|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 December, 2011

Porali movie online

இந்தவார ராசிபலன்... 8.12.2011 முதல் 14. 12 2011 வரை

மேஷம்;  
இந்த வாரம் தொடக்கத்தில் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டிவரும். அதேநேரத்தில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். வார மத்தியில் வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நன்மை தரும். பண வரத்தில் தாமதம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். வார இறுதியில் மனக்கவலை நீங்கும். துணிச்சல் கூடும். தொழில் வியாபார போட்டிகள் கூடும். உங்கள் உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. சுமாரான வாரமாக இருக்கும். 

ரிசபம்;
வாரத் தொடக்கத்தில் வெளியூர் பயணங்கள் செய்யவேண்டி வரலாம். வீண் செலவுகள் இருக்கும். வாரமத்தியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கக்கூடும். குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டி வரும். வார இறுதியில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த நிதி நெருக்கடி குறையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கவனமாக செயல்படவேண்டிய வாரம்.

மிதுனம்;
எல்லாப் பணிகளும் இந்த வாரத் தொடக்கத்தில் முன்னேற்றம் காணும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வார மத்தியில் பயணங்களால் அலைச்சல் இருக்கக்கூடும். எதிர் பாராத செலவும் வரலாம். வார இறுதியில் ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டவேண்டியிருக்கும். வாகனத்தில் செல்லும்போதும், பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை. முன்னேற்றங்கள் தரும் வாரமாக இருக்கும்.

கடகம் ;
வாரத் தொடக்கத்தில் காரிய அனுகூலங்கள் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியுடன் திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பீர்கள். வார மத்தியில் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கி வசூலாகும். வார இறுதியில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டி வரலாம். மாணவர்கள் படிப்பில் இருந்த மெத்தனம் நீங்கும். மொத்தத்தில் இந்த வாரம் மனமகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும்.

சிம்மம்;
வாரத் தொடக்கத்தில் ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். பாக்கியங்கள் கூடும். நிதி வசதி திருப்தியாக இருக்கும். எதையும் சமாளிக்கும் துணிச்சல் இருக்கும். வார மத்தியில் தொழில், வியாபாரத்திலிருந்த பின்னடைவு நீங்கும். நிதிநிலை சீராகும். பதவி, அந்தஸ்து உயரும். வார இறுதியில் மனவேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் தேடி வருவார்கள். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த வாரம் மனதுக்கு இனிமையான வாரமாக இருக்கும்.

கன்னி;
வாரத் தொடக்கத்தில் வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்பட்டாலும், வார மத்தியில் அது நீங்கி திட்டமிட்டபடி செயலாற்ற முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிறர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வார இறுதியில் காரிய அனுகூலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் கொடுக்கும். கல்வி பற்றிய கவலை குறையும். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்றமிகு வாரமாக அமையும்.

துலாம்;
இந்த வார தொடக்கத்தில் பேச்சில் இனிமை சாதுர்யத்தால், காரிய வெற்றி காண்பீர்கள். பிறர் புகழக்கூடும். வார மத்தியில் பணிகளில் மெத்தனப்போக்கு, எதிர்பாராத செலவு, டென்ஷன் ஏற்படக்கூடும். வார இறுதியில் கஷ்டங்கள் நீங்கி சுகம் கூடும். எதிர் பாரா திருப்பங்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் பார்ட்னர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். மொத்தத்தில் இந்த வாரம் திருப்பங்கள் நிறைந்த வாரமாக இருக்கும்.

விருச்சிகம்;
வாரத் தொடக்கத்தில் கடன் பிரச்சினைகளால் ஏற்பட்ட தொல்லை குறையும். தொழில், வியாபாரப் போட்டிகள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வார மத்தியில் அடுத்தவர்கள் உதவியால் காரிய அனுகூலம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். கல்வியில் முழு கவனம் செலுத்துவீர்கள். வார இறுதியில் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அலைச்சல் உண்டாகலாம். இந்த வாரம் அனுகூலமான வாரமாக இருக்கும்.

தனுசு;
வாரத் தொடக்கத்தில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் தாமதம் ஏற்படலாம். வார மத்தியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்கள் அறிமுகம் கிடைக்கலாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் குறையலாம். தொழில், வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். வார இறுதியில் பிறர் உதவியால் எதையும் செய்து முடிப்பீர்கள். அதேநேரத்தில் டென்ஷன் உண்டாகலாம். மொத்தத்தில் இந்த வாரம் திருப்திகரமான வாரமாக இருக்கும்.

மகாரம்;
இந்த வாரத் தொடக்கத்தில் மன நிம்மதி பாதிக்கும்படியான சூழ்நிலை உண்டாகலாம். காரிய தாமதம் ஏற்படலாம். வார மத்தியில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பாதியில் விட்ட பணிகளை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். வார இறுதியில் பண வரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த நெருக்கடி குறையும். மாணவர்கள் கவனத்நதை சிதறவிடாது படிப்பது அவசியம். மொத்தத்தில் சுமாரான வாரம் இது.

கும்பம்; 
வாரத் தொடக்கத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். மனோதைரியம் கூடும். வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வார மத்தியில் வீடு வாகனம் வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஆர்வம் உண்டாகும். பயணத்தில் கவனம் தேவை. வார இறுதியில் எதிர்பாராத செலவு ஏற்படலாம். அடுத்தவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். மொத்தத்தில் இந்த வாரம் தன்னம்பிக்கை மிகுந்த வாரமாக இருக்கும்.

கன்னி;
வாரத் தொடக்கத்தில் வீண் பேச்சுக்கள் , வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்துப்போவது அமைதியைத் தரும். பணத்தேவை ஏற்படலாம். வார மத்தியில் எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். மாணவர்கள் உற்சாகமாகக் காணப்படுவார்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு திட்டமிடுவீர்கள். வார இறுதியில் எடுத்த காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தனப்போக்குக் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மொத்தத்தில் இந்த வாரம் எதிர்ப்புகள் இல்லாத வாரமாக இருக்கும்.        

தங்கர்பச்சான் ஆவேசப்பேச்சு...


தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும் , ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குயிக் என்ற வெள்ளைக்கார மனிதன் மனம் நெகிழ்ந்து, அன்றைய ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி , இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று, தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து தனது பணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணம் இரண்டையும் இணைத்து இழைத்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை.பென்னி குய்க் உருவ படத்தை திறந்து வைத்த இயக்குனர் தங்கர்பச்சான் செய்தியாளர்களிடம் பேசும்போது,  

‘’ ஓட்டு பிச்சைக்காக அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய்யான பிரச்சாரம் செய்கிறது கேரள அரசு. அணை பலவீனமானால் அதை சரி செய்து கொள்ளலாம், ஆனால் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு பவலவீனமானால் அதை சரி செய்ய முடியாது என்று கேரள அரசை எச்சரித்தார். கேரளாவில் எப்படி அணைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து போராடுகிறதோ அதே போல் தமிழகத்திலும் அணைத்துக் கட்சிகளும் ஒன்று சேரர்ந்து முல்லை பெரியாறு விஷயத்தில் போராட வேண்டும்’’ என்றார்.  அவர் மேலும்,  முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் பற்றிய குறிப்புகளை பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் வேண்டுகோள் வைத்தார். 

பரஞ்சோதி மீது எப்.ஐ.ஆர்...



தமிழக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சையைச்சேர்ந்த டாக்டர் ராணி,   மு.பரஞ்சோதியை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும்,   அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றும்,   தன்னிடம் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்.    என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்று புகார் கூறினார்.  இந்த புகாரை பரஞ்சோதி மறுத்தார்.  இதையடுத்து ராணி,   பரஞ்சோதி தனது கணவர் என்பதற்கும்,   தான் பரஞ்சோதியின் மனைவி என்பதற்கும் உரிய ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்தார். இதன்பிறகும் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்காததால்,  ராணி கோர்ட்டுக்கு சென்றார்.  திருச்சி மே.எம்.  நீதிமன்றத்தில் ராணியின் மனு மீதான விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி,   பரஞ்சோதி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.     அவர் மேலும்,   நாளை (9. 12.11)  பரஞ்சோதி குறித்து விசாரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்புக்கு பின்னர் போலீசார்,  பரஞ்சோதி மீது 294B, 323, 406, 420, 493, 506/2 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரிக்கை!


அமெரிக்காவைத் தொடர்ந்து. ஐரோப்பிய மண்டல நாடுகளின் கடன் தர வரிசையையும் குறைக்கப் போவதாக உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனம் குறைத்தது. கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. இது 'AA' என்ற நிலைக்கு ஆகக் குறைக்கப்பட்டது. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் சரியாக இருந்ததால், 'AAA' என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாடாளுமன்றம் அனுமதித்ததைவிட மிக அதிகமான கடனை வாங்கியது அமெரிக்கா. இதையடுத்து அதன் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்தது. இதையடுத்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இந் நிலையில் ஐரோப்பாவில் நிலவும் நிதி நிலைமைக் கருத்தில் கொண்டு யூரோ மண்டலத்தில் (euro-zone countries) உள்ள அனைத்து 17 நாடுகளின் கடன் தர வரிசையையும் AAA என்ற நிலையிலிருந்து, குறைக்கப் போவதாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் மோசமான நிதிச் சூழலை மாற்ற நாளை நடக்கவுள்ள யூரோ மண்டல நாடுகளின் கூட்டத்தில், முக்கிய முடிவு எதையும் எடுக்காவிட்டால், கடன் தர வரிசை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தர வரிசை குறைக்கப்பட்டால், இந்த நாடுகள் வாங்கும் கடனுக்கான வட்டி அதிகமாகும். மேலும் இதன் விளைவாக ஒட்டுமொத்த ஐரோப்பிய மண்டலத்தின் தர வரிசையும் சரியவும் வாய்ப்புள்ளது. இதனால் தங்களது நிதிச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய நிலைக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நெருக்கப்பட்டுள்ளனர்,

பூசணிக்காய் லேகியம்!


அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பூசணிக்கு முக்கிய இடமுண்டு. சாம்பார், பச்சடி, கூட்டு என பல விதமாக சமைக்கப்படும் பூசணிக்காய் இனிப்பு நிறைந்தது. இதில் நீர்ச்சத்தும், உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகம் காணப்படுகின்றன. உடல் சூட்டை தணிக்கும் இக்காய் சிறுநீர் வியாதிகளை தீர்க்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மெக்ஸிகோ நாட்டில் பூசணி விதையில் இருந்து மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள கல்யாண பூசணியும், வெண்மை நிறமுள்ள பூசணியும் காணப்படுகிறது. பூசணிக்காயின் சதைப் பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

பெண்களுக்கு ஏற்ற வெண் பூசணி வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்

கொடிய நோய்களுக்கு மருந்து வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

உடல் வலி நீக்கும் ஆண்டுக்கணக்கில் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். பூசணிக்காயின் சதைப் பகுதியை எடுத்து வேகவைத்து சிறிது கற்கண்டு சேர்த்து தினம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

எழில் கூட்டும் பூசணி பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும். பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும். நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

தாது விருத்தி தரும் பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும். பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீரக நோய்கள் சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காய் லேகியம் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பூசணி லேகியம் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்படும். உடல் பொலிவுறும். 

யார் சாப்பிடக்கூடாது பூசாணிக்காயை அதிகம் சாப்பிட்டால் பித்தத்தை கிளறி நெஞ்செறிச்சலை ஏற்படுத்தும். வயிற்றில் புளிப்பு ஏற்பட்டு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இக்காயை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்பட்டு விடும்.

நட்பு அழைப்பா கவனம்...


பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களை தினமும் பயன்படுத்துபவரா?அப்படியெனில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த ரகசியங்களை களவாடிக் கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சட் கொஞ்சமாக திருடுவதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. 

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. எனவே நண்பர்களின் போர்வையில் வலம் வரும் இந்த சமூக விரோதிகளிடம் இருந்து இளைய தலைமுறையினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நட்பு தேடி யாராவது விருப்பம் தெரிவித்தால் உடனடியாக அதை ஒத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் ஆய்வு பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து நடத்தப்படும் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. மைக்ரோசாஃப்ட் நடத்திய இந்த ஆய்வில் ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதாக எச்சரித்துள்ளனர்.

12 மடங்கு அதிகம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

நட்பு அழைப்பா கவனம் ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள். பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.

அதிகரிக்கும் மோசடி சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்து வந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

புகைப்படங்கள் எச்சரிக்கை இதேபோல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை இணைக்கும் பெண்களும் புகைப்படங்களை இணைக்கும் முன் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் இந்த புகைப்படங்களை ஹேக் செய்து ஆபாச இணையதள பக்கங்களில் உலாவ விடும் கும்பலின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்ளும் முன் ஆராய்ந்து எஸ் சொல்ல வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நைட் ஷிப்ட் வேலையால் நீரிழிவு ...


அடிக்கடி நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள். உங்களுக்கு டைப் 2 நீரிழிவு வர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. கைநிறைய சம்பளம், வாரத்திற்கு இரண்டுநாள் விடுமுறை என கால் சென்டர் கலாச்சாரம் தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. இளைய தலைமுறையினர் பலரும் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிய உடன் கால் சென்டர்களில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். மாலையில் வீட்டை விட்டு கிளம்பி விடிய விடிய வேலை பார்த்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பும் இளம் பெண்கள் அதிகரித்துவிட்டது. இவர்கள் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் உடல் நிறைய நோயை வாங்கிக் கொள்கின்றனர் என்பது அதிர்ச்சி கரமான உண்மை.

டைப் 2 நீரிழிவு நோய் காலை நேரத்திலும், ரெகுலர் ஷிப்ட் முறையிலும் வேலை பார்ப்பவர்களை விட முறையற்ற இரவு நேர பணிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று முதல் ஒன்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 20 சதவிகிதம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் 10 முதல் 19 ஆண்டுகள் இரவு பணி புரிபவர்களுக்கு 40 சதவிகிதமும், 20 ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேர ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு 58 சதவிகிதம் வரை டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஹெஎஸ்பிஹெச் சின் ஆசிரியர் ஆன் பான், வருடக்கணக்கில் முறையற்ற இரவு பணி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

தெளிவான நம்பர் பிளேட் பொருத்த உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை!


வாகனங்களில் தெளிவான பதிவு எண் பலகைகள் பொருத்தும் திட்டத்தை, நான்கு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவின் காரணமாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் வாகனங்களில் பதிவெண் எழுத மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி 50 சி.சி.,க்கு குறைவாக உள்ள டூ வீலரில் 15 மி.மீ., உயரம், 2.5 மி.மீ., பருமன் 2.5 மி.மீ., எண் எழுதி இடைவெளி 2.5 மி.மீ., விட வேண்டும். இதே 50 சி.சி., க்கு மேல் உள்ள டூவீலரில் 30 மி.மீ., பருமன் 5 மி.மீ., இடைவெளி 5 மி.மீ., விட வேண்டும்.மூன்று சக்கர வாகனங்களுக்கு 35 மி.மீ., பருமன் 7 மி.மீ., இடைவெளி 5 மி.மீ., மற்றும் மற்ற வாகனங்களுக்கு 40 மி.மீ., பருமன் 7 மி.மீ., இடைவெளி 5 மி.மீ., என்ற அளவில் பதிவெண் எழுத வேண்டும். 

அரசின் இவ்விதிமுறையை 10 சதவீத வாகன ஒட்டிகள் கூட பின்பற்றுவதில்லை. பெரும்பாலான வாகனங்களில் எழுதப்பட்டுள்ள எண்கள் தெளிவாக தெரிவதில்லை. விபத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும் சமயங்களில், வாகனத்தின் பதிவெண்ணை பார்க்க முடியாதபடி, வளைத்தும், நெளித்தும் நம்பர்களை ஸ்டைலாக எழுதுகின்றனர். விபத்துகளில் சிக்கும் வாகனங்களை கண்டறியும் பொருட்டு, போக்குவரத்து மோட்டார் வாகன விதிப்படி, கண்டிப்பாக பதிவெண் எழுத உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு இதனிடையே அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பின் இயக்குநர் எம்.எஸ் பிட்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் வாகனங்களில் தெளிவான பதிவெண் பலகையை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். 

உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அதன்படி அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாகவும் தமது மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த தலைமைநீதிபதி எஸ்.ஹெச் கபாடியா தலைமையிலான பெஞ்ச், மாநில அரசுகளுக்கு பலமுறை அறிவுறுத்தியும் வாகன பதிவெண் பலகையை அமல்படுத்துவதில் உறுதியான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். எனவே இந்த விவகாரத்தில், இனிமேலும் கால நீட்டிப்பு செய்யப் போவதில்லை என்று கூறிய நீதிபதிகள் வாகனங்களில் தெளிவான பதிவு எண் பலகைகள் பொருத்தும் திட்டத்தை, நான்கு வாரங்களுக்குள் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுத்தனர். இதனை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

பத்து ஆண்டுகள் மோசடியான வாகனப் பதிவு எண் பலகைகளைப் பொருத்தி, பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதனை நடைமுறைப்படுத்துமாறு, உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசுகள், இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறித்தியும் மாநில அரசுகள் பதிவெண் பலகையை அமல்படுத்துவதில் சுணக்கம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த ராஜபக்சே!


கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆற்றிய உரையை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொழில்ரீதியான பிரச்சார (லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பெல் பாட்டின்ஜர் (Bell Pottinger) என்ற நிறுவனம் தான் அதை எழுதிக் கொடுத்துள்ளது. ராஜபக்சே ஐ.நா.வில் வாசித்த அந்த உரையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் தொடர்பாகவே உள்ளது. அது, ஒரு அரசாங்கம் தீவிரவாதிகளுடன் நடத்தும் போர் தொடர்பாக இல்லை. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தையும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஜெனீவா ஒப்பந்ததையும் திருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த உரையை பெல் பாட்டிஞ்ஜர் என்ற நிறுவனத்தை வைத்து ராஜபக்சே தயாரித்ததாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்தின் த இன்டிபெண்டன்ட் நாளிதழின் நிருபரிடம் கூறியுள்ளார். இந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ. 3 கோடியை இலங்கை அரசு தந்துள்ளது. இங்கிலாந்து. ஐ.நா., ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளை இலங்கைக்கு ஆதரவாகத் திருப்ப இந்த நிறுவனம் மூலம் இலங்கை அரசு முயன்றுள்ளதாகவும் இன்டிபெண்டன்ட் கூறியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை இலங்கை அரசு வழக்கம் போல் மறுத்துள்ளது.

இந்தோனேஷியாவில் ராஜபக்சே: இந் நிலையில் அதிபர் ராஜபக்சே இன்று இந்தோனேஷியாவிலுள்ள பாலித் தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியா அரசு ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக அரங்கம் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 54 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையில் ரஷ்ய ஆயுதப் பராமரிப்பு நிலையங்கள்: இதற்கிடையே இலங்கையில் ஆயுத பராமரிப்பு நிலையங்களை அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வாய்ஸ் ஆப் ரஷ்யா வானொலி தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்யா இலங்கைக்கு எம்.ஐ ரக 4 ஹெலிகாப்டர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஹெலிகாப்டர்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

சந்திரகிரகணம் பரிகாரம் செய்ய வேண்டியது யார்?

10ல் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும். முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது. தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன.

அங்காரகன் மகிமை கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர். கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

லட்சுமி அம்சம் திருக்கார்த்திகை தினத்தன்று, கிலியஞ்சட்டி எனப்படும் களி மண்ணால் செய்யப்படும் விளக்கில் பசு நெய் அல்லது நல்ண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, "சிவசக்தி' சொரூப மாகிறது.

விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள், வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் கிரகலட்சுமியாகவும் இருப்பதாக ஐதீகம். ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நட்டுவைத்து அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் பொருளாக அறிஞர்கள் கூறுகின்றனர். 

கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது. பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. 

பொறி உருண்டை கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகள் குறித்து அரசிடம் தகவல் இல்லை...


இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் அரசிடம் இல்லை என்று மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்து மத்திய மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி, "இந்தியாவில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை வரைமுறைப்படுத்துவதற்கான சட்டம் என்று எதுவுமில்லாத நிலையில், அந்த வெளிநாட்டுப் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அரசிடம் இல்லை. அதேசமயம், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE), வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்கான விதிமுறையை வகுத்துள்ளது.
இந்த விதிமுறைகளின்கீழ், இதுவரை மொத்தம் 6 கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை AICTE அங்கீகரித்துள்ளது. வெளிநாட்டுப் பல்கலைகள் இந்தியாவில் இயங்குவது குறித்த எந்த ஆய்வையும் அரசு நடத்தவில்லை. அதேசமயம், இந்தியாவின் நிகர்நிலைப் பல்கலைகளில் ஒன்றான கல்வி திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகம், ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ள 143 இந்தியக் கல்வி நிறுவனங்களையும், 161 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களையும் அடையாளம் கண்டுள்ளது. ஒத்துழைப்புகளின் மொத்த எண்ணிக்கை 230. அவற்றில் 86 ஒப்பந்தங்கள் பிரிட்டன் கல்வி நிறுவனங்களுக்கும், 79 அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கும் உரியவை" என்று அமைச்சர் கூறினார்.

வேலைதேடுதல் ஒரு திட்டமிட்ட செயல்பாடு...


பொருத்தமான வேலையைத் தேடுதல் என்பது பலருக்கும், அலுப்புத் தரக்கூடிய, வலிமிகுந்த மற்றும் எரிச்சலான செயல்பாடு. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எந்தவித செயல்பாட்டிற்கும், முறையான திட்டமிடல் என்பது கட்டாயம் வேண்டும். அந்தவகையில் வேலைதேடும் படலத்திற்கும் சரியான திட்டமிடல் வேண்டும். தொழில்முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுதல், உங்கள் ஆர்வத்தை அறிந்து, எதிர்கால திட்டங்களை நீங்களே வகுத்துக் கொள்ளுதல், உங்களின் பின்னணியை பகுப்பாய்வு செய்தல், உங்களின் தகுதி மற்றும் திறன்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பொருத்தமான பணி வாய்ப்புகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியதுதான் வேலை தேடுதல் செயல்முறை.
தொழில்முறை தொடர்புகள் உங்களின் தொழில்சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது, வேலை தேடுதலில் முதல்நிலை செயல்பாடாகும். உங்களின் துறை சார்ந்த நிபுணர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்வதானது, நீங்கள் பொருத்தமான பணியைப் பெறுவதில் பேருதவி புரியும்.தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்துவதில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக காணலாம்.
உங்களது ஆசிரியர்களுடனான தொடர்பு உங்களது ஆசிரியர்களுக்கு, உங்களின் படிப்பு சார்ந்த தொழில்துறை ஆசிரியர்களுடன் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுதொடர்பாக ஆசிரியர்களுடன் நீங்கள் கலந்துரையாடுவது நல்லது. அவர்களுக்கு, உங்களின் திறமைகள், குடும்ப சூழல், குண நலன்கள் மற்றும் தகுதிகள் குறித்து பெருமளவு தெரிந்திருக்கும். பல மாணவர்கள், தங்களுடைய ஆசிரியர்களின் உதவிகளால் நல்ல பணிகளைப் பெற்ற உதாரணங்கள் அதிகம் உண்டு.
பள்ளி, கல்லூரி நண்பர்களுடனான தொடர்பு வேலை விஷயத்தில், பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் செய்யும் உதவிகள் முக்கியமானவை. பள்ளியைவிட, மேற்படிப்பு நிலையமான கல்லூரி தோழர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஏனெனில் நீங்கள் இருவரும் ஒரே துறை சார்ந்த படிப்பையே முடித்திருப்பீர்கள். எனவே, உங்களின் வகுப்புத் தோழர் ஒரு நல்ல பணியில் இருந்தால், அவருடன் உங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தால், உங்களுக்கும் நல்ல வாய்ப்புக் கிடைக்க அவர் துணைபுரிவார். பிற துறைகளில் படித்த நண்பர்களாக இருந்தால், தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் உங்களை அறிமுகம் செய்துவைத்து, உங்களுக்கு துணைபுரிவார்கள். எனவே, யார் தொடர்பையும் எளிதாக நினைத்துவிட வேண்டாம்.
பழைய மாணவர்களுடனான தொடர்பு உங்களுடைய பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் தொடர்பு உங்களுக்கு முக்கியமானது. நீங்கள் படிக்கும்போது சீனியர்களாகவும் அல்லது நீங்கள் அங்கே சேரும் முன்பாகவே சீனியர்களாகவும் அவர்கள் இருக்கலாம் மற்றும் இருந்திருக்கலாம். அவர்கள் உங்களுக்கு முன்பாகவே பணி அனுபவத்தைப் பெற்றவர்கள். எனவே, உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர்கள் நிச்சயம் துணைபுரிவார்கள். இதைத்தவிர, அவர்களின் மூலமாக, துறை நிபுணர்கள் மற்றும் வெற்றிபெற்ற தொழில்துறையினரின் தொடர்பும் உங்களுக்கு கிடைக்கலாம்.
பயிற்சிகளின்போது தொடர்பை ஏற்படுத்துதல் பயிற்சி திட்டங்கள், படிப்பின்போதான பயிற்சி(Internship), கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளும் தருணங்களில், அங்கே வரும் தொழில்முறை சார்ந்தவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடம், எக்காரணம் கொண்டும் எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்தாமல், நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அவர்கள் உங்களின்பால் கவரப்பட்டு, உங்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தொழில்முறை அமைப்புகளில் இணைதல் தொழில்முறை அமைப்புகள் நடத்தும் மீட்டிங்குகள் மற்றும் மாநாடுகளில் கலந்துகொள்ள வேண்டும். இதன்பொருட்டு, நீங்கள் சார்ந்த தொழில்முறை அமைப்புகளில்(Professional organisations) உறுப்பினராக சேர வேண்டும். மேற்கூறிய கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமாக, பலவித நிபுணர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களின் தொடர்பு ஏற்பட்டு, அவர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படலாம்.

8 இந்திய மொழிகளில் மெயில் சேவை யாஹூ இந்தியா...


இன்டர்நெட் துறை நிறுவனமான யாஹூ இந்தியா, தற்போது 8 இந்திய தேசிய மொழிகளில் மெயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தி, பெங்காலி மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவை வழங்க உள்ளது. புதிய யாஹூ மெயில் சேவையில் 22 புதிய மொழிகள் உள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள 16 நாடுகளில் 46 முதல் 70 சந்தைகளில் யாஹூ மெயில் செயல்பட்டு வருகிறது.

மஸ்கட்டில் தேவா,எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சாதனையாளர் விருது!







 மஸ்கட் தமிழ்ச் சங்கம், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்
‘தேனிசைத் தென்றல்’தேவா மற்றும் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி
ஆகியோருக்கு திரைப்படத் துறையில் அவர்கள் செய்த சாதனைகளை
கௌரவிக்கும் வகையில், 6000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் நடை பெற்ற
‘கீதம் சங்கீதம்’ என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியில் ‘வாழ்நாள் சாதனையாளர்’
விருது வழங்கி கௌரவித்தது. திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக்,
பாடகிகள் சுசித்ரா, சைந்தவி, சென்னை ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர்
இணைந்து வழங்கிய 4 மணி நேர திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி அனைத்து
பார்வையாளர்களையும் இசைக் கடலில் ஆழ்த்தியது. டி.வி புகழ்
சிவகார்த்திகேயன் வழங்கிய நகைச்சுவையுடன் கூடிய தொகுப்புப் பேச்சும்,
மிமிக்ரியும் பார்வையாளர்கள் அனைவரையும் சிரிப்புப் பிரவாகத்தில்
ஆழ்த்தியது. ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடிய ‘கவலைப் படாதே சகோதரா’
என்ற பாடலும் மற்ற பாடல்களும் கைதட்டல்களை அள்ளிச் சென்றன.
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்ற மெல்லிசைப்
பாடல் காதில் ரீங்காரமாய் ஒலித்து, மூத்த ரசிகர்களை இளமைக் காலத்திற்கு
இழுத்துச் சென்றது. ‘ எலந்தப் பழம்...எலந்தப் பழம்..’ பாடல் பார்வையாளர்களை
இருக்கையை விட்டு எழுந்து நடனம் ஆடச் செய்தது. இளம் பார்வையளர்களின்
ரசனைக்கேற்ற பாடல்களைப் பாடி கார்த்திக்கும், சுசித்ராவும் அவர்களைக்
கட்டிப் போட்டனர். முன்னதாக தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய்
வாழ்த்துடன் விழா தொடங்கியது. ரகுமுத்துக் குமார் நன்றியுரை வழங்கினார்.

இதே நாள்...

  • சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது(1949)
  •  இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது1864)
  •  ருமேனியா அரசியலமைப்பு தினம்
  •  பனாமா அன்னையர் தினம்


ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் டைம் இதழின் இந்த ஆண்டுக்கான டாப் 10 செய்திகளில்!


Anna Hazare's anti-corruption movement that saw Indians rally in support has been named among the top 10 news stories in the world this year by Time magazine, which listed the Arab Spring and killing of Osama bin Laden as the top attention-grabbing headlines. Time magazine compiled 54 wide-ranging lists of the top 10 happenings in 2011 in the field of politics, entertainment, business, sports and pop culture. Among the 'Top 10 World-News Stories' is "Anna Hazare's Hunger Fasts Rock India" with the magazine saying that "in a year with more than its share of protests worldwide, perhaps the most striking act of dissent took place in India, where the country's ruling coalition took flak for a host of corruption cases implicating a number of leading politicians". 

அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்த செய்தி டைம் இதழின் இந்த ஆண்டுக்கான டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளது. அண்ணா ஹசாரே போராட்டச் செய்தியைப் போலவே லிபிய அதிபர் கடாபியின் வீழ்ச்சி, ஒசாமா பின்லேடன் படுகொலை உள்ளிட்ட செய்திகளும் டாப் 10 வரிசையில் இடம்பெற்றுள்ளன. மேலும் 2011-ம் ஆண்டின் மதம் தொடர்பான செய்திகளில் சாய்பாபா மறைவு குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, வணிகம், விளையாட்டு மற்றும் பாப் கலாச்சாரம் ஆகிய தளங்களில் 2011-ம் ஆண்டு ஒவ்வொன்றிலும் நிகழ்ந்த 10 முக்கிய சம்பவங்களை டைம் இதழ் தொகுத்துள்ளது.

Top 10 Gadgets of 2011


பியூன் வீட்டில் ரூ12 கோடி சொத்து... Madhya Pradesh peon worth Rs.12 crore...




மத்தியப் பிரதேசத்தில் பியூன் ஒருவரிடம் 12 கோடி ரூபாய் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. உஜ்ஜைன் நகராட்சியில் நான்காம் நிலை ஊழியராக பணியாற்றும் நரேந்திர தேஷ்முக் என்பவரின் வீட்டை லோக்ஆயுக்த போலீசார் சோதனையிட்டதில் இது தெரியவந்துள்ளது. லோக்ஆயுக்த எஸ்பி அருண் மிஷ்ரா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நரேந்திர தேஷ்முக்கின் வீட்டில் சோதனை நடத்தினர். தேஷ்முக் பியூனாக இருந்தாலும் அவரிடம் 2 வீடுகள், ஏராளமான ஏக்கர் நிலங்கள், ஒரு கோழிப் பண்ணை மற்றும் ஒரு பண்ணை வீடு ஆகியவை அவரிடம் உள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன என மிஷ்ரா தெரிவித்தார். மேலும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு தொழிற்சாலையில் அவருக்கு பங்கு உள்ளது. 10 வங்கிக் கணக்குகளை அவர் பராமரித்து வருகிறார். மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்திலும் அவருக்கு நிலம் உள்ளது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

2ஜி வழக்கு சுவாமியின் மனு ஏற்பு...


 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை விளக்குவதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று காலை அனுமதி அளித்தது. தம்பரத்துக்கு எதிரான புகார் குறித்து டிசம்பர் 17-ம் தேதி சுவாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சுவாமியின் விளக்கத்துக்குப் பிறகு 2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் துணைக் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யும். மேலும் சிதம்பரத்துக்கு எதிரான தனது புகார் குறித்து விசாரிக்க 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
சிபிஐ இணை இயக்குநர் ஒருவரையும், நிதித்துறை இணைச் செயலர் ஒருவரையும் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து சுவாமி கூறுகையில், என்னுடைய மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. முதலில் என்னிடம் விசாரணை நடத்த உள்ளது. 2 அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று நான் விருப்பம் தெரிவித்துள்ளேன். டிசம்பர் 17-ம் தேதி நான் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியம் அளிப்பேன். அதன்பின்னர் 2 அதிகாரிகளை சாட்சியம் அளிக்க அழைப்பதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார். 

சட்டத்தால் சாதிக்க முடியாததை கேரளா வன்முறையால் சாதிக்க முற்படுகிறது சீமான்!


சட்டரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்க முற்படுகிறது கேரள மாநில அரசு என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக அம்மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களாகும். 116 ஆண்டுகள் பழைமையாகிவிட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது, அது நிலநடுக்கத்திற்குத் தாங்காது உடைந்து விடலாம், அப்படி உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டத்தின் பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்றெல்லாம் கால் நூற்றாண்டாக, கேரள மாநில அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் பரப்புரை செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமெடுத்து, அதனை கேரள மாநில திரையரங்குகளில் போட்டுக்காட்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அம்மக்களை தூண்டி வந்தன. இப்போது கேரள அரசே நிதியுதவி செய்து ஒரு பெரிய படமொன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் எவ்வித பாதிப்பும் இன்றி மலைபோல் உறுதியாக முல்லைப் பெரியாறு அணை நின்றுக்கொண்டிருக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணை உள்ள இடத்தில் நிலநடுக்கம் ஏற்பாட்டல் அது உடைந்துவிடும் என்ற கேரள அரசின் பரப்புரை எந்த அளவிற்குத் தவறானது என்பதை நிரூபிக்க, 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நடந்த நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டலாம். ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவுகோலுக்கு நடந்த அந்த நிலநடுக்கத்தில் 10,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்த கொய்னா அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவும் முல்லைப் பெரியாறு அணையைப் போல் பழைய முறையில் கட்டப்பட்ட (Masonry Dam) அணைதான். எனவே நிலநடுக்கப் பூச்சிகாட்டல் அடிப்படையற்றது என்பது கட்டடப் பொறியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத கேரள அரசு, அப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவந்து சிக்கலாக்கவே இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலை தூண்டி வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்கத் துணிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த அராஜக விளையாட்டு எப்போது தொடங்கியுள்ளது என்று பார்த்தாலே, இதன் பின்னணியில் உள்ள சதி புரியும். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகே தமிழக மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றிவிட்டுத்  திரும்பிய தமிழ்நாட்டுப் பெண்கள் சிலரின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு கட்சிக்காரர்கள் அணையை உடைப்போம் என்று கூறிக்கொண்டு அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேரள மாநில காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்துள்ளனர். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க கேரள, தமிழக முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கம், பிரச்னையை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து மீட்டு, பேச்சுவார்த்தை என்ற வலையில் தமிழகத்தை சிக்க வைத்து, அணையை உடைக்க கேரள அரசிற்கு சாதமான தீர்வைத் திணிக்கவே என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை குறித்த திட்டத்தை அளிக்குமாறு உம்மன் சாண்டியிடம் பவன் குமார் பன்சல் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதன் பிறகு, 25ஆம் தேதி கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை கோரிக்கையை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே உம்மன் சாண்டி பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்று கூடியே இந்த பேச்சுவார்த்தை சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன. எனவே,  பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த நீதிமன்ற வழியே சரியானது, அதனை விட்டு ஒருபோதும் தமிழக அரசு விலகக் கூடாது. 1979ஆம் ஆண்டு அணை பலவீனமான இருக்கிறது என்று கூறி நீர்தேக்கம் அளவை 152 அடியில் இருந்து 136 அடிக்கு குறைத்த கேரள அரசு, அதனை 120 அடிக்குக் குறைக்க வேண்டும் என்று நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்று, அம்மாநில கட்சிகளின் இந்நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியது ஏன் என்று புரியவில்லை. எனவே, தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் வன்முறையானது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழினத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே என்பதை புரிந்துகொண்டு, கேரள அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். இந்த உண்மையை தென்தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 17, 18ஆம் தேதிகளில் நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும். அப்பகுதியில் பொதுக் கூட்டங்களை நடத்தி கேரள அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தை தமிழர்களிடையே பகிரங்கப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை தமிழினத்தின் சொத்து, அதனை விட்டுவிடாமல் கட்டிக்காத்து தமிழினத்தின் உரிமையை நிலைநிறுத்துவோம்.

வெள்ளித்திரையில் மீண்டும் வடிவேலு!


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் வடிவேலுவை மக்கள் காண உள்ளார்கள். பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க எந்த இயக்குநரும் முன்வரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்ட மம்பட்டியான் திரைப்படம்  டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் வடிவேலு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேவாக், 149 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 219 ரன்கள் எடுத்து உலக சாதனை!

இந்தூரில் நடந்து வரும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்திருந்தார். வீரேந்திர சேவாக் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.   டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும் கம்பீரும் களம் இறங்கினர். நீண்ட நாட்களுக்குப் பின் ஜோடியாக களம் இறங்கிய இவர்கள் இருவரும் துவக்கம் முதலே அடித்து விளையாடத் துவங்கினர். பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரின் பந்துவீச்சுகளை சிதறடித்த இருவரும் 23 வதுஓவரில் 176 ரன்களை முதல் விக்கெட்டுக்கு சேர்த்தனர். கம்பீர் 67 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இவர் 67 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை சேர்த்தார். 

தொடர்ந்து சேவாக்குடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 44 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.  இவரும் ரன் அவுட் ஆக, இரண்டாவது விக்கெட் 316 ரன்களில் விழுந்தது. இந்நிலையில் அடுத்து வந்த  ஜடேஜா 10 ரன்களே எடுத்தார். அணித் தலைவராக களம் இறங்கி ரன்களைக் குவித்த சேவாக், 149 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 219 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக பட்ச ரன்கள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்தார். பின்னர் ஆடிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

கோலி 23 ரன்களும், படேல் 3 ரன்னும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்களைக் குவித்தது. ஒருநாள் கிரிகெட் போட்டி அரங்கில், இந்திய அணி 400 ரன்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும். இன்று எடுக்கப்பட்ட 418 ரன்களே இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...