|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 May, 2011

இதே நாள்


  • ஏமன் தேசிய தினம்

  •  இலங்கை தேசிய வீரர்கள் மற்றும் குடியரசு தினம்(1972)

  •  விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)

  •  இலங்கையில் முதலாவது சட்டசபைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது(1834)

  •  ரைட் சகோதரர்கள் தங்களது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1906)

  • மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசி காலமானார்






    சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

    பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

    குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.

    திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

    நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.

    இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

    சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள். 

    ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? சீமான்!


    இலங்கை வெளியுறவு மந்திரி பெய்ரீஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்து பிரதமர், வெளியுறவு மந்திரி, வெளியுறவு செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு இரு அரசுகளின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இலங்கை மந்திரியின் இந்திய பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ஒரு இடத்திலும் குறிப்பிடப்படாதது வியப்பளிக்கிறது.

    இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளிவந்து பன்னாட்டு கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரியின் பயணம், அந்த அறிக்கைக்கு எதிராக டெல்லி அரசின் ஆதரவைப் பெறுவதற்காகவே என்று இலங்கையின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றி விவாதித்ததாக ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

    ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியாவதற்கு முன்பு வரை, இந்தியாவிற்கு பிடி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த ராஜபக்சே அரசு, இப்போது சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கவும், காங்கேசன் துறைமுகத்தை மேம்படுத்தவும், பலாலி விமான தளத்தை மறுசீரமைக்கவும், பலாலி   காங்கேசன் இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஏற்கவும், புதிய தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞை அமைப்பை இந்தியாவின் உதவியுடன் நிறுவவும், இதுநாள் வரை சம்மதிக்க மறுத்துவந்த இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஏற்க முன்வந்திருக்கிறது.

    மேலும் இலங்கையின் ஒட்டுமொத்த மின் அமைப்பையும், இந்தியாவின் (தமிழ்நாட்டின் ஊடாக) மின் அமைப்புடன் இணைப்பது என்று பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரையால் கலங்கிப்போய் இருக்கும் ராஜபக்சே அரசைக் காப்பாற்ற இந்திய அரசு உறுதியளித்திருப்பதற்கு  கைமாறாக' இலங்கை அரசு மேற்கண்டவற்றை நிறைவேற்ற முன்வந்திருக்கிறது.

    ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் படி இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள். ஆகவே இதில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

    இப்பிரச்சனையிலும் இந்திய அரசு மவுனம் காக்குமெனில், மறைமுகமாக விசாரணைக்கு தடைபோடும் முயற்சியில் ஈடுபடுமெனில், இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் இந்திய அரசையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் பன்னாட்டு அளவில் குரல் எழுப்புவோம். இவ்வாறு சீமான்



    ரஜினி நலமுடன் உள்ளார்

    நடிகர் தனுஷ், அவரைச் சந்தித்தபோது தனது மொபைலில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, நான் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போல அவர் போஸ் கொடுத்துள்ளார்.

    ரஜினி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதால் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். இஸபெல் மருத்துவமனையில் இரண்டாம் முறை அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.

    தனக்கு உதவ பெண் செவிலியர்களுக்கு பதில் ஆண் செவிலியர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.ரஜினிக்கு அமெரிக்க டாக்டர்களின் ஆலோசனைப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்த் தொற்றைத் தவிர்க்க அவரை பார்ப்பதற்கு விவிஐபி பார்வையாளர்கள் உள்பட யாரையுமே அனுமதிப்பதில்லை மருத்துவமனை நிர்வாகம்.டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...