தனியார் பள்ளிக்கு எதிராக பெற்றோர் அளித்த புகாரை விசாரிக்கும் உண்மை அறியும் குழு, தமிழக அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.
தனியார் பள்ளி அதிகக் கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் நடத்திய போராட்டத்தை விசாரிக்க கல்வியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் ஆய்வு அறிக்கை செவ்வாயன்று வெளியிடப்பட்டது. ஆய்வு அறிக்கையில், புகார் அளிக்கப்பட்ட பள்ளி நிர்வாகம் சென்னையில் மட்டும் 36 பள்ளிகளை நடத்துகிறது. இந்த பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சிகள் நடத்துவதாக கட்டாய கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களும் முறையான பயிற்சி பெற்றவர்கள் இல்லை. போதிய கட்டமைப்பு வசதியும் இல்லை.
கட்டணங்களைக் கட்டத் தவறும் குழந்தைகளை தனியாக அமர வைப்பது, மிரட்டுவது போன்ற செயல்களிலும் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி வணிகப் பொருளாகிவிட்டதால் படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகள் முழுமையாக அனைத்து அரசு அனுமதிகளையும் பெற்ற பின்னரே இயங்க அனுமதிக்க வேண்டும். இதற்குரிய சட்டத்திருத்தம் உடனடியாக செயல்பட வேண்டும். எந்த வகை பள்ளியானாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும். தமிழகத்தில் அனுமதி பெறாத பள்ளிகளை கண்டறிய குழு அமைத்து அனுமதி பெறாமல் நடத்தப்படும் பள்ளிகளின் பட்டியலை பத்திரிக்கைகளில் அரசு வெளியிட வேண்டும்.
அனுமதி பெறாமல் நடத்தப்படும் பள்ளிகளை மூடி, அதில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment