நாட்டில் உள்ள தூர்தர்ஷன் நிலையங்களிலேயே சென்னை தூர்தர்ஷன்தான் அதிக
அளவிலான தேசபக்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, தேச பக்தியில் சிறந்தவர்கள்
தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.தேச
பக்திப் பாடல்கள், நாடகங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த
நிகழ்ச்சிகள் என தேசம் சார்ந்த நிகழ்ச்சிகளை, தேச பக்தி நிகழ்ச்சிகளை
தொடர்ந்து ஒளிபரப்பி வரும் ஒரே தொலைக்காட்சி நிறுவனம் மத்திய அரசின்
தூர்தர்ஷன் மட்டும்தான்.
தனியார் தொலைக்காட்சி நிலையங்களில் இவற்றை
சற்றும் எதிர்பார்க்க முடியாது. அவர்களும் கூட விரல் விட்டு எண்ணக் கூடிய
அளவுக்குத்தான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அதுவும் கூட சில
டிவிகளில் பார்க்க முடியாது. சுதந்திர தினம், குடியரசு தினம்,
மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்ற நாட்களில் கூட இந்த தனியார்
தொலைக்காட்சிகள் தேச பக்தி நிகழ்ச்சிகளைப் போடுவதில்லை. மாறாக நீங்கள்
நடித்த படங்களில் கவர்ச்சி மிதமிஞ்சி நிற்கிறதே அது எப்படி என்று ஏதாவது
ஒரு நடிகையிடம், ஏதாவது ஒரு டிவி தொகுப்பாளர் படு கவனமாக கேள்வி கேட்டுக்
கொண்டிருப்பார்.
இப்படிப்பட்ட சாட்டிலைட் மாயைக்கு மத்தியில்,
தன்னிலை தவறாமல், தொடர்ந்து தேச பக்தி நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பி
வரும் தூர்தர்ஷன் பாராட்டுக்குரியதே. அதேசமயம், இந்தியாவிலேயே அதிக அளவிலான
தேச பக்தி நிகழ்சசிகளை ஒளிபரப்பி நாட்டிலேயே தமிழ்நாட்டுக்காரர்கள்தான்
தேச பக்தியில் சிறந்தவர்கள் என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளது சென்னை
தூர்தர்ஷன்.
இதுதொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம்
தொகுத்துள்ள தகவலின் அடிப்படையில், சென்னை தூர்தர்ஷன் நிறுவனம், கடந்த 3
ஆண்டுகளில் மொத்தம் 66 தேச பக்தி தொடர்கள், ஆவணப் படங்களை
ஒளிபரப்பியுள்ளது. அனைத்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தது
மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பானவையாகும்.
இந்த விஷயத்தில்
சென்னைக்குப் பக்கத்தில் கூட வேறு எந்த தூர்தர்ஷன் நிறுவனமும் இல்லை என்பது
அத்தனை தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பெருமை தருவதாக உள்ளது. தலைநகர்
டெல்லியில் உள்ள டெல்லி தூர்தர்ஷன் கேந்திரா கூட வெறும் 19 நிழ்ச்சிகளை
மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் ஒளிபரப்பியுள்ளது ஆச்சரியம் தருகிறது. 3வது
இடத்தில் கேரளா உள்ளது. இதன் பங்கு 18தான்.
இன்னொரு விஷயத்திலும்
சென்னை தூர்தர்ஷன் கலக்கியுள்ளது. அதாவது பிற நிலையங்கள் எல்லாம் அவரவர்
மாநில சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்துதான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளை
ஒளிபரப்பியுள்ளன. ஆனால் சென்னை அப்படி அல்ல தமிழக சுதந்திரப் போராட்ட
வீரர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவில் நாட்டு்க்காகப் போராடிய பலரையும் கூட
அது தனது ஆவணப் படங்கள், தொடர்களில் வெளிப்படுத்தி அவர்களைக்
கெளரவித்துள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள் தாகூர், ஜோதிபாசு, மோதிலால்
நேரு, அன்னிபெசன்ட் ஆகியோர்.
தேசபக்தி நிகழ்ச்சிகளை மிக மிக குறைந்த
அளவில் ஒளிபரப்பியவை பீகாரும், ஆந்திராவும்தான். இங்கு தலா ஒரே ஒரே
நிகழ்ச்சி மட்டுமே காட்டியுள்ளனர். பீகார் தூர்தர்ஷன் தனது மாநிலத்தைச்
சேர்ந்த பாபு ஜெகஜீவன் ராம் பற்றி ஒரு நிகழ்ச்சியை போட்டுள்ளது. ஹைதராபாத்
தூர்தர்ஷன், திரிகபத்தா தெலுகு கத்தா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது.
இந்த
புள்ளி விவரம் மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதுகுறித்து
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்
தமிழகத்தில் தேச பக்தி அதிகம் இருப்பதையே இந்த அதிக அளவிலான நிகழ்ச்சிகளின்
எண்ணிக்கை காட்டுகிறது. அதனால்தான் தமிழகத்தில்தான் அதிக அளவிலான தேச
பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில்
பிராந்திய உணர்வுகளே அதிகம் உள்ளது இதன் மூலம் வெளிப்படுகிறது என்றார்