தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.