மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
பொருள்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கை - குறித்து.முல்லைப் பெரியாறு அணை குறித்த தமிழக மக்களின் தீவிர அச்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கேரள அரசாங்கத்தின் ஆதரவோடு அங்குள்ள அரசியல் கட்சிகளின் மோசமான, தீய எண்ணத்தோடும், சட்ட விரோத அச்சுறுத்தலோடு கூடிய நடவடிக்கைகள் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி முல்லைப் பெரியாறு குறித்து நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பின்வரும் பகுதிகளை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
“முல்லைப் பெரியாறு அணை 1895-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர்-கொச்சின் அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையில் சட்டபூர்வமான உரிமை உள்ளது. 1976-ஆம் ஆண்டு கேரள அரசால் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குத் தண்ணீரைப் பெறுவதற்காக, 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, சுயநலமிக்க குறுகிய எண்ணம் படைத்த சிலரால் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய்யான எச்சரிக்கையைப் பரப்பி வருகின்றனர். அப்படி குறுகிய எண்ணம் படைத்தவர்களின் முயற்சியால் அணையின் தண்ணீர் தேக்கும் உயர அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து உள்ளனர்.
அதன்மூலமாக தமிழக மக்களுக்குச் சரிசெய்ய முடியாத இழப்பையும் இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வரத்தே இல்லாமல் செய்துள்ளார்கள். 1979-ஆம் ஆண்டு கேரள அரசாங்கம் இந்த அணை தொடர்பாக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அணைப் பகுதியைப் பார்iவியிட்ட பிறகு அணையின் நீர்மட்ட உயரத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்தலாம்; பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அணையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று சான்று வழங்கியுள்ளார்கள். இரு மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையின் பலத்தைக் கூட்டுவதற்குத் தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்குக் கேரள அரசு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.
உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும், கேரள அரசாங்கம் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் சவால் விடுகின்ற வகையில் நடந்து கொள்கின்றது. 2006-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதியன்று கேரள சட்டமன்றத்தில் கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் சேமிப்புத் திருத்த மசோதா 2006 கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 2006 மார்ச் 18-ஆம் தேதியன்று சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயக விரோத சட்டம் கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கேரள அரசாங்கத்திற்கு எந்தவொரு அணையையும் நீர்த்தேக்கத்தையும் உடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 வரை கேரளாவின் அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை இடம் பெறவில்லை. ஆனால், 2006-ஆம் ஆண்டு சட்டதிருத்த மசோதாவின் மூலமாகக் கேரளாவின் நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகள் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை முதலிடத்தில் சேர்க்கப்பட்டு அணையின் முழுக் கொள்ளளவும் 136 அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தச் சட்டத்தில் கேரள அரசாங்கம் மிகவும் துணிச்சலாக நீர் ஆணையத்தின் நடவடிக்கையும், கேரள அரசாங்கத்தின் நடவடிக்கையும் இந்தியாவின் எந்த நீதிமன்ற வரம்புக்கும் உட்பட்டதல்ல என்ற ஒரு பிரிவும் இடம் பெறச் செய்துள்ளது. இது இந்திய அரசாங்கத்திற்கே கேரள அரசால் விடப்பட்ட சவால் ஆகும்.” எங்களுடைய கவலைதோய்ந்த வேண்டுகோள் மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் அணையின் உறுதித் தன்மையையும், பாதுகாப்பையும் ஆய்வு செய்த வண்ணம் உள்ளார்கள். உயர்ந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக அணையின் உறுதியைப் பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது உண்மையான செய்தியாகும்.
மூன்று முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு: 1) கான்கிரீட் கலவை மூலமாக அணைக்குத் தொப்பி போன்ற பாதுகாப்பை உருவாக்குவது : 12,000 டன் கலவை மூலமாக அணையின் பலத்தைக் கூட்டி அதன் வாயிலாக எத்தகைய அழுத்தத்தையும், நிலநடுக்கப் பாதிப்பையும் தாங்குகின்ற வலிமையை உருவாக்கியுள்ளது.
2) கம்பிவலத் தடத்தின் மூலம் நிலைக்கச் செய்வது : ஆயத்த முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பை நங்கூரம் போலப் பயன்படுத்துவது.
3) கான்கிரீட் மூலமாக அணையின் அடித்தளத்தைப் பாதுகாப்பது : அணையின் அடிமட்ட அகலம் 144.6 அடியிலிருந்து 200.6 அடியாக மாற்றுவது இந்தியாவில் எந்தவொரு அணைக்கும் இல்லாத சிறப்பாக அடித்தள அகலம் அமைந்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி அணை 7 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கத்தைத் தாங்க வல்லது. ஆனால், நிலநடுக்கம் 5 ரிக்டர் அளவுக்கு மேல் அணை இருக்கும் பகுதியில் ஏற்பட வாய்ப்பில்லை. வாதத்திற்கு 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படும் என்றுவைத்துக் கொண்டாலும் குமுளியிலும், குமுளியைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தக் கடிதத்துடன் காணொளிக் குறுந்தகடு ஒன்று இணைத்துள்ளேன். அதில் அணையின் உறுதித் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அணையை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தகுதிவாய்ந்த தமிழ்நாட்டைத் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களால்
தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் அணை உடையப் போவதாகவும், அதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற உளவியல் ரீதியான பயத்தையும், பதட்டத்தையும் கேரள மக்கள் மனதிலே உருவாக்கி வருகின்றார்கள். இது ஒரு பொய்யான செய்தி. கேரள அரசாங்கம் அணையை உடைக்க முடிவெடுத்து விட்டது. அதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் புதிய அணை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் முதலமைச்சர் கடந்த 6 மாதங்களில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், அந்தச் செய்தி உண்மையல்ல. நான்கு முறைதான் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் முல்லைப் பெரியாறு அணை அருகில் ஏற்படவில்லை.
கேரள அரசாங்கம் புதிய அணையை ஏற்கனவே அணை இருக்கும் உயரத்தில் இருந்து கீழே தாழ்வான பகுதியில் கட்டத் திட்டமிட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் அணை கட்டும்போது கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற முடியாது. இப்பொழுதுள்ள அணை உடைக்கப்படுமேயானால் தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமலும், 85 இலட்சம் மக்கள் குடிதண்ணீருக்கும் வழியில்லாமல் அல்லல்பட நேரிடும். அதேநிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் தமிழகத்தின் தென்பகுதிகள் காலப்போக்கில் பாலைவனமாக மாற நேரிடும்.
மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அக்கிரமச் செயல்களில் கேரளத்தினர் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதியும், டிசம்பர் 4 ஆம் தேதியும் அணையை உடைக்க முயற்சித்துள்ளனர். ஒன்றாம் தேதி அன்று கேரளத்தினர் முல்லைப் பெரியாறு அணையை சேதப்படுத்த முயன்று அதனைத் தடுக்கப்போன கேரள மாநில போலீசாரையும், தாக்கியுள்ளனர். நேற்று டிசம்பர் 4 அன்று ஒரு வன்முறைக்கூட்டம் கடப்பாரையோடு, சம்மபட்டிகளோடு, இரும்புக் கம்பிகளோடு சென்று பேபி அணையை உடைக்க முயற்சித்துள்ளனர். இதனைப் தடுப்பதில் கேரள காவல்துறையை திணறிப்போயுள்ளது. அணையை உடைப்போம் என்று கேரள அரசே அறிவித்துவிட்டதால், அணையை கேரள போலீசார் பாதுகாக்க முடியாது. எனவே, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அங்கு குவிப்பதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். இதனையே தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளர்.தமிழ்நாடு, கேரளாவுக்கு உணவு தானியங்கள், பால், காய்கறிகள், கால்நடைகள் போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுமேயானால் இரு மாநில மக்களிடையேயான சகோதர ரீதியான உறவுகள் பாதிக்கப்படும். அதன்வாயிலாக எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படும். இந்தியாவின் பரந்த நலன் கருதி நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மத்திய அரசு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். பழைய அணையைப் பாதுகாக்க வேண்டும்.
தங்கள் அன்புள்ள
(வைகோ)