இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், கை கழுவும் பழக்கத்தை வெறும், 38 சதவீதத்தினர் வழக்கமாக கொணடுள்ளனர்,'' என, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் தபோல் தெரிவித்தார்."உலக கை கழுவும் தின'த்தை முன்னிட்டு, யுனிசெப் மற்றும் இந்திய செய்தி நிறுவனத்துடன், பள்ளி குழந்தைகள் இணைந்து, கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். சோப்பு போட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள்; கை கழுவும் பழக்கத்திற்கு மக்களை எப்படி மாற்றுவது, கை கழுவுவதற்கு சரியான வழிமுறை எது; கை கழுவும் பழக்கத்தால், உயிர் பலி வாங்கும் நோய்களிலிருந்து எப்படி காப்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை, பாடல்கள் மூலமாகவும், நாடகங்கள் நடத்தியும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் கூறியதாவது: இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், வெறும் 38 சதவீதத்தினர் மட்டுமே கை கழுவுகின்றனர். சமைக்கும் முன் கை கழுவும் பழக்கம், 30 சதவீதம் பேரிடம் உள்ளது என, பொது சுகாதார குழுமம் தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு வயிற்று போக்கும், சுவாச கோளாறும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கையை, வரும், 2015ம் ஆண்டுக்குள் மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு, சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். இவ்வாறு அருண் கூறினார்.