|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 January, 2012

பதினெட்டாம் குடி எல்லை ஆரம்பம்!


பார்த்ததில் பிடித்தது !





உலகின் முதல் உழவனைப் பற்றி...

நம் புராண இதிகாசங்களில் பூமிக்கு ப்ருத்வி என்னும் பெயர் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் வந்ததற்கும் முதல் உழவனுக்கும் தொடர்பு உண்டு ரீமத் பாகவதத்தில் வேனன் என்ற அரசனைப் பற்றி பேசப்படுகிறது. வேனன் மிகக் கொடூரமானவனாக இருந்தான். அவனது கொடுங்கோன்மை தாளாத மக்கள் ஒன்று திரண்டு அவனைக் கொன்றனர். அந்நேரம் இறைவன் அசரீரி வாக்காகக் கூறியதை வைத்து வேனனின் தொடையைக் கடைந்தனர். அப்போது விஷ்ணுவின் அம்சமாக ப்ருது தோன்றினார். மக்கள் மகிழ்ச்சியுடன் ப்ருதுவை அரியணையில் அமர்த்தினர். வறண்ட பூமி, நீர்ப் பற்றாக்குறை, பஞ்சம் ஆகியவற்றால் மக்கள் மிகவும் அவதிப்பட்ட மக்கள், தங்கள் குறைகளைத் தீர்க்குமாறு ப்ருதுவிடம் வேண்டினர். புராண, வேத, இதிகாசங்களில் சொல்லப்பட்டது என்னவென்றால், அப்போது, நிலம் உழப்படாமலேயே பலவித உணவுப் பயிர்களை உற்பத்தி செய்தது. ஆனால், அதுவும் வேனனின் ஆட்சியில் தடைப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மக்களின் பசியைப் போக்க ப்ருது மன்னர் பூமியை வேண்டினார். "வில்லின் நுனியால் என்னை உழுது சமன் படுத்து. பாறைகளை உடைத்து, நீர்ப் பாய்ச்சலுக்குத் தடையாக இருக்கும் குன்றுகளை வில்லின் உதவியால் நிமிர்த்து ஸரஸ்வதி நதியின் நீர் பெருகிப் பாயும்'' என்று பூமித்தாய் அறிவுரை நல்கினார். ப்ருது நிலத்தை உழுதான். பயிர்கள் செழித்து வளர்ந்தன. முதலில் விளைந்த பயிர்களை இந்திரனுக்கு அர்ப்பணம் செய்து வேத மந்திரங்களால் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு உண்டான ஹவிஸ்ûஸ அளித்தான். உடனே, மழை பொழிய ஆரம்பித்தது. எனவே, உழவுத் தொழிலின் தந்தை, முதல் உழவன் ப்ருதுவே என நம் நாட்டின் பாரம்பரிய நூலில் இருந்து அறிகிறோம். இதனாலேயே பூமிக்கு ப்ருத்வி என்ற பெயர் வழங்கப்பட்டது.

ப்ருதுவின் தோற்றம் ஏற்படும்வரை, உழவுத் தொழிலை அறியாத அக்கால மக்கள், காடுகளை எரித்து சாம்பலை மணற் பரப்பில் தூவி விடுவார்கள். பருவம் வந்ததும் வேண்டிய விதைகளைத் தெளிப்பார்கள். பின் சாகுபடி செய்து பழம், கிழங்குகளை உண்டு வந்ததாக வேதங்கள் கூறுகின்றன. ஆனால் அதிக நீர்த் தேக்கத்தாலும், நீர்ப் பற்றாக்குறையாலும் பயிர்கள் நன்கு விளையவில்லை. பெரும் பாறைகளும், கரடுமுரடான நிலமும், குன்றுகளும் மக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடை செய்து கொண்டிருந்தன. ப்ருதுதான் தன் முயற்சியினாலும், பகவானின் அருளாலும் வில்லையே கலப்பையாகக் கொண்டு உழுது நிலத்தை சமன் செய்து பயிர் செழித்து வளர வழிகள் கண்டு பிடித்தான். 

கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி!

சீனாவை சேர்ந்த எழுத்தாளர் மைக்கேல் ஜோகன் என்பவர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். கிளாஸ்கோ நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலையத்தை சுற்றி பார்த்து அங்குள்ள காட்சிகளை வீடியோ படம் பிடித்தார். ஆலயத்தில் உள்ள கண்ணாடி ஓன்றில் இளவரசி டயானா உருவம் தெரிவது போல பதிவாகி இருந்தது வர் முதலில் வீடியோ படம் எடுக்கும் போது உருவம் கண்ணாடியில் தெரியவில்லை. ஆனால் வீடியோ படத்தை திருப்பி போட்டு பார்த்த போது தான் அந்த உருவம் தெரிந்தது. இது டயானாவின் ஆவி படம் என்று அவர் கூறுகிறார். 
 
இந்த படத்தை யார் வேண்டுமானாலும் ஆய்வுக்கு எடுத்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். தற்போது கண்ணாடியை பார்க்கும் போது சாதாரணமாகவே தெரிகிறது. வீடியோவில் மட்டும் டயானா படம் தெரிந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது டயானாவின் தாயார் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஸ்காட்லாந்தில் தான் கழித்தார். கடந்த 2004ம் ஆண்டு அவர் ஸ்காட்லாந்தில் தான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை நாகபாம்புக்கு!

கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா நேரு விளையாட்டு அரங்கம் அருகில் அமைத்துள்ளது, இங்கு மான், மயில், குரங்கு பாம்பு மற்றும் பல்வேறுவிதமான உயிரினங்கள் கூண்டுக்ளில் அடைக்கப்பட்டுள்ளது. இதில் நாகபாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், மலைப்பாம்புகள் என பல்வேறு வகையான பாம்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஐந்து வயது உடைய ஓரு நாக பாம்புக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் ஒரு “கட்டி” ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த “கட்டி” வளர்ந்து கொண்டே வந்தது, இதனால் அந்த நாக பாம்புக்கு உணவு உண்பதிலும், சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது. 

இதை கவனித்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களிடம் காட்டியதில் இது புற்றுநோயாக இருக்கும் என்று சந்தேகம் கொண்டனர். இதை தொடர்ந்து பாம்பின் உடம்பில் வளர்ந்து வந்த அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வன உயிரியல் பூங்கா இயக்குனர் மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவர்கள் குழு கடந்த 14- தேதி  நாக பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மயக்க மருந்து மூலம், மயக்கமடைய செய்த மருத்துவர்கள் குழுவினர் ஒரு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து பாம்பின் வயிற்றிலிருந்த நூறு கிராம் எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர்.

எங்க முத்துமாரி! சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்...

மாரியம்மன் ஆலயங்களில், அவை அனைத்துக்குமான தலைமை பீடம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் ஆலயம். ‘சாய்ஞ்சா சமயபுரம்... சாதிச்சா கண்ணபுரம்’ என்பதற்கிணங்க வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து சாதித்தவள் அவள். சாதித்து வருகிறவள். சாதிக்கப் போகிறவள். முக்காலங்களிலும் முதன்மை பெற்றவள்; வெகு சூட்சுமமானவள்; எங்க முத்துமாரி! 

கிருஷ்ணாவதார காலத்தில் கம்சன், தன்னைக் கொல்ல வந்த குழந்தை இதுவென எண்ணி, ஒரு பெண் குழந்தையை விண்ணிலே வீசியெறிந்து, அதனை வெட்ட வாளினை உயர்த்துகிறான். அக்குழந்தை வானத்தில் மிதந்தபடி, “ஏ... கம்சனே! உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாதேவி!” எனச் சொல்லியபடி வானில் பறந்து வந்து, பூமியில் ஒரு வேம்பு வனத்தினில் வந்தமர்கிறாள். அதுவே, ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம் ஆயிற்று என்பதாக புராணம். ஆலயத்துள் சென்று அம்மனை தரிசித்து வருவோம். இப்போதே பக்தர்களின் வருகை சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் இன்னும் கூடுதலாகிவிடும்; அலை அலையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆயி மகமாயியின் அருளாற்றலுக்கு இதுவும் ஓர் அடையாளம்! கிழக்கு பிரதான வாசல். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், மேல் நோக்கி ராஜகோபுரத்தைத் தேடுகிறோம். பிறை நிலவுபோல ஒரு பகுதி துருத்திக்கொண்டு வெளியே தெரிகிறது. காரணம், மண்டபங்கள். அதுமட்டுமல்ல; சற்றே உயரம் குறைவான ராஜகோபுரம். அதைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மின்னுகிறது தங்கத் தகடுகள் வேய்ந்த துவஜஸ்தம்பம். பலி பீடம். முதல் பிரகாரத்தின் உள்ளே இடதுபுறம் திரும்புகிறோம். விநாயகர் சன்னிதி!


பெரும்பாலான ஆலயங்களில் கன்னி மூலையில்தான் விநாயகர் சன்னிதி அமைந்திருக்கும். இங்கு கன்னி மூலைக்கும் அக்னி மூலைக்கும் மத்தியில் மகா கணபதி சன்னிதி! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளையும் உள்ளடக்கிய மூன்று விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். முச்சக்தி விநாயகர்களின் திருவருள் பெற்று, பிரகாரத்தில் நடக்கிறோம். ஸ்தல விருட்சமான சுயம்பு வேப்ப மரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. அதன் கிளைகள் எங்கிலும் வேண்டுதல் எழுதப்பட்ட திருவுளச்சீட்டுகள் நிறைந்துள்ளன. இது புனித மரமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முதல் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம். மேற்கு வாயில். மேற்கு கோபுரம். வட மேற்கில் வசந்த மண்டபம். ஈசான மூலையில் யாக சாலை மண்டபம். தங்க ரதக் கூடம். முதல் பிரகாரத்தின் வடபுறத்தில் அபிஷேக அம்மன் சன்னிதி. இந்த அம்மனின் திருமேனி மீது பட்டு வெளியேறும் திருமஞ்சன தீர்த்தம்தான், பக்தர்களுக்கான அருமருந்து. அம்மை நோய் கண்டவர்கள், சரும நோய் கொண்டவர்களுக்கான தெய்விக சர்வ ரோக நிவாரணியே, இந்த திரு மஞ்சன தீர்த்தம்தான்.


அபிஷேக அம்மனை வலம் வந்து பொன்னிறக் கொடிமரம், பலிபீடம் கடந்து நகர்ந்து சென்றால் எதிரே கருவறை! அங்கே காணும் விழிகள் கசிந்து, வேண்டும் மனங்கள் உருகி, வருந்தி வந்து வணங்கி நிற்கும் தம் மக்களை மெய்சிலிர்க்க வைத்து அரவணைத்துக் கொள்கிறாள் சமயபுரத்தாள்! விக்கிரம சிம்மாசனத்தில் விற்றிருக்கிறாள், சுயம்புவும் கருவறை மூலவருமான மாரியம்மன். பூவுலகில் வேறெந்த மாரியம்மனுக்கும் விக்கிரம சிம்மாசனம் கிடையாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. “இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், அது நிச்சயம் நிறைவேறும்.” என்கிறார்கள் பக்தர்கள். அந்த காமாரியம்மனைத்தான் இப்போது தரிசிக்கிறோம். மாதுளம் பூ நிற மேனி! சிரசில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. தங்கக் கிரீடம் தாங்கிக் குங்குமச் சிவப்பு நிறத்திருமுகத்துடன் திகழ்வதே ஒரு தனியழகு. அம்பாளின் திருமுகத்தில் திலகமாக முப்பத்தியாறு வைரக்கற்கள். அது என்ன கணக்கு? விக்கிரமாதித்தனுக்கு இந்திரன் பரிசளித்த சிம்மாசனத்தின் இரு புறங்களிலும் பதினெட்டு பதினெட்டு என மொத்தம் முப்பத்தியாறு படிகள். அவைகளை நிலைநிறுத்தும் விதமாக அம்மனின் திருமுகத்தில் திலகமென முப்பத்தியாறு வைரக்கற்கள்.


எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கத்தி, சூலம், தாமரை, உடுக்கை ஆகியன வலது திருக்கரங்களில். பாசம், வில், மணி, கபாலம் ஆகியன இடது திருக்கரங்களில். ஏழு அசுரர்களின் தலைகளைக் கொய்து, அவைகளையே மாலையாக அணிந்துள்ளாள். இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை தொங்கவிட்டபடி வீற்றிருக்கிறாள். மாயா அசுரன் தலைமீது வலது கால் பதித்துள்ளாள். அதன் வலப்பக்கம் அசுரன் சண்டன் தலை, இடப்பக்கம் அசுரன் முண்டனின் தலையென, அம்பாளின் வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் தலைகள். இத்தனை உக்கிரங்களைத் தாங்கியிருந்தபோதிலும், திருமுகத்தில் கருணை பொங்க, மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அருள்கிறாள், ஸ்ரீமாரியம்மன். கருவறைக்கு அருகில் உற்சவ அம்மன் சன்னிதி. மாரியம்மன் இங்கு ஆயிரங்கண்ணுடையாள் திருமேனியாக விக்கிரக வடிவில், தெற்கு நோக்கி சன்னிதி கொண்டுள்ளாள். முன்னோடியான கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். மத்தியில் சூர்ப்பநாயக்கர் சன்னிதி. அதன் கிழக்கே செல்லாண்டியம்மன் சன்னிதி. கிராம தேவதை அவள். அடுத்து, நின்ற திருக்கோலத்தில் பொன்னுக்கு அருளும் விநாயகர்.

ஆதியில் கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம் என்றாகி தற்போது சமயபுரம். அதனால் ஊர் மாறி. காளிதான் இவள். பேர் மாறி, மாரி ஆனவள். மாரி என்றாலே கருமை நிறம் கொண்டவள். இவள் நிறமோ மாதுளம் பூ செந்நிறம். அதனால் உருமாறி (மேனி நிறம் மாறி). ஆயிரம் கண்ணுடையாள் உற்சவ மாரியம்மன் விக்கிரகம். பாலாபிஷேகத்தின்போது, அவளது திருமேனி மீது எண்ண முடியாத அளவுக்கு, அம்மை முத்துக்கள் தெரியும். எல்லா வயதினரின் அம்மை மற்றும் சரும நோயினை நீக்கிக் காத்தருள்பவளாக இங்கு வீற்றிருக்கிறாள் ஆயிரம் கண்ணுடையாள். அவளே சமயபுரத்தாள்!” என்கிறார் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் மூன்றாம் ஸ்தானிகம் ஜெ.செந்தில்நாத சிவாச்சாரியார்.

ஆடி வெள்ளித் திருவிழா! ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். அதுவும் ஆடி கடைசி வெள்ளியன்று, லட்சக்கணக்கில் பெண்களும் ஆண்களும் திரள்கின்றனர். பொதுவாக எல்லா மாதங்களிலுமே செவ்வாய், வெள்ளி தினங்களில் சுமார் 50,000 பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம்; அமாவாசை நாட்களில் இரண்டு லட்சம்; சித்திரை தேர்த் திருவிழாவின்போது ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் வந்து செல்கின்றனர். 

பச்சைப் பட்டினி விரதமும் பூச்சொரிதலும்! மாசி மாதம் பூச்சொரிதல் விழா. மாசி கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் பூச்சொரிதல். முதல் பூ ஸ்ரீரங்கம் பெருமாளிடம் இருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே, மற்ற ஊர்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து வரும் பூக்கள் அம்மன் மீது சொரியப்படும். அந்த இருபத்தியெட்டு நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் அனுஷ்டிக்கிறாள். அம்மனுக்கு இளநீர், பானகம், பழங்கள், பச்சரிசி துள்ளு மாவு மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது தினசரி ஆறு கால பூஜைகளிலும்.

ரெங்கநாதன் தங்கச்சி... அவளுக்கு எத்தனை தங்கச்சி? தைப்பூசத் திருநாளின்போது, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே எழுந்தருள்கிறாள் சமயபுரம் மாரியம்மன். ஸ்ரீரங்கம் பெருமாளும் அங்கு எழுந்தருள்கிறார். தன் தங்கை மாரியம்மனுக்கு, சீர் வரிசைப் பொருட்கள் தந்து அனுப்புகிறார் அண்ணன் நம்பெருமாள். அன்பில் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், வலங்கைமான் மாரியம்மன், நார்த்தாமலை மாரியம்மன், பவானி பெரியபாளையம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் என சமயபுரம் மாரியம்மனுக்கு மொத்தம் ஆறு தங்கைகள். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம். தேவஸ்தான தங்குமிடங்கள் தவிர தனியார் லாட்ஜுகள் நிறைய உள்ளன


Movie of the Day...!


தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்!

இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். குப்பையின் அளவு இன்று 14 ஆயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது 25 ஆயிரமாக, 100 ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா? ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2016ம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப, 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என கணக்கிட்டுள்ளது. எளிதாக விளக்குவது என்றால், கோவை மாவட்டத்தில் பாதியைக் கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் எலெக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே 8,000 டன் குவியப்போகின்றன! அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாதிரியான நகரங்கள் குப்பை கொட்டுவதில் போட்டி போடுகின்றன. சென்னையில் 1991ம் ஆண்டு கணக்குப்படி குவிந்த குப்பைகளின் அளவு வெறும் 600 டன். ஆனால், இன்றோ ஒவ்வொரு நாளும் 4,000 டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்படுகின்றன. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கிராமங்களும் குப்பைகளுக்கு பலியாகும் நிலை உண்டாகியிருக்கிறது. நிலங்கள் பாழாகின்றன... நீர்நிலைகள் அழிகின்றன... இதனால், மக்களின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் ஆபத்து உருவாகி இருக்கிறது. குப்பைகள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? எப்படி சரி செய்வது? கண்டறிய களமிறங்கியது, ‘புதிய தலைமுறை’. குப்பைகளில் இரண்டு வகையுண்டு. மக்கும் குப்பை, மக்காத குப்பை. தமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60 சதவிகிதம். மக்காத குப்பைகளின் அளவு 35 சதவிகிதம். மற்றவை 5 சதவிகிதம்தான். இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக் கழிவுகள் தொடங்கி பேப்பர், மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், மாமிசம் என நமக்கு மிக நெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான். மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி, உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள். ‘அதுதான் குப்பைகள் மக்கிடுமே! அப்புறம் நமக்கு என்ன பாதிப்பு வந்துடப்போகுது?’ என நினைக்கலாம். மக்கும் குப்பைகளை கொட்டிக் கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக் கூடியது. குப்பை மேடுகளில் எப்போதும் புகை வந்துகொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்க முடியும். காரணம், இந்த மீத்தேன்தான். குப்பை மேடுகளுக்குள் எப்போதும் இந்த மீத்தேன் வாயு எரிந்துகொண்டேயிருக்கும். காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு இதை முழுமையாக எரிய விடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்து கொண்டேயிருக்க காரணம். இது, குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால் பல பாதிப்புகளை உண்டாக்கும். மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் தொடங்கி, புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்தக் குப்பைகளால் உண்டாகும் டயாக்சின் என்னும் வாயு, காற்றின் மூலக்கூறுகளில் அமர்ந்து கொண்டு பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் கூட பயணிக்கும் திறன் கொண்டவை. இவைதான் புற்றுநோய் உண்டாகவும் முக்கியக் காரணமாகவும் உள்ளது. ‘சார்! அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால், பாவம் கேன்சர் வந்து செத்துட்டாரு’ என நிறைய பேர் பேசுவதைக் கேட்டிருப்போம். காரணம், இந்தக் குப்பைகளினால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான். மக்காத குப்பைகளால் நிலமும் நீர் வளமும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. கோவையில் ஒரு காலத்தில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் குளங்கள் மிச்சமிருக்கின்றன. இவற்றில் பலவும் குப்பைகள் கொட்ட, மெகாசைஸ் குப்பைத் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் கலந்த நீர்நிலைகளில் எந்த ஜீவனும் வாழ முடியாது. அதோடு, நிலத்தடி நீரையும் பாழாக்கும் சக்தி இந்தக் குப்பைகளுக்கு உண்டு. குப்பைகள் ஏன் பெருகின? நம் வாழ்க்கைமுறை மாற மாற, குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. முன்னெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக்கழிவுகளையும் வீணான காய்கறி, பழங்களையும் அதில் போட்டு அதன்மீது கொஞ்சம் மண்ணைத் தூவிவிட்டால் போதும். சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் தயார். ஆனால், இன்று வீடுகளே குழியளவு சுருங்கிப் போயிருக்கிறது. இதில் எருக்குழிக்கு எங்கே போவது? அதோடு வீட்டில் உபயோகித்த பால் கவர், பவுடர் டப்பா, மை டப்பா, பாட்டில்கள், உபயோகித்த டூத் பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காலாங்கடைக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால், இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான். இயல்பிலேயே திடக்கழிவு மேலாண்மையைக் கையாண்ட நம்மால் இன்று அதைப் பின்பற்ற முடிவதில்லை. இன்று நம் வீட்டில் ஒரே ஒரு குப்பைத்தொட்டி, அதிலேயே உணவுக் கழிவுகளும் பவுடர் டப்பாவும் மருந்து பாட்டிலும் மொத்தமாகக் குவிகின்றன. அதில், பிளாஸ்டிக் கவர்களின் பங்கும் கணிசமானது. புரோட்டா வாங்கப் போனாலும் குருமாவைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் வாங்க வேண்டியிருக்கிறது. பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது உயர்வாக கருதப்படுகிறது. இந்த மனநிலை பெருகப் பெருக, குப்பைகளின் அளவும் பெருகியுள்ளன.

வாங்கும் சக்தி அதிகரிக்க, கண்டதையும் வாங்கி வீட்டில் குவிக்கிறோம். முன்னெல்லாம் ஒரு தொலைக்காட்சியின் ஆயுள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள். இன்றோ எல்.சி.டி., 3டி., எச்.டி. என மாறிக் கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப வேகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே எதுவும் பழசாகிப்போகின்றன. நுகர்வு கலச்சாரமும் உலக மயமாக்கலும் எதையும் யூஸ் அன்ட் த்ரோ என நம்மை பழக்கியிருக்கிறது. இதுபோக சரியான மேலாண்மை இல்லாமல் தொழிற்சாலைக் கழிவுகளும் மருத்துவக் கழிவுகளும் மலைபோல குவிகின்றன? இதைத் தடுக்க சினிமாவில் வருவதைப்போல அந்நியனோ, ரமணாவோ, சூப்பர்மேனோ வரப்போவதில்லை... பிறகு என்னதான் செய்வது இந்தக் குப்பைகளை? அரசு என்ன செய்கிறது? தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து, அதை அப்படியே கலந்துகட்டி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற காலி இடங்களில் கொட்டி நிரப்பப் படுகின்றன. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து, அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கின்றன. அதாவது, சென்னையில் கொடுங்கையூரில் இடமில்லையா? பெருங்குடியில் கொட்டு... அங்கு இடமில்லையா? பள்ளிக்கரணையில் கொட்டு... அங்கு இடமில்லையா? புதிய இடம் கண்டுபிடி! இதுபோல சென்னையில் எட்டு இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. கொட்டப்படுகிற எல்லாக் குப்பையும் அள்ளப்படுவதும் இல்லை. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80 சதவிகிதத்தை அரசினால் அள்ளமுடிகிறது. மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும் எங்கேயும் எப்போதும் கிடந்து மக்கி, நோய் பரப்பி வாழும். அரசு இந்தக் குப்பைகளுக்காக ஒரு டன்னுக்கு 500 ரூபாயிலிருந்து 1,100 ரூபாய்வரை செலவளிக்கிறது. அட பரவாயில்லையே! அப்படீனா, நல்லாதானே பண்ணுவாங்க என்று நினைக்கலாம். உண்மையில், இந்தத் தொகையில் 60-70 சதவிகிதக் குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20-30 சதவிகிதம் அதை எடுத்துச் செல்லும் போக்குவரத்துகளுக்கும், வெறும் 5 சதவிகிதம்தான் அதைக் கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வீட்டு வாசலில் இருக்கிற குப்பையை எடுத்துக் கொண்டுபோய் பக்கத்து வீதியில் இருக்கிறவருடைய வீட்டு வாசலில் கொட்டுவதைப் போலவே. "நமக்கு, நம்ம வீடு சுத்தமா இருந்தா போதும்... என்கிற மன நிலையில்தான் அரசும் செயல்படுகிறது.

அதாவது, பெரும்பாலும் இக்குப்பைகள் நகரத்திற்கு நடுவே உருவாகி, ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற சேரிப்பகுதிகளுக்கு அருகாமையில்தான் கொட்டப்படுகின்றன. இது, சென்னையில் மட்டுமல்ல... தமிழகம் முழுக்கவே இப்படித்தான். அதாவது பணக்கார, நடுத்தரவர்க்க மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்" என்கிறார், சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம். குப்பைகள் கொட்டப்படுகிற LAND FILLS எனப்படும் இடங்கள் சட்டப்படி என்னென்ன வசதிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமோ என்னென்ன அளவீடுகளுடன் இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை, மிக மோசமான நிலையில் இருப்பதை யாருமே நேராகவே சென்றாலும்கூட பார்க்க முடியும். குப்பை லாரிகள்தான் நோய் பரப்பும் வேலைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் மாநகராட்சி குப்பை வண்டிகளில் இடம்பெறக் கூடாது என சட்டம் சொன்னாலும் அதுவும் தொடர்கிறது. இது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை. "ஒவ்வொரு குப்பை லாரியும் குப்பையைக் கொட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது, தினமும் நன்கு கழுவப்பட்டு சுகாதாரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது சட்டம். ஆனால், இங்கே யாருக்கு அதைப் பற்றி கவலை. இங்கே குப்பை கொட்டும் இடங்களில் தெரு நாய்கள் கூட நுழையக்கூடாது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குதான் குப்பை பொறுக்குகின்றனர். இவர்கள் இங்கேயிருந்து வெளியே செல்லும்போது குப்பைகளை மட்டுமே எடுத்துச்செல்வதில்லை, பயங்கரமான வியாதிகளையும்தான். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது" என வருந்துகிறார், பெயர் சொல்ல விரும்பாத மாநகராட்சி ஊழியர் ஒருவர். இது வேறயா! மருத்துவமனைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் பத்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அவை ஆறுவிதமான குப்பைக்கூடைகளில் அடைக்கப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். சில வகை குப்பைகள் 900 டிகிரி செல்சியஸில் எரிக்கப்படவும் வேண்டும். ஆனால், இன்று பல மருத்துவமனைகளும் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை ‘கரெக்ட்’ செய்து, எப்படியோ பொதுக் கழிவுகளோடு இதையும் கலந்துவிடுகின்றன. இதனால், தொற்றுநோய் அபாயம் மட்டுமல்ல... கதிர்வீச்சு அபாயங்கள் கூட உண்டு. இதுபோக, எலெக்ட்ரானிக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும்கூட பொதுக் கழிவுகளோடு கலக்கப்படுவதும் தொடர்கின்றன.

இதுவும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தீர்வுதான் என்ன? இதுகுறித்து, ‘எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’ அமைப்பினை சேர்ந்த நிர்மலிடம் பேசினோம்: "நாம்தான் இதை வெறும் குப்பைகளாக பார்க்கிறோம். ஆனால், அவை செல்வங்கள். அதை சரியான வழியில் பயன்படுத்தினால், நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும். அதற்காக கொஞ்சம் உழைப்பும் பொறுமையும் அவசியம். குப்பைகளைக்கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம். நம் மின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். பயோ-கேஸ் தயாரிக்கலாம். எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். அவை தவிர, மறுசுழற்சி என்பதே லாபகரமான தொழில்தான்" என்றார். நிர்மல் சொல்வதை நிஜமாகவே பல பகுதிகளில் செய்தும் காட்டியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதை செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. "வேலூர் தங்கக் கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களால் உண்டாகும் குப்பைகளை சரியான வழியில் உபயோகிக்க முடிவு செய்தது எக்ஸ்னோரா. அங்கே கிடைக்கும் உணவுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுவதோடு அவை, சந்தைகளில் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்காகத் தயாராகின்றன. இவை தவிர்த்து மிகச் சிறிய அளவு குப்பைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன" என்கிறார், எக்ஸ்னோரா நிர்மல். ‘ஹேன்ட் இன் ஹேன்ட்’ என்னும் அமைப்பு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஒன்றை, தமிழகத்தின் பல இடங்களில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டம், பிபிசி நடத்திய உலக அளவிலான போட்டியொன்றில் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்துள்ளது. குப்பைகளின் மூலம் பயனடைதல், அதன் மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குதல் என்னும் வழியைப் பின்பற்றி, இத்திட்டம் மகாபலிபுரத்தை குப்பையற்ற ஊராக மாற்றியதோடு, மாற்றத்தை ஏற்படுத்தியும் காட்டியுள்ளது.

தமிழகம் முழுக்க இத்திட்டத்தினால் 2,13,000 வீடுகள் பலனடைந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் நூறு டன் குப்பைகளை இந்த அமைப்பு கையாளுகிறது. அதன் ஒரு பகுதியாக மகாபலிபுரத்தில் பயோ-கேஸ் தயாரிப்பு மற்றும் உணவுக் கழிவிலிருந்து மின்சாரம் என விதவிதமான திட்டங்களால் அசத்தி வருகின்றனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் என அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். மகாபலிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த உரம், விகம்போஸ்ட் என்ற பெயரில் சந்தைகளில் விற்கப்படவும் செய்கிறது. தயாரிக்கப்படும் பயோ-கேஸ், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரம், உரம் தயாரித்தலுக்கான தொழிற்சாலையின் மின்தேவையைப் பூர்த்தி செய்கிறது. நம்முடைய மத்திய-மாநில அரசுகளும் இதுபோலவே பல கிராமப்புறப் பஞ்சாயத்துகளில் எரு தயாரித்தல் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து மாற்றுவழிகளில் உபயோகித்தல் என சில திட்டங்களின் மூலமாக வெற்றிகரமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு செயல்படுத்தப்பட்டே வந்தாலும் அவை வெறும் 10 சதவிகிதம்தான். மீதி? "இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. போதிய விழிப்புணர்வின்மை, இடமின்மை, தேவையான வசதியின்மை. இதைத் தீர்க்க, மக்களிடையே எய்ட்ஸ் குறித்த பிரச்சாரம் போல முழுவீச்சுடன் குப்பைகள் குறித்த ஆபத்துகளை விளக்க வேண்டும். குப்பைகளை அள்ளுவதில் தொடங்கி, அவற்றைக் கையாளுதல், அழித்தல் வரை சுற்றுச்சூழல் சட்டம் சொல்கிறபடி செய்ய வேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கினாலும் அதை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். இதை செய்தாலே கூட குப்பைகளை தவிர்க்க முடியும். எங்களைப் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் மக்களை இணைத்துக் கொண்டும் இதை நிச்சயமாக சாதிக்க இயலும்" என்கிறார், ‘ஹேன்ட் இன் ஹேன்ட்’ அமைப்பின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் சிவகிருஷ்ணமூர்த்தி.

மக்களை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரம் பேண வேண்டிய மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட ஆபத்தை விளைவிக்கும் பயோ-மெடிக்கல் வேஸ்ட்டுகளை ஏனோ தானோ என்றுதான் கையாளுகின்றன. ஏன் என்றால், இவற்றை அழிக்க அதிக செலவாகும் என்பதே. உடனடியாக அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்" என்கிறார், ‘டாக்ஸிக் லிங்க்ஸ்’ அமைப்பின் அருண். தீர்வுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அரசு பல கோடி செலவில் திட்டங்கள் தீட்டினாலும் மக்களாகிய நம்மிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அண்மையில், தமிழக அரசு குப்பைகளை தரம் பிரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. வரவேற்கத்தக்க முயற்சி இது. ஆனால், பிளாஸ்டிக் கவரில் கெட்டுப்போன சட்டினியோடு குப்பைத்தொட்டியில் வீசும் பழக்கம் நம்மிடம் இன்னும் ஒழியவில்லையே! மக்களாகிய நாம் செய்ய வேண்டியது * உங்கள் பகுதியில் குப்பைகள் தரம் பிரித்து வாங்கப் படவில்லையென்றாலும் தரம் பிரித்தே துப்புரவுத் தொழிலாளியிடம் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். * காலி மனைகளில், சாலை ஓரங்களில், கழிவுநீர்க் கால்வாய்களில், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டாதீர்கள். * குப்பைகளை எரிக்கவே எரிக்காதீர்கள். * கடைகளுக்கு செல்லும்போது துணி அல்லது சணல் பை எடுத்துச் செல்லவும். முற்றிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம். * இதையே நாம் பணியாற்றும் அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், அருகாமை வீடுகளில் செய்யவும் வலியுறுத்தலாம். * நான் இன்னும் அதிகமாக செய்ய நினைக்கிறேன்ங்க என்பவரா நீங்கள்... உங்களுக்காக இன்னொரு யோசனையும் இருக்கிறது. வீட்டிலேயே செலவில்லாமல், அதிக இடமில்லாமல் எரு தயாரிக்கலாம். அது மிக மிக சுலபமானதுதான். ஒரு சிறிய டிரம் அல்லது பானை கூட போதுமானது. அதன் உள்ளே மரப்பலகை ஒன்றை வைத்து, அதில் கொஞ்சமாக மண் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே தினமும் உணவுக் கழிவுகளைத் கொட்டிவிட்டு, கொஞ்சமாகக் காந்த சாணமோ அல்லது காந்த இலைகளையோ போட்டு மேலோட்டமாக ஓரளவு காற்றுபோகும் வழிசெய்து, மூடிவைத்து விடுங்கள். தினமும் இதுபோல செய்துவந்தாலே, ஓரிரு மாதங்களில் அருமையான இயற்கை உரம் தயார்.

அதை உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கோ, பக்கத்து வீட்டுத் தோட்டத்திற்கோ கொடுக்கலாம். விற்கலாம். அதோடு, வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளைத் திரட்டி, மொத்தமாக காலாங்கடையில் போட்டுவிடுங்கள். காசுக்கு காசு, சுற்றுச்சூழலுக்கும் நல்லது. இல்லை, சாலையிலே போட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது. மண்ணுக்குநல்லது. அரசு செய்ய வேண்டியது * ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்புத் திட்டம் இருப்பதுபோலவே, இந்த இயற்கை எரு தயாரிக்கும் அமைப்பும் இருக்க நிர்பந்திக்கலாம். இதன் மூலமாக பெருமளவு மக்கும் குப்பைகள் சேர்வதை நிச்சயமாகக் குறைக்கலாம். * குப்பைகள் எந்த நிலையில் வந்தாலும் தரம் பிரித்து, அதை சரியான முறையில் கையாள வேண்டும். * குப்பைகளைக் கையாள, நல்ல கட்டமைப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும். * மக்களிடையே குப்பைகள் குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். * சிறிய அளவில் பயோ-கேஸ் தயாரித்தல், குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும். * உற்பத்தியாளர்களிடமிருந்தே மறுசுழற்சிக்கான நிதியைப் பெற்று, சரியான முறையில் உபயோகித்தல். * நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். * மருத்துவக் கழிவுகள் முற்றிலுமாக சரியான முறையில் கையாளப்படுவதோடு, மக்கள் பகுதிகளுக்குள் எக்காரணம் கொண்டு வரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றினை அழிக்கப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என தொடர் சோதனைகள் நடத்தி, ஆய்வு செய்ய வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது? பெருகிவரும் குப்பைகளை சரியாகப் பயன்படுத்தவும் அழிக்கவும் அதைக் கையாளவும் அரசின் சட்டங்கள் மிகவும் சரியாக இயற்றப்பட்டுள்ளன. MUNICIPAL SOLID WASTE RULES -2000 என்கிற சட்டம், நகரங்களின் குப்பைகளை எப்படி அகற்ற வேண்டும், அவற்றை என்ன செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறது.

பயோ-மெடிக்கல் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நகரக் கழிவுகளோடு கலக்காதிருத்தல் மற்றும் அவற்றை வெவ்வேறு விதமான முறைகளில் கையாளுதல், அழித்தல். • குப்பைகளை எரித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. • தெரு நாய்கள் முதலான விலங்குகள், குப்பைகளுக்கு அருகில் செல்லாமலும் அவற்றை கிளறி உணவு தேடுதலையும் தடுத்தல். • மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளை அமைத்தல். அவை நிரம்புவதற்கு முன்பு சுத்தம் செய்தல். நேரடியாக துப்புரவுத் தொழிலாளர்கள் அதைக் கைகளால் தொட்டு உபயோகிக்காமல், ஆட்டோமேட்டிக் முறையைப் பயன்படுத்துதல். • மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை LAND FILLS எனப்படும் இடங்களை உண்டாக்கி கொட்ட வேண்டும். அப்பகுதி, மக்கள் வசிக்காத பகுதிகள், காடுகள், நீர்வளப் பகுதிகள், வரலாற்றுப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் உள்ள பகுதிகளில் அமையக் கூடாது. இந்த இடம், 25 ஆண்டுகளுக்கு குப்பை கொட்ட வசதியான இடமாக இருக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள http://enfor.nic.in/legis/hsm/mswmhr.html என்ற இணையதள முகவரியில் காணலாம். 

ஆன்லைன் காயலாங்கடை! குப்பையைக் கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா. இவர்களுடைய, ‘குப்பைத்தொட்டி டாட்காம்’ என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள், பாட்டில்கள், அலுமினியம், எலெக்ட்ரானிக் பொருட்கள், தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக் கொள்கின்றனர். அதாவது, ஆன்லைன் காயலாங்கடையைப் போன்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் தந்து விடுகின்றனர். "இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. அதோடு, மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது" என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பல பகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.kuppathotti.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...