|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

எந்த படத்தினை அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கிறார்கள்? விகடன் இணையத்தில் வாக்கெடுப்பு!

2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தமிழ் படங்கள் சில வெளியாக இருக்கின்றன. ரஜினி - 'கோச்சடையான்', கமல் - 'விஸ்வரூபம்', விஜய் - 'நண்பன்', அஜீத் - 'பில்லா 2', சூர்யா - 'மாற்றான்', விக்ரம்  தாண்டவம்',சிம்பு - ' வேட்டை மன்னன்', தனுஷ் - ' 3 ', ஆர்யா, மாதவன் - ' வேட்டை ' என அனைத்து படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவ்வாறு அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் எந்த படத்தினை அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்று  சினிமா விகடன் இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.  வாக்கெடுப்பு நேற்றோடு (டிசம்பர் 06) முடிவடைந்தது.
விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம்  - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2'  திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லை...


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க என்.இ.இ.டி. எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று சுகாதாரத் துறை அதிகாரி கூறியுள்ளார். வரும் கல்வியாண்டில் இருந்து நாடு முழுமைக்கும்  மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரும் கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வு கிடையாது என்று அதிகாரி தெரிவித்தார். 2012ம் கல்வியாண்டு முதல் இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர தேசிய தகுதி காண் பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. ஆனால் இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழகத்தில் மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, இடைக்காலத் தடை பெற்றுள்ளது.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், இந்திய பிரமர் மன்மோகன் சிங்கிற்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதியுள்ளார். இதேப்போன்று பொதுத் தேர்வுக்கு தடை பெற்றுள்ள ஆந்திர மாநிலத்தில், தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. எனவே, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே நாள்...


  • சர்வதேச மனித உரிமைகள் தினம்
  •  தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
  •  நோபல் பரிசு வழங்கப்படும் தினம்
  •  சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
  •  ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)

அரசு நல விடுதிகளில் இலங்கை அகதிகள் தங்கிப் படிக்க உத்தரவு!


தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில், இலங்கை அகதிகளின் குழந்தைகள் தங்கிப் படிக்க அனுமதித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும், 21 ஆயிரம் இலங்கை அகதிகளின் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வர சிரமப்படுவதை அறிந்த முதல்வர், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும், அனைத்து மாணவர், மாணவியர் விடுதிகளிலும் தங்கி, கல்வி பயில உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தமிழகத்தில், தற்போதுள்ள 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாணவர், மாணவியர் விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும், தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக, ஐந்து இடங்கள் வீதம், மொத்தம் 6,470 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதனால், அரசுக்கு, ஆண்டுக்கு 3 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.இதேபோல, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும், 1,238 விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும், ஐந்து இடங்கள் வீதம், 6,190 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 4 கோடியே 25 லட்சத்து 64 ஆயிரத்து 620 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.முதல்வரின் இந்த நடவடிக்கை மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின், 12 ஆயிரத்து 660 குழந்தைகள், விடுதிகளில் தங்கிப் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புங்க மர விதையில் பயோ டீசல்...


மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், மாணவியர் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். 

தமிழகத்தின் முதல் சூரிய ஒளி மின் திட்டம்.

தமிழகத்தின் முதல் சூரிய ஒளி மின்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் விரைவில் கோரப்படும் என்றும் மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். ரூ. 500 கோடி மதிப்பில் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலான இத்திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது. ஏதேனும் ஒரு தென் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யூரோவைக் காப்பாற்ற புதிய ஒப்பந்தம்.


யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, ஒரு வழியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில், 23 மட்டுமே இத்தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், கடந்த 8, 9 தேதிகளில், ஐரோப்பிய யூனியனின் தலைவர்கள் கூடி, யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தனர். முதல் நாள் மாநாட்டில், குறிப்பிடத்தக்க முடிவு எட்டப்படவில்லை. ஆனால், பிரிட்டன் சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஐரோப்பிய யூனியனின் ஒப்பந்தத்தில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், ஜெர்மனியும், பிரான்சும் தெரிவித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என, அந்நாட்டின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று நடந்த மாநாட்டில், அதை எந்த நாடும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, ஐரோப்பிய யூனியனுக்கு அப்பாற்பட்டு, நாடுகளுக்கிடையிலான மற்றொரு ஒப்பந்தமாக, அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், தங்கள் ஆண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுக் கடன் ஜி.டி.பி.,யில், 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. மீறினால், தன்னிச்சையாகப் பொருளாதாரத் தடைகள், அந்நாடுகளின் மீது விதிக்கப்படும். இந்த விதிகள், அந்தந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில், திருத்தங்கள் மூலம் சேர்க்கப்பட வேண்டும். "யூரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கானிசம்' (இ.எஸ்.எம்.,), 2012, ஜூலை முதல் செயல்படத் துவங்கும். தற்போதைய அதன் 500 பில்லியன் யூரோ நிதி அதிகரிக்கப்படும். கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய யூனியன் மற்றும் யூரோ மண்டல நாடுகள், சர்வதேச நிதியத்திற்கு (ஐ.எம்.எப்.,), கூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங்கும். இந்த பரிந்துரைகளை, ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இதில் இருந்து விலகி நிற்பதாகத் தெரிவித்துள்ளது. ஹங்கேரி, செசன்யா, சுவீடன் நாடுகள் தங்கள், பார்லிமென்டில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளன.

இனி டிரான்ஸ்பார்மர்களில் ஜி.பி.ஆர்.எஸ்., மீட்டர்!


மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில், செயற்கைக்கோளில் இயங்கும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்ப மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், எந்த பகுதியில் மின் திருட்டு நடக்கிறது என்பதை, கம்ப்யூட்டரில் கண்டுபிடிக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மின் திருட்டு தொடர்கதை: மின் திருட்டை தடுக்க, மின் வாரிய தலைவர் தலைமையில், 17 பறக்கும் படைகளும், முன்னாள் ராணுவ வீரர்கள் கொண்ட, 25 படைகளும் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு, 6,544 மின் திருட்டு வழக்குகளும், இந்த ஆண்டு கடந்த மாதம் வரை, 3,200 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனாலும், மின் திருட்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது. மின் கசிவு, மின் திருட்டு ஆகியவற்றால் ஏற்படும் இழப்பை சரி செய்யுமாறு, மின் வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களிலும், மீட்டர் பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டு தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தோ அல்லது வழக்கமான சோதனை செய்யும்போது தான், மின்சாரம் திருடுவது தெரிய வருகிறது. அதனால், 75 சதவீத மின் திருட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

டிரான்ஸ்பார்மரில் மீட்டர்: எனவே, ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரிலும் செயற்கைக்கோள் வசதியுடன் இயங்கும், ஜி.பி.எஸ்., ரீடிங் மீட்டர் வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 100 நகரங்களில் செயல்படும், 35 ஆயிரத்து 276 டிரான்ஸ்பார்மர்களுக்கு, நவீன மீட்டர் வைக்கப்படும். இந்த மீட்டர் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியின், வழக்கமான மின் வினியோக அளவு, மின்னழுத்த நிலை, குறைந்த மின்னழுத்த பிரச்னை, வினியோகத்தில் ஏற்படும் கோளாறு போன்றவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்க முடியும். இந்த மீட்டர்களின் செயல்பாடுகள், செயற்கைக்கோள் மூலம், சென்னை மற்றும் முக்கிய நகரங்களின் கம்ப்யூட்டர் பதிவு மையங்களுடன் இணைக்கப்படும். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள், இந்த பணிகள் முடிக்கப்பட்டு, மின் வினியோகம் சீரமைக்கப்படும். இதற்கான டெண்டர் வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

களவு போகும் ரூ.1,500 கோடி: தமிழகத்தில், 2.12 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில், விவசாய மற்றும் குடிசைகளுக்கு, 33 லட்சம் இலவச மின் இணைப்புகள் தவிர, வீட்டு உபயோகம், வணிகம், தொழிற்சாலை உள்ளிட்ட இணைப்புகள் உள்ளன. இலவச இணைப்புகளால் ஆண்டுக்கு, 7,500 கோடி ரூபாய்க்கு, மின் வினியோக இழப்பு ஏற்படுகிறது; விவசாயத்திற்கு மட்டும், 6,500 கோடி ரூபாய்க்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் அளவுக்கு, மின் திருட்டு நடப்பதாக, மின் வாரிய அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

சீனாவில் கடலின் மீது 30 கி.மீட்டருக்கு பாலம்.

சீனாவில், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில், கடல் மீது, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளில், சீனா மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடல் மீது, 36 கிலோ மீட்டர் பாலம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. இதற்கிடையே, ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், 29.6 கிலோ மீட்டர் நீளத்துக்கு, பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தீவில், 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டுள்ளன. 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பாலம், வரும் 2016ல் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு, கடல் அடியில் சுரங்கமும் அமைக்கப்பட உள்ளது.

குழந்தைகளை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற தலைமை ஆசிரியர்!

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அருகில் உள்ள மொளசி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 26 குழந்தைகள் படித்து வருகிரார்கள். இந்த பள்ளியில் மல்லிகா (வயது 40) தலைமையாசிரியராகவும், பூங்கொடி (வயது 32) என்பவர் ஆதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள். நேற்று வியாழன் அன்று பூங்கொடி பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். அதனால் தலைமை ஆசிரியை மல்லிகா மட்டுமே பள்ளியை கவனித்து வந்துள்ளார். மலையில், தன்னுடைய இரு சக்கரவாகனத்தின் சாவியை காணாத மல்லிகா மாணவ மாணவியர்களை கூப்பிட்டு சாவிய எடுத்தீர்களா..? விசாரித்துள்ளார். ஆனால், குழந்தைகள் யாரும் தாங்கள் சாவிய பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர். இதனால், மாணவர்கள் மீது எரிச்சல் கொண்ட மல்லிகா எல்லா மாணவ, மாணவியர்களையும் பள்ளியின் வகுப்பறையில் வைத்து பூட்டு போட்டு விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று தனது வாகனத்துக்கான மாற்று சாவியை எடுத்து வர போய்விட்டார்.

தலைமை ஆசிரியை கோபமாக இருந்ததையும், இப்போது பூட்டிவிட்டு சென்றுள்ளதையும் பார்த்த குழந்தைகள் என்னவென்று புரியாமல் ஒன்றிண் பின் ஒன்றாக எல்லா குழந்தைகளும் அழுக ஆரம்பித்துவிட்டனர்.மாணவிகள் அழும் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் சிலர் பூட்டிய பள்ளிக்குள் குழந்தைகள் இருப்பதை பார்த்து விட்டு அருகில் உள்ள மொளசி காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளனர். போலீசார் பள்ளிக்கு வந்து பூட்டை உடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது, தலைமை ஆசிரியை அங்கு வந்து விட்டார். பின்னர் அவர் கையிலிருந்த சாவிய கொண்டு வகுப்பறையை திறந்து விட்டுள்ளார். அந்த நேரம் பள்ளிக்கூடத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மல்லிகாவை தாக்க முயன்றதால் கொஞ்சநேரம் பரபரப்பு ஏற்பட்டது, பள்ளிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு மாணவியின் தந்தையார் கொடுத்த புகாரின் பேரில் மொளசி போலீசார் தளமை ஆசிரியை மல்லிகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காலிஃப்ளவர்.


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடல்கேன்சர் குணமாகும் இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது, வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதயநோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல்கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.


சூட்டைத் தணிக்கும் இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும். எனவே நீரை கொதிக்கவைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப்போக்கும்.

இளைத்தவர்கள் குண்டாகலாம் உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் காலிஃப்ளவரை சமையலில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் பி1,2,3,5,6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி அழைப்பு.

 இலங்கை ராணுவத்திடம் வந்து பயிற்சி பெற்றுச் செல்லுமாறு இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லிக்கு வந்துள்ளார் இந்த ஜெயசூர்யா. ராணுவத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.முப்படைத் தளபதிகளையும், இந்திய ராணுவத் தலைமைத் தளபதியையுயம் சந்தித்துப் பேசினார்.அப்போதுதான் பயிற்சி பெற வருமாறு இந்திய ராணுவத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். கடந்த 30 வருடமாக தாங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்ததால் போரில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதாக கூறினாராம் ஜெயசூர்யா.மேலும் தங்களுக்கு நிறைய யுத்த தந்திரகள் தெரியும் என்றும், அதை உலகநாடுகள் தங்களிடம் வந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...