஏற்படும். பணிமாற்ற வகைகள் பணி மாற்றம் என்பதும் ஒரு துடிப்பான செயல்பாடுதான். ஒரு பணி மாறுகையில், உங்களுக்கு இளமையான எண்ணம் ஏற்படுகிறது. பணி மாறுதலின் இயல்வு மற்றும் வகையானது, உங்களது தற்போதைய பணி அதிருப்தியின்மையை சார்ந்து அமைகிறது. பணி மாறுதலுக்கான சில அடிப்படை காரணங்கள் பற்றிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
* எனது சக ஊழியர்கள் மற்றும் எனது மேலதிகாரி ஆகியோர் விரும்பத்தக்கவர்கள். ஆனால் நான் செய்யும் வேலையானது சலிப்பான ஒன்று மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு பாராட்டோ, வெகுமதியோ கிடையாது.
* எனது பணியானது ஆர்வம் மிகுந்தது மற்றும் சாதனைகளுக்கான வெகுமதியும் கிடைக்கும். ஆனால் நான் வேலைசெய்யும் நிறுவனம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
* எனது பணியானது ஆர்வம் மிகுந்தது மற்றும் சாதனைகளுக்கான வெகுமதியும் கிடைக்கும். எனது சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரியும் நல்லவர்கள். ஆனால், இந்த வகையான பணியை செய்ய நான் பொருத்தமற்றவன் என்று நினைக்கிறேன்.
மேலேயுள்ள 3 விதமான கருத்துக்களும், 3 பணிமாற்ற நிலைகளைக் குறிக்கின்றன. முதல் நிலையில், உங்கள் மேலதிகாரியிடம், வேறுவிதமான பணியை தரும்படி கேட்கலாம். இரண்டாம் நிலையில், வேறு பணியிடத்திற்கு மாற்றும்படி கோரலாம் அல்லது ஒரேவிதமான பணியை இன்னொரு இடத்தில் தேடலாம். மூன்றாவது நிலையில், நீங்கள் முற்றிலும் வேறு பணியை தேட வேண்டிய தேவையிருக்கும். பொதுவாக மாற்றம் என்பது இயற்கையின் விதி. பென்ஜமின் பிராங்ளின் கூறுகையில், "உங்களது வாழ்க்கையில் மாற்றம் செய்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களது வாழ்வே நின்றுவிடும்" என்று கூறியுள்ளார். எதையும் மாற்றுவதற்கு முன்பாக, எச்சரிக்கையுடன், அனைத்து அம்சங்களையும் ஆராய வேண்டும். மாற்றம் என்பது பய உணர்வுடன் தொடர்புடையது. அழுத்தம் மற்றும் கவலை ஆகியவை இல்லாமல் எந்த மாற்றமும் நடைபெறாது. மாற்றத்திற்கு முன்பாக, உங்களின் குடும்பத்தினர், முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சகப் பணியாளர்கள் ஆகியோரிடம், உங்களது மாற்றம் குறித்து எடுத்துரைத்து, அவர்களின் ஆலோசனையையும், உதவியையும் பெறலாம். பணி மாறுதல் கீழ்கண்ட வகைகளிலும் வரலாம்,
* அதே நிறுவனத்திலோ அல்லது வேறு நிறுவனத்திலோ ஒரேவிதமான தன்மை கொண்ட வேறு பணியில் மாறிக்கொள்ளுதல்.
* ஒரே பணியிலேயே, இடத்தை மட்டுமே மாற்றிக்கொள்ளுதல்.
* பணியையே மாற்றிக்கொள்ளுதல்(உதாரணமாக, கார்பரேட் பணியிலிருந்து ஆசிரியப் பணிக்கும், ஆசிரியப் பணியிலிருந்து தொழில்நுட்ப பணிக்கும் மாறுதல்). மேலும், ஒரேவிதமான பணியை, வேறு நகரத்திற்கோ, வேறு மாநிலத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ மாற்றிக்கொள்ளுதல்.
* பகுதிநேரப் பணியை முழுநேரமாகவோ, முழுநேரப் பணியை பகுதிநேரமாகவோ அல்லது நேரடிப் பணியிலிருந்து மறைமுகப் பணியாகவோ மாற்றிக்கொள்ளுதல்.
பணிமாற்ற படிநிலைகள்
* பணிமாற்ற அவசியம் இருந்தால் அதுகுறித்து முடிவுசெய்வது.
* சுய மதிப்பீடு.
* பிற பணிகளுக்கான வாய்ப்புகள் குறித்து பட்டியலிடுதல்.
* அதிக தகவல்களை சேகரித்து, அதனடிப்படையில் உங்களது பட்டியலை முடிந்தளவு சுருக்குதல்.
* இலக்கை நிர்ணயித்தல், வேலைத் தேடுதல் மற்றும் பணி செயலாக்கத் திட்டம்.
* புதிய பணிக்கான பயிற்சி.
* ரெஸ்யூம் தயாரித்தல் மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுதல்.
* நீங்கள் தற்போது இருக்கும் பணியிலிருந்து விடைபெறுதல்.
பணிமாற்றம் பற்றிய சில கட்டுக்கதைகள் * நீங்கள் பணிமாறுவதை தடைசெய்யும் விதமாக சில கட்டுக்கதைகளும் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவற்றை நம்பி நீங்கள் சோர்ந்துவிட வேண்டியதில்லை. ஏனெனில், பணி மாறுவதற்கு வயது ஒரு தடையேயில்லை. உங்களின் மனம் எதை விரும்புகிறதோ, அதை செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. மற்றவர்களின் கருத்துக்களுக்காக உங்களின் ஆசையை தியாகம் செய்ய வேண்டியதில்லை.
* நான் வேறு பணிக்கு மாறினால், மறுபடியும் கீழ்நிலையிலிருந்து தொடங்க வேண்டுமே என்ற கவலை.
* எனது தற்போதைய வேலையில் நான் இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை.
* நான் வேறு பணிக்கு மாறினால் எனது திறமைகள் வீணாகிவிடும்.
பணிமாறுதல் செயல்பாட்டிலுள்ள தவறுகளை தவிர்த்தல்* தீவிர சிந்தனை, பணி அதிருப்தியின்மை அம்சங்களைக் கண்டறிதல் மற்றும் சுய மதிப்பீடு போன்ற விஷயங்களை மேற்கொள்ளாமல், வேறு துறைக்கு பணி மாறும் செயல்பாட்டை ஒருபோதும் மேற்கொள்ளாதீர்கள்.
* ஒரு பணி உங்களுக்கு நன்கு பொருந்திவரும் என்று தீவிரமாக யோசித்து முடிவுசெய்யாத பட்சத்தில், அப்பணிக்கு மாற வேண்டாம். பணிமாறுதல் செயல்பாட்டில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்பதைவிட, உங்களது சுய விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
* உங்களின் நெருங்கிய நண்பர் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பதற்காக, நீங்கள் அந்தப் பணிக்கு செல்லாதீர்கள். ஒரு பணியில் சேர்வதற்கு முன்பாக, நெட்வொர்க்கிங், ஆன்லைன் ரிசர்ச் மற்றும் படித்தல் போன்ற செயல்பாடுகளின் மூலமாக அதைப் பற்றிய விவரங்களை சேகரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். உங்கள் நண்பருக்கு பொருந்தும் விஷயம் உங்களுக்கு பொருந்தாமல் போகலாம்.
* சம்பளம் அதிகமாக கிடைக்கிறது என்ற ஒரு காரணத்தை மட்டும் எப்போதும் முன்னிறுத்த வேண்டாம். நீங்கள் செய்யும் வேலையும், வேலை செய்யும் இடமும் உங்களுக்கு திருப்தியாக இருப்பது மிகவும் முக்கியம். அதேபோல உடன் வேலை செய்பவர்கள் மற்றும் உங்களின் மேலதிகாரி ஆகியோரும் ஒத்துவரும் நபர்களாக இருக்க வேண்டும். இத்தகைய அம்சங்கள் ஒத்துவராமல், நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், நிச்சயம் திருப்தியடைய மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சினைகள் உங்களின் மனநலத்தோடு, உடல் நலத்தையும் சேர்த்து பாதிக்கும். எனவே, பணத்தை மட்டுமே குறிவைத்து, வேறு பல முக்கிய விஷயங்களை குறிதவற விட்டுவிடாதீர்கள்.
* பணிசெய்யும் இடத்தில் உங்களுக்கு எழும் பிரச்சினைகளை, உங்களிடமே வைத்து புதைத்துக் கொள்ளாதீர்கள். எல்லா பிரச்சினைகளையும் நீங்கள் மட்டுமே தீர்த்துவிட முடியாது. அதேசமயம், அந்தப் பிரச்சினையை உங்களது மேலதிகாரியிடமும் உடனே கொண்டு சென்றுவிட வேண்டாம். உங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சில நம்பகமான சக ஊழியர்கள் ஆகியோரிடம் தெரிவித்து தீர்வுகாண முயற்சிக்கவும்.
* புதிய துறையில், சில சோதனைகள் செய்து பார்க்காமல், தேவையின்றி, புதிய பட்டம் அல்லது டிப்ளமோ வாங்கும் முயற்சியில் கல்வி நிறுவனங்களை அணுக வேண்டாம். ஏனெனில், உங்களின் நேரத்தை மட்டுமே செலவுசெய்து, அனுபவத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஏனெனில், புதிய பட்டம் மற்றும் டிப்ளமோக்கள், உங்களுக்கு உதவலாம் அல்லது உதவாமலும் போகலாம்.
* வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் அல்லது இன்னபிற முகவர்களை உங்களுக்கான பணி தொடர்பாக அணுகும்போது, எச்சரிக்கையாக இருக்கவும். அவர்கள் சொல்வதை மட்டுமே நம்பாமல், நீங்கள் செல்லக்கூடிய துறையில் ஏற்கனவே இருப்பவர்களிடமும் விசாரித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
* ஒரு நல்ல பணி மாறுதல் என்பது உடனடியாக நிகழ்ந்துவிடும் செயல்பாடல்ல. நன்கு சிந்தித்து முடிவெடுப்பதற்கு பல மாதங்கள்கூட ஆகிவிடலாம்.
* ஒரு பணியில் சில அதிருப்திகள் ஏற்படுவது இயற்கையே. அதற்காக அந்தப் பணியையே முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு பிடிக்காத சில விஷயங்களை மட்டும் மாற்றிக்கொண்டு, வெற்றிகாண முயல வேண்டும். எதுவுமே சாத்தியமில்லை என்ற நிலையில்தான், முற்றிலும் பணிமாற்ற முயற்சியை எடுக்க வேண்டும்.
உங்களது தற்போதைய பணியிலிருந்து முறைப்படி விலகுதல்* ராஜினாமா செய்யும் செயல்பாட்டை முறையாக மேற்கொள்ளவும். எரிச்சல் மற்றும் கடுகடுப்பில் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களின் தற்போதைய நிறுவனத்தார் நினைக்கும் விதமாக நடந்து கொள்ளவும். * உங்களின் மேலதிகாரியுடன், உங்களுக்கு நல்ல உறவு இல்லையென்றாலும் பரவாயில்லை. அதற்காக, உங்களது ராஜினாமா முடிவை ஈ-மெயில் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிப்பதை தவிர்த்து, அவரிடம் நேரம் கேட்டு, நேரடியாகவே சென்று தெரிவிப்பது நல்லது. * ஏன் பணியை மாற்றுகிறீர்கள்? என்பது உங்களின் மேலதிகாரி கேட்கும் பொதுவான கேள்வி. எனவே, அதுபோன்ற கேள்விக்கு பதில்சொல்ல, நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஒரு சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன், புதிய அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் அல்லது புதிய பணியிடமானது, வீட்டிலிருந்து சென்றுவர எளிதாக இருக்கிறது என்பது போன்ற காரணங்களை கூறலாம்.
* வேலை மாற்றம் பற்றிய உங்களின் செய்திக்கு உங்களது மேலதிகாரி முறையாக பதில்கூறவில்லை என்றால், பிரச்சினை அவரிடத்தில் உள்ளது என்று அர்த்தம். அதற்காக நீங்கள் எரிச்சலடைந்துவிட வேண்டாம். உங்களின் பணி அனுபவத்தை புகழ்ந்து கூறி, உங்களின் பணிமாற்றத்திற்கான சுமூக செயல்பாட்டை அவரிடம் தெளிவாக தெரிவிக்கவும். * நடப்பு பணியிலிருந்து மாறுவதற்கு முன்பாக, பணி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று, முறையான நோட்டீஸ் கொடுக்க வேண்டும். * பணியை விட்டு நீங்கும் முன்பாக, பாக்கியிருக்கும் வேலைகளை முறையாக முடித்துவிட்டீர்களா? என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
* நோட்டீஸ் பீரியட்டில் வேலை செய்யும்போது, ஆர்வமின்றியோ அல்லது அக்கறையின்றியோ இருக்க வேண்டாம். அந்த செயல்பாடானது, அவ்வளவு நாட்கள் நீங்கள் சேர்த்து வைத்திருந்த நற்பெயரை கெடுத்துவிடும். எனவே, எப்போதும் போலவே இருங்கள். ஓய்வுபெற்ற பிறகான பணி மாற்றம் பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்டாலே, இனி அனைத்தும் முடிந்துவிட்டது என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது ஒரு தவறான எண்ணமாகும். பணி ஓய்வுபெற்றவுடன், தாங்கள் இனி எதற்கும் பயனற்றவர்கள் என்ற எண்ணம் கூடவே கூடாது. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்பதை மறக்கலாகாது. நாம் செய்யும் பணி என்பது நமது வாழ்க்கை ஓட்டத்திற்காக இருக்கலாம். ஆனால், அதைத் தாண்டிய உலகம் இருக்கிறது.
எனவே, பணி ஓய்வுக்குப் பிறகு, உங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடுங்கள். விரும்பினால் ஏதேனும் சொந்தத் தொழில் தொடங்கி நடத்துங்கள். கலை-இலக்கியங்களில் ஆர்வம் இருந்தால் அதில் ஈடுபடுங்கள். மாணவர்களுக்கு டியூஷன் எடுங்கள். தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தால் அதில் ஈடுபடுங்கள். நல்ல நிபுணத்துவமும், நம்பிக்கையும் இருந்தால், குறிப்பிட்ட துறைகளில் ஆலோசனை மையங்களையும் வைத்து செயல்படலாம். சீர்திருத்த இயக்கங்களில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மத நம்பிக்கை உடையவர்கள், அதுதொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபடலாம். இப்படியாக, ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை பரந்து விரிந்துள்ளது. எனவே, பணிமாற்றம் என்பது குறிப்பிட்ட பணியில் பல வருடங்கள் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், ஒருவரை தொடர்ந்து வருகிறது. இந்த உலக வாழ்க்கையில் ஒருவருக்கு ஓய்வு என்பதே கிடையாது.