நம்முடைய எத்தனையோ கோடிச் சகோதர சகோதரிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் நம் அரசியல்வாதிகள் பலர் பல இலட்சம் கோடிகளை சுவிஸ்வங்கிகளின் இரகசியக் கணக்கில் போட்டு வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலே தவிர, வேறு என்ன?
விக்கி லீக்ஸ் நிறுவனமும் ஏன் சுவிஸ் வங்கிகளுமேகூட இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்லாது தொழிலதிபர்களுமேகூட எவ்வளவு கோடிக்கோடியாய் வரி ஏய்த்தும், ஊழல் புரிந்தும், இலஞ்சம் வாங்கியும் போட்டு வைத்துள்ளனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.
ஒரு பகுதியை இப்படி சமர்ப்பித்த அத்வானியேகூட, சோனியா தம் பெயரை இதில் சேர்த்தற்காக விளக்கம் கேட்கவே உங்கள் பெயர் தவறுதலாக இதில் சேர்ந்துவிட்டதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்று பின்வாங்கிவிட்டார்.
ஆனால் இந்த விஷயத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி உறுதியாக இருக்கிறார். நான் தருகிறேன் ஆதாரபூர்வமான பட்டியலை. என்மீது வழக்குத் தொடரட்டும் என்று சவால் விடுத்திருக்கிறார்.
ஆளும் மத்திய அரசிடம் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பட்டியல் இருந்தும் அதனை ஏன் வெளியிடவில்லை என்று பாரதிய ஜனதா வேறு ஒரு புறம் குடைந்து கொண்டிருக்கிறது.
ஆக காங்கிரஸால் வெளியிடமுடியாத ஒரு பட்டியல் இருப்பதும் பாரதிய ஜனதாவுக்கு இப்படி பட்டியலை வெளியிடுவதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்பதால் பாரதிய ஜனதா தலைவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கவில்லை என்பதும் ஓரளவு தெளிவாகத் தெரிகிறது.
சுவிஸ் வங்கியில், இந்தியர்களால் போடப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்கிற கேள்விக்கு, நேரிடையாக விடைகூற முடியாது என்றாலும் அமெரிக்கா தம் நாட்டவர்கள் 12,000 பேர் போட்டிருந்த கள்ளப்ப ணத்தை மீட்கும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியடைந்திருப்பதை பார்க்கும்போது இது சாத்தியமே என்கிற பதில் மறைமுகமாகக் கிடைத்திருக்கிறது.
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்கள், போட்ட பணத்திற்கு நியாயமான கணக்கைக் காட்டாவிட்டால் அதைக் கேட்டுப் பெறுவதற்கு உரிய நாட்டிற்கு உரிமை உள்ளது என்கிற விதி இருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது.
சுவிஸ் அரசு ஒரு நியாய அரசு. உலகப் போரில் எந்த அணியுடனும் சேராமல் நெருக்கடியான நிலைமையிலும் நடுநிலை வகித்த நாடு. இந்திய அரசு கோரினால் சுவிஸ் வங்கிகள் உடன்பட்டே தீரும். இந்த நாட்டில் 1948இல் அமல்படுத்தப்பட்ட இரகசியம் காக்கும் சட்டங்களை இன்று தளர்த்தப்பட்டுவிட்டன என்கிறார்கள்.
ஆனால் நம் அரசியல்வாதிகள் சுவிஸ் பணக் குவியல்கள் இந்தியாவை அடையாமல் எப்படியும் பார்த்துக் கொள்வார்கள்.
சுவிஸ் வங்கிகளின் இந்தியக் கறுப்புப் பண விவகாரத்தைப் பார்க்கும்போது ஒரு படத்தில் வடிவேலுவிடம் என்னெத்த கன்னையா சொல்வாரே, “இந்தக் கார் வரும் ஆனா வராது” என்று! இந்த வசனம்தான் என் நினைவிற்கு வருகிறது.
லேனாவின் பார்வையில்!
No comments:
Post a Comment