மத்திய அரசிடம் வாதாடி மண்ணெண்ணெய் பெற்று மக்களுக்கு வழங்க முடியாதவர்கள், தி.மு.க., கூட்டு சதி என்று கூறி மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்' என்று, கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: 386 கொலை: பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிற எந்த நிகழ்வும், தமிழகத்தில் நடக்கவில்லை என்று, டில்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகத்தில், இந்த 11 மாத காலத்தில், 386 கொலைகள், 178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், 10க்கும் மேற்பட்ட, "லாக்-அப்' மரணங்கள் நடந்துள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடந்து, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே மாதத்தில், 16 கொலைகள் நடந்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா அகராதிப்படி, இவை எல்லாம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத செயல்கள் போலும்.
அழுத்தம் தர வேண்டும்: தனி ஈழம் வழங்க தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று, எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐ.நா., தலையீட்டின்படி, இதுபோல பொது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, ஒரு சில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிக்கு மத்திய அரசு தேவையான ஆதரவும், அழுத்தமும் தர வேண்டும்.
கோபத்தில் இருந்து தப்ப... : தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசிடம் வாதாடி, போராடி பெற வக்கற்றவர்கள் எதற்கெடுத்தாலும், தி.மு.க.,வை குறை சொல்வார்கள். தி.மு.க., ஆட்சியில், தமிழக தேவைகளுக்கு மத்திய அரசிடம் பலமுறை கடிதம் மூலமும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக மண்ணெண்ணெய் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், "தி.மு.க., கூட்டு சதி' என்று கூறி, பொதுமக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். கடந்த 10 மாதங்களில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று, வருவாய் துறை அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சியில், 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.