பொருளாதாரரீதியில் தன்னைவிட பலவீனமான நாடா.. ராணுவ பலத்தைக் காட்டி
மிரட்டு. ராணுவ பலத்தில் தன்னைவிட பலசாலியா பொருளாதாரரீதியில் மடக்கு..
இது தான் சீனாவின் வெளியுறவுக் கொள்கை.
அருணாசலப் பிரதேசத்தில்
அவ்வப்போது தனது ராணுவத்தினரை நுழைய விட்டு அங்குள்ள பாறைகளில் சிவப்பு
நிற பெயிண்டை பூசிவிட்டுப் போவது சீனாவின் வாடிக்கை.. அதாவது 'இந்த ஏரியா
எல்லாம் என்னுடையது' என்று மறைமுகமாகச் சொல்கிறது சீனா.
அதே
நேரத்தில் ஆப்ரிக்க நாடுகளை பணத்தைக் கொடுத்து மடக்கி அந்த நாடுகளில்
மாபெரும் திட்டப் பணிகளுக்கான காண்ட்ராக்ட்களைப் பெறுவதிலாகட்டும், அந்த
நாடுகளின் இரும்பு உள்ளிட்ட தாது சுரங்கங்களை மொத்தமாக வாங்குவதாகட்டும்,
ஈரான்-வட கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆயுத உதவிகள் தந்து அவர்களை தன் பக்கம்
இழுப்பதிலாகட்டும், இந்தியாவுக்கு தென் பகுதியிலும் தொல்லை தர இலங்கைக்கு
உதவிகள் செய்வதிலாகட்டும், ரஷ்யாவிடம் மோதல் போக்கை கையாளமால் தனது வட
பகுதி எல்லையில் அமைதியைப் பேணுவதிலாகட்டும் சீனாவுக்கு இணையான ஒரு
ராஜதந்திர நாடு இப்போதைக்கு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட சீனா, அமெரிக்காவை மட்டும் விட்டு வைக்குமா?. விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. அமெரிக்கா மூன்று வகைகளில் சீனாவிடம் 'சிக்கியுள்ளது' என்று சொல்லாம்.
ஒன்று
பிளேடுகளில் ஆரம்பித்து துணிகள் வரை அமெரிக்கா தனது நாட்டின் அடிப்படைத்
தேவையைப் பூர்த்தி செய்ய பெருமளவில் சார்ந்துள்ள நாடு சீனா தான்.
அமெரிக்காவில் ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கி, நடத்தி ஒரு பாட்டிலை
தயார் செய்வதற்குக் கூட பல மில்லியன் டாலர் செலவாகும். இதனால், மக்கள்
பெருவாரியாக பயன்படுத்தும் அடிப்படைப் பொருட்களைக் கூட அமெரிக்கா
தயாரிப்பதில்லை. இதில் பெரும் தேவையை பூர்த்தி செய்வது சீனா தான்.
அமெரிக்காவின் பெரும் ஸ்டோர்கள் சீன இறக்குமதிகளையே பாதிக்கும் அதிகமாக
சார்ந்துள்ளன என்று கூட சொல்லலாம்.
இரண்டாவது.. ஆசிய
பிராந்தியத்தின் பெரும் பரப்பில் விரிந்து கிடக்கும் சீனாவை பகைத்துக்
கொண்டு இந்தப் பகுதியில் அமெரிக்கா ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட
முடியாத நிலை. ஆப்கானி்ஸ்தான் விவகாரம், இராக் மீது போர் உள்ளிட்ட அனைத்து
விவகாரங்களிலும் சீனாவின் அனுமதி இல்லாமல் ஐ.நா.வில் அமெரிக்காவால் ஒரு
தீர்மானத்தைக் கூட நிறைவேற்றியிருக்க முடியாது.
ஐரோப்பிய நாடுகள்
பெரும்பாலும் அமெரிக்கா பக்கமே நின்றாலும், ரஷ்யா-சீனா ஆகிய நாடுகள்
உதவியில்லாமல் ஐக்கிய நாடுகள் சபையை தனது இஷ்டத்துக்கு அமெரிக்காவால்
ஆட்டுவிக்க முடியாது. இதில் ரஷ்யா தனது உலகளாவிய கனவுகளை எல்லாம்
இப்போதைக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு, 'கேபிடலிஸ்ட்' பொருளாதாரப்
பாதையில் அமெரிக்காவை அப்படியே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டது.
இப்போதைக்கு சர்வதேச விவகாரங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதை
விட்டுவிட்டு தனது பொருளாதாரத்தை பலப்படுத்திலேயே தீவிரமாக உள்ளது ரஷ்யா.
அதற்கு அமெரிக்கா, ஐரோப்பாவின் உதவியும் தேவை என்பதால், அமெரிக்காவுடன்
ரஷ்யா மோதல் போக்கை கையாளுவதே இல்லை.
ஆனால், சீனா அப்படியில்லை.
ஆசிய பிராந்தியத்தையும் தாண்டி தனது செல்வாக்கை நிலை நிறுத்தும் பெரிய கனவு
கண்டு வருகிறது. இதனால், அவ்வப்போது அமெரிக்காவுடன் மோதலைக் கையாளவும்
சீனா தயங்குவதில்லை. ஆனால், அதை ஒரு அளவோடு.. தைவான், வட கொரியா ஆகிய
நாடுகளின் விவகாரங்களோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறது சீனா.
அருணாசலப்
பிரதேசம் மாதிரி தைவானும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறும் சீனா, அதை
அப்படியே ஆக்கிரமிக்க முயல்கிறது. சீனாவிடமிருந்து தப்புவதற்காக
அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களை இறக்குமதி
செய்து வருகிறது தைவான். உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான தைவான் தான்
உலகில் மிக அதிகமான ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் தருவதை எதிர்த்து சீனா அவ்வப்போது 'சவுண்டு
விடுவது' வழக்கம்.
அதே போல சோமாலியா, ஆப்கானிஸ்தான், இராக் என
நினைத்த இடத்தில் எல்லாம் நினைத்த நேரத்தில் படைகளை அனுப்பி நாடுகளை
ஆக்கிரமித்த அமெரிக்காவால் இதுவரை வட கொரியாவை நோக்கி ஒரு துப்பாக்கிச்
சூடு நடத்த முடியவில்லை என்றால் அதற்கு முழுக் காரணம் சீனா தான். தென்
கொரியாவில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வட
கொரியாவுக்கு சீனா எல்லா வகையான உதவிகளையும் தந்து வருவதால், அந்த நாடு
அணு ஆயுதம் தயாரித்தால் கூட அமெரிக்கா அதை அமைதியாக வேடிக்கை பார்க்க
வேண்டிய நிலை. வட கொரியா விஷயத்தில் அமெரிக்காவை கையைக் கட்டி
போட்டுள்ளது சீனா.
இப்படி 'மாஸ் புரொடக்ஷன்', சர்வதேச விவகாரங்கள்
என அமெரிக்காவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, பொருளாதாரரீதியிலும்
அமெரிக்காவை எப்போதும் அச்சுறுத்தியே வருகிறது. அந்த வகையில் 3வது காரணம், சீனாவிடம் கையிருப்பில் உள்ள அமெரிக்காவின் 3.8 டிரில்லியன் டாலர்கள் பணம்.!
ஒரு
டிரில்லியன் என்றால் 1000000000000 (ஒரு லட்சம் கோடி). இதை முதலில் 3.8
ஆல் பெருக்கிவிட்டு பின்னர் 45 ஆல் பெருக்குங்கள்... அது தான் 3.8
டிரில்லியன் டாலர்!.இதில் 60 சதவீதத்தை டாலர்களாகவே வைத்துள்ளது
சீனா. அதில் 1.1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நாட்டின் கருவூலப்
பத்திரங்களில் (US Treasury bonds) முதலீடு செய்து நேரடியாக அமெரிக்கப்
பொருளாதாரத்தின் 'இதயத்தில் கை வைத்துள்ளது' சீனா.
இந்த டாலர்களை
சீனா ஒரு நாள் உலகச் சந்தையில் 'கொட்டினால்', அமெரிக்க டாலரின் மதிப்பு
நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குச் சரியும். அமெரிக்கப்
பொருளாதாரமும் ஒரே நாளில் முடங்கும். அதற்காகக் தான் இதை வாங்கி
வைத்துள்ளது சீனா!.தைவானுக்கு அமெரிக்கா தனது அதிநவீன போர்
விமானங்களைத் தரும்போதெல்லாம் ''டாலர்களை சந்தையில் கொட்டவா?'' என்று
அமெரிக்காவை சீனா மிரட்டுவது வழக்கம்.
அமெரிக்காவை தனது
கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா வைத்துள்ள 'பிரம்மாஸ்திரம்' இது. ஆனால்,
சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் இந்த
டாலர்களையே சீனாவுக்கு எதிராகத் திருப்பியுள்ளன..!
அது எப்படி..? ''சரி..
தைவானை ஆதரித்தால் சீனா நமது டாலர்களின் மதிப்பை சரித்துவிடுமே.. நமக்கு
எதுக்கு வம்பு' என்று அமெரிக்கா சும்மா இருக்கலாம் அல்லவா?.
அதைவிட்டுவிட்டு தைவானை அமெரிக்காவே தேடிப் போய் உதவிகள் செய்வது ஏன்?. ''நீ டாலர்களை சந்தையில் கொட்டித் தான் பாரேன்'' என்று சீனாவை சீண்டுவதற்காகத் தான்..!நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்தக் கடன் அளவை
அமெரிக்கா வெகு விரைவிலேயே எட்டி விடலாம் என்கிறார்கள் பொருளாதார
நிபுணர்கள். இதனால், நினைப்பதை விட மிக விரைவிலேயே மீண்டும் இந்த கடன்
வாங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படலாம்.
அப்படி
ஒரு நிலை வந்தால் டாலரின் மதிப்பு வெகுவாகவே சரியும். அப்படிச் சரிந்தால்,
முதல் அடி அமெரிக்காவுக்கு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உலகிலேயே
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான அளவில் டாலர்களை கையிருப்பில்
வைத்திருக்கும் சீனாவுக்குத் தான் பிற நாடுகளை விட பெரும் அடி விழலாம்
என்கிறார்கள் நிபுணர்கள்.
இதனால் இப்போது சீனாவிடம்
பிரம்மாஸ்திரமாக இருக்கும் டாலர்களே அந்த நாட்டின் பொருளாதாரத்தை
சீர்குலைக்கலாம். சீனாவின் ரிசர்வ் வங்கியான People's Bank of China தான்
இந்த 3.8 டிரில்லியன் டாலர்களை கையிருப்பில் வைத்துள்ளது. இந்த வங்கிக்கு
அடி விழுந்தால், சீனாவின் அனைத்து மட்டங்களிலும் அதன் பாதிப்பு படு
வேகத்தில் பரவும்.
இதனால் இவ்வளவு டாலர்களை சீனா கையில்
வைத்திருக்கும் வரை, அமெரிக்காவுக்கு எப்போதெல்லாம் பொருளாதார சிக்கல்
வருகிறதோ அப்போதெல்லாம் சீனாவுக்கு சிக்கல் தான்.
இதை உணர்ந்துள்ள
சீனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக டாலர்களைக் 'கரைத்துவிட்டு' அதை வேறு
நாட்டு கரன்சிகளாகவும் (யுரோ), தங்கமாகவும் மாற்றலாமா என்ற யோசனையில்
உள்ளது.
அதே போல டாலருக்கு எதிரான தனது நாட்டு கரன்சியான யுவானின்
(yuan) மதிப்பை அதிகரிப்பது குறித்தும் சீனா யோசித்து வருகிறது. இதுவரை
அமெரிக்காவே எத்தனையோ முறை கோரியும் கூட சீனா தனது கரன்சியின் மதிப்பை
அதிகரிக்கவே விட்டதில்லை. இதன்மூலம் டாலரின் மதிப்பை மிக அதிகமாகவே
வைத்திருந்து, சீன மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டுப் பொருட்களை
இறக்குமதி செய்வதை கஷ்டமான ஒரு விஷயமாகவே வைத்துள்ளது.
இ்ப்போது
தனது கரன்சியான யுவானின் மதிப்பை அதிகரித்துவிட்டால், டாலருக்குப் பதில்
வேறு நாட்டுக் கரன்சிகளை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் சீன ரிசர்வ்
வங்கிக்கு இல்லை. உயர்த்தப்பட்ட யுவானின் மதிப்பே, டாலரின் மதிப்பு
சரிவதால் ஏற்படும் இழப்பை சரி செய்துவிடும்.
ஆனால், சீன கரன்சியின்
மதிப்பு உயர்ந்தால் அதை வாங்க உலக நாடுகளிடையே, சர்வதேச
முதலீட்டாளர்களிடையே திடீரென போட்டி உருவாகும். சீனா எப்படி அமெரிக்க
டாலர்களை வாங்கி குவித்து வைத்துள்ளதோ, அதே போல பிற நாடுகள் யுவானை
வாங்கி குவிக்க முயலாலாம். இதனால் அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும்
அபாயமும் உள்ளது. ஆனால், அளவுக்கு மீறி யுவானின் மதிப்பு அதிகரித்தால், அது
சீனாவின் ஏற்றுமதியை பாதிக்கும்.
சீனாவைப் பொறுத்தவரை அதன்
பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்றுமதி தான். சீனாவின் ஒட்டு
மொத்த பொருளாதார வளர்ச்சியில் 40 சதவீதம் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது
(அதிலும் பெருமளவிலான ஏற்றுமதி நடப்பது அமெரிக்காவுக்குத் தான்). ஏற்றுமதி
குறைந்தால், சீன பொருளாதார வளர்ச்சி 3 முதல் 5 சதவீதம் சரியும்
என்கிறார்கள். மேலும் ஏற்றுமதி குறைந்தால் நாட்டில் வேலைவாய்ப்பு
திண்டாட்டம் ஏற்படும்.
சீனாவின் Center for Economic Research
நடத்தியுள்ள ஒரு ஆய்வின்படி, டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பு 20 சதவீதம்
அதிகரித்தால்.. (நான் மேலே 2 பாராக்களில் சொன்ன விஷயங்கள் நடந்து)
நாட்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் காலியாகும் என்று தெரியவந்துள்ளது.
இதனால் சீனாவின் கையில் உள்ள இந்த 3.8 டிரில்லியன் டாலர் என்பது.. சாதாரண சுமை அல்ல.. பெரும் சுமை!