நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், திருச்சியைச் சேர்ந்த எட்டு பேர்
உட்பட 19 பேர் பலியாகினர். எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள்,
எதிர்பாராதவிதமாக துயர முடிவை சந்தித்தனர்.
நேபாளத்தின் புத்தா ஏர்லைன்ஸ் விமானம், விமான ஊழியர்கள் மூன்று பேர்
உள்ளிட்ட 19 பேருடன், தலைநகர் காத்மாண்டு அருகே நேற்று அதிகாலை பறந்த போது,
திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
காத்மாண்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தில்
கோட்தண்டா மலையில், இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது; சுக்குநூறாக
சிதறியது.இந்த விபத்தில் இந்தியர்கள் 10 பேர் உட்பட வெளிநாட்டவர்கள் 13
பேரும், மூன்று நேபாள பயணிகளும், மூன்று விமான ஊழியர்களும் பலியாகினர்.
பலியான இந்தியர்கள் 10 பேரில், எட்டு பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்.
இவர்கள், இந்திய பில்டர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். டில்லியில் நடந்த
மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் நேபாளம் சென்றுள்ளனர். எவரெஸ்ட்
சிகரத்தை பார்க்க விமானத்தில் சென்ற போது இந்த துயர விபத்து நடந்துள்ளது.
பலியான மற்றவர்களில் இரண்டு பேர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜப்பானியர்.பலியான
இந்தியர்களில் பங்கஜ்மேத்தாவும், அவரது மனைவி சாயாவும் அடங்குவர்.
பங்கஜ்மேத்தா, "யுனிசெப்' அமைப்பின் சுகாதார பிரிவின் தலைவராக இருந்தார்.
இந்த தம்பதியர் குஜராத்திலிருந்து நேபாளம் வந்துள்ளனர். காத்மாண்டில் உள்ள
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ
இடத்துக்கு சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக
கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, காத்மாண்டில் உள்ள
டி.யூ.மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
எட்டு பேர் தமிழர்கள்: திருச்சியை சேர்ந்த மருதாசலம், மணிமாறன்,
கனகசபேசன், கிருஷ்ணன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், தனசேகரன்,
மகாலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். நேபாள துணை பிரதமரும்,
உள்துறை அமைச்சருமான விஜயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். நேபாள
விமானத்துறை ஆணைய டைரக்டர் ஜெனரல் ஜாஜேஷ்ராஜ் தலைமையில் மூன்று பேர் கொண்ட
குழு இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த விமான விபத்தில்,
நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் முதலில் உயிர் பிழைத்தாலும், பலத்த காயம்
அடைந்திருந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி
இறந்தார். எவரெஸ்ட் சிகரத்தின் அழகையும், மற்ற சில சிகரங்களின் அழகையும்
விமானத்தில் சென்று ரசித்தவர்கள், இந்த துயர முடிவைச் சந்தித்தனர். விமானம்
தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன், இந்த விபத்து நடந்துள்ளது.
முதல்வர் இரங்கல்: நேபாள விமான விபத்தில் தமிழர்கள் பலியானதற்கு,
முதல்வர் ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள
இரங்கல் செய்தி:நேபாளத்தில், 19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம்
சுற்றுலாவை முடித்து விட்டு, காத்மாண்டு விமான நிலையத்தை நோக்கி திரும்பும்
வழியில், மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமானத்தில் பயணம்
செய்த 19 சுற்றுலா பயணிகளும் பலியான செய்தி கேட்டு மிகுந்த
துயரமடைந்தேன்.இந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்
என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. விமான விபத்தில்
மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும்,
அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இமயமலையில்,
எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிப் பார்க்க, தனியார் விமானத்தில் சுற்றுலா
சென்ற, 19 பயணிகள், நேற்று காலையில் விமானம் மலையில் மோதி நொறுங்கிய
காரணத்தால், பலியான செய்தியினைக் கேட்டு
அதிர்ச்சியடைந்தேன்.பலியானவர்களில், பத்துப் பேர் இந்தியர்கள் என்பதும்,
குறிப்பாக திருச்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் என்பதும், என் வேதனையை
அதிகப்படுத்தியதோடு, தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்
புதுக்கோட்டை ரகுபதி, திருச்சி செல்வராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலரும்,
இந்த விபத்தில் சிக்கி மாண்டார்கள் என்பது, பெரிதும் வேதனையை அளிக்கின்ற
செய்தி.பலியான அனைவரது குடும்பத்தினருக்கும், என் சார்பிலும், கழகத்தின்
சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என
தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு உதவி முதல்வர் ஜெ., உத்தரவு :
நேபாள விமான விபத்தில் உயிரிழந்த, திருச்சியைச் சேர்ந்தவர்களின்
குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கால்நடைத் துறை அமைச்சர்
சிவபதியை, முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:நேபாளத்தில்,
19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில்,
திருச்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் உட்பட, விமானத்தில் பயணித்த அனைவரும்
மரணமடைந்தனர். இவர்களின் மரணம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த
திருச்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற,
கால்நடைத் துறை அமைச்சர் சிவபதியை அனுப்பி வைத்துள்ளார்.மேலும், இந்த
விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, திருச்சிக்குக்
கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக,
இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை, நேபாளத் தலைநகர்
காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லுமாறும், தேவையான உதவிகளைச் செய்யுமாறும்,
திருச்சி எம்.பி., குமாருக்கு, முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் விமான விபத்துகள் : நேபாளத்தில் 1949ல் முதல்
முறையாக விமானம் தரையிறங்கியது. இதற்கு பின், இங்கு நடந்த 70 விமான
விபத்துகளில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டனர். இங்கு நடந்த பெரிய விமான
விபத்துகள்...
2011, செப். 25: லலித்பூர் அருகே "புத்தா' விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி.
2010, டிச. 16: கிழக்கு நேபாளத்தில்"தாரா'விமான விபத்தில் 22 பேர் பலி.
2010, அக். 8: லுக்ளா மாவட்டத்தில் "அக்னி' விமானத்தில் 14 பேர் பலி.
2008, மார்ச் 3:
மாவோயிஸ்ட் ராணுவ முகாமிற்கு சென்று விட்டு, திரும்பும் வழியில் ஐ.நா.,
ஹெலிகாப்டர் கிழக்கு நேபாள பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி.
2006, செப். 24: கிழக்கு நேபாளத்தில் "ஸ்ரீ ஏர்' விமான விபத்தில் 24 பேர் மரணம்.
2006, ஜூலை, 27: டேடல்ஹுரா அருகே நடந்த ராயல் நேபாளம் ஏர்லைன்ஸ் விபத்தில் 25 பேர் பலி.
1992, செப். 28: லலித்பூர் அருகே உள்ள பட்டேடண்டாவில் பி.ஐ.ஏ., ஏர்பஸ் ஏ-300 விமானம் நொறுங்கி விழுந்ததில் 167 பேர் பலி.
1992, ஜூலை 31: கியாங்பேடி அருகே "தாய் ஏர்வேஸ்' ஏர்பஸ் ஏ-310 விமான விபத்தில் 113 பேர் பலி.