நவீன அம்மாக்கள் ஃபேஸ்புக்கில் பிள்ளைகளை பின் தொடரும் காலம் இது. பிள்ளைகளை கண்காணிக்க மட்டும் அல்ல அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்கவும் ஃபேஸ்புக்கை ஒரு ஆயுதமாக அம்மாக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஃபேஸ்புக் வழி அவமானம் என்று சொல்லப்படும் இந்த பழக்கத்திற்கான சமீபத்திய உதாரணமாக அமெரிக்க அம்மா ஒருவர், வகுப்பிற்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனது 14 வயது மகளின் செயலை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ காட்சி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ,பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் யோமிங் (Wyoming ) நகரில் உள்ள காஸ்பர் பகுதியை சேர்ந்தவர் ஜென்னி கிரட்ச்பீல்ட். சமீபத்தில் ஜென்னி, தனது 14 வயது மகள் ரிக்கி வகுப்பிற்கு வராமல் சுற்றிக்கொண்டிருப்பதை கேள்விபட்டிருக்கிறார்.
மகளின் இந்த செயலால் ஆவேசமடைந்த ஜென்னி, கையில் ஐபோனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கே சென்று விட்டார். பள்ளி வளாகத்தில் மகளை பின் தொடந்து சென்றபடி மகளின் நடமாட்டத்தை கையில் இருந்த செல்போன் காமிராவில் படம் பிடித்தார். அம்மாவை பார்த்த மகளுக்கு சரியான அதிர்ச்சி. அப்போது தான் ஜென்னி, மகளிடம் அவள் வகுப்பை கட் அடித்து விட்டு செல்வது தெரிந்து வந்திருப்பதாக கூறியிருக்கிறார். உடனே மகள் ரிக்கி, நான் எங்கே வகுப்பை கட் செய்தேன்? என அப்பாவி போல கேட்க, ஜென்னி மிகவும் கூலாக , "இந்த வாரம் முழுவதும் நீ வகுப்புக்கு செல்லவில்லை என தெரிந்துதான் நேரில் வந்திருக்கிறேன்!" எனக் கூறிவிட்டு, வா இருவரும் சேர்ந்து வகுப்பிற்கு செல்வோம் என்று சொல்லி அசர வைத்திருக்கிறார்.
மகள் சமாளித்துக்கொண்டு அவருக்கு பதில் சொல்லாமல் வகுப்பிற்கு விரைந்து செல்ல, ஜென்னி மகளை பின் தொடர்ந்தபடி சென்று, “இதில் என்ன தவறு? நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று மற்றவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என நினைக்கிறாயா? வகுப்பிற்கு செல்லாமல் தோழிகளோடு சுற்றியபோது எப்படி இருந்தது? இப்போது அம்மாவுடன் வகுப்பில் சேர்ந்து அமர்ந்திருப்பது எவ்வளவு அழகாக இருக்கும் என தெரிந்து கொள்!" என்று இன்னும் கூலாக கூறியிருக்கிறார். அப்போதும் மகள் ரிக்கி ஏதோ சொல்ல, ஜென்னி அவள் சொல்வது பொய் என்று கூறிவிட்டு, ”அவள் வகுப்பில் இல்லாததை படம் பிடித்து அவளுக்கு புரிய வைத்திருக்கிறாள். இந்த நிகழ்வுகளின் மொத்த காட்சியையும் வீடியோவாக தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஜென்னி. வகுப்பிற்கு செல்லாமல் ஏமாற்ற நினைத்தால் இதுதான் தண்டனை என்பது போன்ற வர்ணணையுடன் அவர் பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ 30,000 பேருக்கு மேல் பார்க்கப்பட்டு பிரபலமாகிவிட்டது. பலரும் ஜென்னி செயத்து சரியே என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.
தவறு செய்த மகளுக்கு ஃபேஸ்புக் வீடியோ மூலம் பாடம் புகட்டிய நவீன அம்மா ஜென்னி பற்றி பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகள் இந்த வீடியோ சம்பவத்திற்கு பிறகு மிகவும் மாறிவிட்டதாகவும் இப்போது வகுப்பிற்கு ஒழுங்காக செல்வதாகவும் ஜென்னி கூறியிருக்கிறார். மகள் தவறு செய்வது தெரிந்தவுடன் தட்டிக்கேட்பதைவிட தண்டனை தருவதை விட ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்தி தலைகுனிய வைப்பதே சரி என நவீன் அம்மா ஜென்னி நினைத்திருக்க வேண்டும். ஆனால் இது சரி தானா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்த விவாதம் ஒருபுறம் இருக்கட்டும் , ஃபேஸ்புக் தலைமுறைக்கு இது ஒரு எச்சரிக்கைதான். அவர்களின் அம்மாக்களும் ஃபேஸ்புக் மொழியில் பேச கற்றுக்கொண்டு வருகின்றனர். ஜென்னியின் பேஸ்புக் வீடியோ.