சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற அரசின் முடிவால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற முடக்க நிலைக்கு தீர்வு காண, மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, தற்காலிகமாக அன்னிய முதலீட்டு முடிவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பாகக மூத்தத் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, மத்திய அரசு தனது முடிவை நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், எதிர்கட்சிகளுடன் சுமுகத் தீர்வு ஏற்படும் வரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் முடிவு நிறுத்திவைக்கப்படும் என்று பிரணாப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரிசெய்யும் வகையிலேயே மத்திய அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற முடிவை மத்திய அரசு நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, தன்னிடம் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், முடிவு நிறுத்தப்படவில்லை என்றும் தெளிவாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment