|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 May, 2011

ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? சீமான்!


இலங்கை வெளியுறவு மந்திரி பெய்ரீஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்து பிரதமர், வெளியுறவு மந்திரி, வெளியுறவு செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு இரு அரசுகளின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இலங்கை மந்திரியின் இந்திய பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ஒரு இடத்திலும் குறிப்பிடப்படாதது வியப்பளிக்கிறது.

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளிவந்து பன்னாட்டு கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரியின் பயணம், அந்த அறிக்கைக்கு எதிராக டெல்லி அரசின் ஆதரவைப் பெறுவதற்காகவே என்று இலங்கையின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றி விவாதித்ததாக ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியாவதற்கு முன்பு வரை, இந்தியாவிற்கு பிடி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த ராஜபக்சே அரசு, இப்போது சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கவும், காங்கேசன் துறைமுகத்தை மேம்படுத்தவும், பலாலி விமான தளத்தை மறுசீரமைக்கவும், பலாலி   காங்கேசன் இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஏற்கவும், புதிய தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞை அமைப்பை இந்தியாவின் உதவியுடன் நிறுவவும், இதுநாள் வரை சம்மதிக்க மறுத்துவந்த இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஏற்க முன்வந்திருக்கிறது.

மேலும் இலங்கையின் ஒட்டுமொத்த மின் அமைப்பையும், இந்தியாவின் (தமிழ்நாட்டின் ஊடாக) மின் அமைப்புடன் இணைப்பது என்று பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரையால் கலங்கிப்போய் இருக்கும் ராஜபக்சே அரசைக் காப்பாற்ற இந்திய அரசு உறுதியளித்திருப்பதற்கு  கைமாறாக' இலங்கை அரசு மேற்கண்டவற்றை நிறைவேற்ற முன்வந்திருக்கிறது.

ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் படி இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள். ஆகவே இதில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

இப்பிரச்சனையிலும் இந்திய அரசு மவுனம் காக்குமெனில், மறைமுகமாக விசாரணைக்கு தடைபோடும் முயற்சியில் ஈடுபடுமெனில், இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் இந்திய அரசையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் பன்னாட்டு அளவில் குரல் எழுப்புவோம். இவ்வாறு சீமான்



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...