கனம் நீதிபதி அவர்களே! உங்களுக்கு பங்களா கட்டித் தருகிறேன்; புதிய கார் வாங்கித் தருகிறேன். வெளிநாட்டுப் பயணமும் ஏற்பாடு செய்வேன். வேறு ஏதாவது வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளுங்கள், தருகிறேன். என் மீதுள்ள வழக்கை தாங்கள் சாதகமாக முடித்துத் தர கேட்டுக் கொள்கிறேன்...' நீதிமன்றத்தில் இப்படி பகிரங்கமாகச் சொல்கிறது ஒருதரப்பு!
கனம் கோர்ட்டார் அவர்களே... உங்களுக்கு பங்களாவுடன் ஒரு அவுட் ஹவுசும் கட்டித் தருகிறேன். புதிதாக வெளிநாட்டுக் கார் வாங்கித் தருவேன். அதற்கு தினமும் இலவசமாக பெட்ரோல் போடுவேன். வெளிநாட்டுப் பயணத்திற்கு தாங்கள் மட்டும் தனியாகப் போக வேண்டாம்; விரும்பியவரை அழைத்துச் செல்லலாம். அது யாராக இருந்தாலும் கேளுங்கள், தருவேன். எனக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று அதே மாதிரி வெளிப்படையாகச் சொல்கிறது எதிர் தரப்பு. "காலம் கெட்டுப் போச்சே, இப்படியா நீதிபதிகிட்ட பேரம் பேசுவாங்க... அதுவும் இவ்வளவு வெளிப்படையாக... ரெண்டு தரப்பையும் கேட்டுட்டு எது நியாயமோ அதைத்தானே செய்யப்போறாரு நீதிபதி. வழக்காடறவங்க இப்படி மோசமாப் போனா, இனி நீதிபதிகளும் ரொம்ப மோசமாயிடுவாங்களே' என்று, இனி மக்கள் சொல்லலாம். "இனி' என்று சொல்வது கூடத் தவறு... இது, இப்போதே நடைபெற்று வருவது தான்.
தி.மு.க., - அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைகளுக்கும், மேற்சொன்ன நீதிமன்ற பேரங்களுக்கும் என்ன வித்தியாசம்? தேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள், கட்சிக்காரர்கள் வழக்காடுகின்றனர். இவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? தங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர் தரப்பின் தவறுகளை, தகிடுதத்தங்களைப் போட்டு உடைக்க வேண்டும். அவ்வளவு தானே! அதையா செய்கின்றனர்? நீதிபதிகளுக்கே லஞ்சம் கொடுப்பது போல், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிக்கின்றனர். இரு பெரிய கட்சிகளும், ஆட்சியில் இருந்தவையே. தாங்கள் செய்தவற்றையும், பிறர் செய்யத் தவறியவற்றையும் எடுத்துச் சொல்லலாமே... ஏன் இந்தத் தேர்தல் கால இலவசங்கள்?
மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், இலவச அரிசி, டிக்கெட் இல்லா பயணம்... எல்லாமே லஞ்சம். திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன சிறுமியின் காதுகளிலும், கழுத்திலும் உள்ள நகைகளைத் திருடுவதற்காக குச்சி மிட்டாய் கொடுத்து, இனிப்பாகப் பேசும் நபர்களுக்கும், இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? திருடன் இருட்டில் இதைத் தனியே செய்கிறான். இவர்கள் அதே திருட்டு வேலையை பட்டப் பகலில் செய்கின்றனர். ஆனால், இவர்களை நாம் திருடர்கள் என்று சொல்வதில்லை; மக்கள் பிரதிநிதிகள் என்கிறோம்.
திருவிழாக் கூட்டத்தில் எல்லாரிடமிருந்தும் திருட முடியாது என்பது, திருடனுக்குத் தெரியும். அவன் தனக்கென இலக்குகளை வைத்துக் கொண்டிருப்பான்; வலுவானவர்கள் பக்கம் போகமாட்டான். அரசியல் கட்சிகள் அப்படியே. அவர்களது இலக்கு பாமரர்கள், பொருளாதாரம் புரியாதவர்கள். கொடுப்பது எந்தப் பணத்திலிருந்து, எதைக் கொடுத்து, எதை வாங்குகின்றனர் இவர்கள், அசலாகவே லாபமடைவது யார், நஷ்டப்படுவது யார் என்பது தெரியாத மக்களின் ஓட்டுகள் தான், இலவசத் திட்ட வினியோக அரசியல்வாதிகளின் முதலீடு.
இந்த முதலீட்டின் லாபமெல்லாம்...? உம்... அது யார் கண்ணுக்கும் தெரியாது; கைக்கும் தட்டுப்படாது. சேர்க்கும் கைகள் வெளிநாடுகளுக்கும் நீளும். பிடிக்கும் கைகள், பக்கத்து ஊருக்குக் கூடப் போகாது. "இலவசத் திட்டங்கள் பொருளாதாரத்தைப் பாழ்படுத்துபவை' என்று சொல்லும் படித்தவர்களின் ஓட்டுகள், செல்லாக் காசுகள். படித்தவர்களின் ஓட்டு வேண்டாம், அவர்களது விமர்சனங்களுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று, அவர்களை முற்றிலுமாக ஒதுக்க அரசியல்வாதிகள் தொடர்ந்து மேலும் மேலும் பாமரர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசினால் கவலைப்பட வேண்டாம் வாக்காளப் பெருமக்களே, நாமும் வெளிநாடுகளுக்கு நிகராக வாழலாம். சோமாலியா, சூடான் போன்ற வெளிநாடுகளுக்கு நிகராக!
ஆர்.நடராஜன்,