|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 October, 2011

15 ஆண்டுகள் ஆன கார்களை அழிக்க மத்திய அரசுக்கு சியாம் வேண்டுகோள்!


15 ஆண்டுகளை கடந்த கார்களை அழிக்கும் விதத்தில் புதிய சட்டம் கொண்டு வருமாறு, மத்திய அரசுக்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கார் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி, சலுகைகளை வாரி வழங்கியும் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு சூடுபிடிக்கவில்லை.இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 15 ஆண்டுகளை கடந்த கார்களை அழிக்கும் வகையில் புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு சியாம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும், புதிய கார்களைவிட பழைய கார்கள் அதிக கார்பன் புகையை வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகவும், எனவே இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வருவது அவசியம் என்றும் சியாம் கோரியுள்ளது.கார்கள் தவிர, 15 ஆண்டுகளை கடந்த தனியார் வாகனங்கள், வர்த்தக ரீதியிலான வாகனங்கள், இருசக்கர வாகனங்களையும் அழிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்த இந்த திட்டத்தால் அங்கு கார் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் சியாம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கார்களை அழித்து புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசுகள் 2,000 யூரோ பணச்சலுகை வழங்குகின்றன.இதேபோன்று, இந்தியாவிலும் புதிய சட்டம் கொண்டு வரும்போது, புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பணச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது.

உடல் உஷ்ணம் தணிக்கும் கொட்டிக்கிழங்கு!


குளிர்ச்சித் தன்மை கொண்ட கொட்டிக்கிழங்கு செடி இனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்கில் மூன்று வகைகள் உள்ளன. அவை, கொட்டி, கருங்கொட்டி, காறற் என்பதாகும். இதில் கருங்கொட்டியானது பேய்க்கொட்டி என்றும் அழைக்கப்படுகிறது இது மருத்துவத்திற்கு பயன்படாது பிற கொட்டிக் கிழங்குகள் மருத்துவத்திற்குப் பயன்படும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.

கரப்பான் நோய் போக்கும்: கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்கு தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.பல்நோய் நீக்கும் பிரப்பங்கிழங்கு: பிரப்பங்கிழங்கு என்று ஒருவகை கிழங்கு உள்ளது. இது செடியினத்தைச் சேர்ந்தது. இக்கிழங்கு மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இக்கிழங்கின் குணம் பற்களில் ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்க வல்லது. இக்கிழங்கை காயவைத்து இடித்துத் தூளாக்கி நீரில் கலந்து காய்ச்சி அந்நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வரலாம். இதனால் பற்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். இத்தூளை பற்பொடியுடன் சேர்த்து பற்கள் துலக்கி வரலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் பற்பொடிகளில் இதுவும் இடம்பெற்றிருக்கும்.இக்கிழங்கின் தூளை ஒரு நாளைக்கு இரண்டு வேளை வெந்நீரில் கலக்கி உட்கொள்ளலாம். இதனால் கீழ்வாதம், முடக்குவாதம், போன்ற வாதம் தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

மாயூரத்தில் துலா நீராடுதல்!


ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். இதனாலேயே இது துலா மாதம் என்றழைப்படுகிறது. துலா என்றால் தராசு என்றும் பொருள் படும் ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இதனாலேயே இது துலா மாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி துலாமாதமான ஐப்பசி பிறக்கிறது. இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதாக ஐதீஹம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம். இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப-விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு.


மாயூரத்தில் துலா நீராடுதல்: ஐப்பசி மாதத்தில் மாயூரம் என்றழைக்கப்படும் மயிலாடுதுறையில் காவிரி நதிக்கரையோரம் உள்ள நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி, தங்களிடம் மக்கள் தொலைத்துச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, ""ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ?'' என்றொரு பேச்சு வழக்கு உள்ளது. இத்திருத் தலத்தில் ஐப்பசி இறுதியில் நடைபெறும் "கடைமுக தீர்த்தவாரி' மிகவும் சிறப்புடையது.


கடைமுழுக்கு தீர்த்தவாரி: ஐப்பசி மாத அமாவாசை அன்று காவிரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அன்று "காவிரியானவள் கங்கையாக மாறுகிறாள்' என்று காவிரி புராணம் உரைக்கின்றது. அன்று மறைந்த முன்னோர்களுக்கு காவிரி நதிக்கரையில் நீர்க்கடன், தர்ப்பணம், வழிபாடுகள் செய்ய உகந்த நாள் என்பர்.ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவேரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு” என்கிறார்கள். மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.


முடவன் முழுக்கு: ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்திக்கிறான்.அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.


ஸ்ரீ ரங்கநாதருக்கு திருமஞ்சனம்: ஒவ்வொரு ஆண்டும் துலாம் மாதத்தில் பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் துலாம் மாதம் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுகின்றது. இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்காக கோயில் யானை ஆண்டாள் காவிரியில் இருந்து தங்கக்குடத்தில் புனித நீர் எடுத்து வருவது சிறப்பம்சமாகும்.

தோலினை மினுமினுப்பாக்கும் ஆரஞ்சுபழத் தோல்!



முக அழகுக்கும், தோல் மினுமினுப்புக்கும் சந்தைகளில் நூற்றுக்கணக்கான கிரீம்களும், லோசன்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஒருவாரத்தில் மங்கலான நிறத்தை சிகப்பாக்குகிறோம் என்றும், தோல் சுருக்கத்தை போக்குகிறோம் என்றும் பலவித வாக்குறுதிகளை கொடுத்து தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன அழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள். நிறத்தின் மீது மோகம் கொண்டு இருக்கும் இந்தியாவில் இந்த அழகு கிரீம்களின் விற்பனை சதவிகிதம் ஆண்டுக்காண்டு அதிகமாகிக்கொண்டே போகிறது. நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கிரீம்களையும், சோப்புக்களையும் வாங்கி அவற்றை உபயோகித்து அதன் பலனுக்காக நாள் கணக்கில் காத்திருப்பதை விட நமக்கு நாமே அழகுக் கிரீம்களை தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.


ஆரஞ்சு பவுடர்: உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு பழச் சுளைகளை தின்றுவிட்டு அதன் தோலை நாம் குப்பையில் எறிந்து விடுவோம். இனிமேல் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதன் தோலை உடனே எறியாமல் வெயிலில் உலர வைக்கவும். நன்றாக காய்ந்த தோலை அரைத்து பொடியாக்கி, அதனுடன் பசும்பாலை கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு அப்ளை செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான முகம் கழுவ தோல் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு மாதத்திற்கு காலை நேரத்தில் இதனை தொடர்ந்து பூசி வரவேண்டும். அப்புறம் பாருங்கள் உங்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்து நீங்களே வியக்கும் அளவுக்கு முகம் பளிச்சென்று ஆகும்.தயிரும் தக்காளிச்சாறும்: நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தயிர் மிகச்சிறந்த அழகு சாதனப் பொருளாகும். தயிருடன் சிறிதளவு தக்காளிச்சாறு அதனுடன் சிறிதளவு ஓட்ஸ் சேர்த்து ஊறவைக்கவும். அதனை நன்றாக கலந்து முகத்திற்கு பூசி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். இது வறண்ட சருமத்தை பொலிவாக்குவதில் இந்த கலவைக்கு ஈடு இணையில்லை. சந்தனத்துடன் தயிரும் சேர்ந்து கலந்து முகத்திற்கு பூசுவதைப்போல, கழுத்து மற்றும் கையில் வெயிலால் தோல் கருத்துள்ள இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் காய்ந்த உடன் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவ கருமை மாறி விடும்.எலுமிச்சையும் தேனும்: சிறிதளவு பால்பவுடர், எலுமிச்சை ஜூஸ் சிறிதளவு, அரை ஸ்பூன் தேன், ஆலிவ் எண்ணெய் சிறிதளவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். அப்புறம் பாருங்கள் குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாகும்.

இதே நாள்...


  •  சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
  •  இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே பிறந்த தினம்(1970)
  •  கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  •  போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
  •  அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது(1979)

15 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக அவலம்...!


போலீசாரிடம் கேட்டபோது, " செல்வராஜ் சம்மாட்டியை பிடித்து விசாரிக்க உள்ளோம்' என்றனர்.இதுகுறித்து முனியசாமியின் மனைவி மூக்குப்புரி கூறுகையில், "" தூத்துக்குடி காயல் கடற்கரை கிராமத்தில் செல்வராஜ் சம்மாட்டிக்கு சொந்தமான தோப்பில் வேலைக்கு சேர்ந்தோம். குழந்தைகளும், உப்பளத்தில் வேலை பார்த்தனர். எங்களை அடித்து துன்புறுத்தினர். மீன்பிடிக்க படகில் அனுப்பப்பட்டோம். எங்களுடன் கூடுதல் ஆட்களை அனுப்ப கூறியதற்கு சம்மாட்டி மறுத்தார். கடலுக்கு செல்ல மறுத்த எனது கணவரை அடித்துக் கொன்றார். குழந்தைகளையும் கொன்று விடுவார்களோ என பயந்து, அங்கிருந்து தப்பி வந்து விட்டோம். அரசுதான் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார். இவ்வாறு, 15 ஆண்டுகளாக அடித்து, உதைத்து துன்புறுத்தப்பட்ட முனியசாமி குடும்பத்தினர், கடந்த அக்., 9ல் செல்வராஜிடம் இருந்து தப்பினர். அதன்பின், வேன் மூலம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் வந்தவர்கள், செல்வராஜ் தங்களைத் தேடி வரக்கூடும் என்ற பயத்தில், நாலுபனை கிராமம் அருகே உள்ள சவுக்குக் காட்டில், ஒரு வாரமாக பதுங்கி இருந்தனர். 

சேரான்கோட்டையை சேர்ந்தவர் முனியசாமி; மீனவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி மனைவி மூக்குப்புரி, மூன்று குழந்தைகளுடன், தூத்துக்குடி சென்றார். அங்குள்ள அபிராமி நகரை சேர்ந்த செல்வராஜ் சம்மாட்டி என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களை, ஆடு, மாடு, கோழிப் பண்ணைகளில் வேலைக்கு வைத்த செல்வராஜ், கொத்தடிமைகளைப் போல நடத்தியுள்ளார். ஒருகட்டத்தில், முனியசாமி அடித்துக் கொல்லப்பட்டார். ராமேஸ்வரம் சேரான்கோட்டை மீனவ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை, 15 ஆண்டுகளாக கொத்தடிமையாக வைத்திருந்து, துன்புறுத்திய செல்வராஜ் சம்மாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.  
இதுதெரிந்த கிராமவாசிகள், நேற்று காலை இவர்களை கிராமத்திற்குள் அழைத்து வந்தனர். ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசன், நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன்பின், செல்வராஜ் சம்மாட்டியிடம் மொபைல் போன் மூலம் விசாரித்தார். உயர் அதிகாரிகளுக்கு இவர்கள் குறித்த தகவலைத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.  

நூறு கோடி மரங்கள் வளர்ப்போம் தனது பிறந்தநாளில் அப்துல் கலாம்!

கண்ணான பாரதத்தின் கண்மணியே வருககனவுகளை நனவாக்கும் கதிரவனே வருகநலமே நாடுகின்ற நாயகனே வருக...
நாளைய பாரதத்தின் நம்பிக்கையே வருக!

பவானி கி÷ஷாரின் பரவசமூட்டும் குரலும், மழலைக் குரலும் இணைந்து பாடும் அந்தப் பாடல், பச்சைப் பட்டாடை போர்த்தியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலே எதிரொலிக்கிறது. செவிகளில் நுழைந்து, இதயத்தை ஊடுருவிய அந்தப் பாடலுக்கு நடுவே, பல ஆயிரம் குழந்தைகளின் வாழ்த்தொலியும் கலக்க, பள்ளிக் குழந்தை போல் துள்ளி வருகிறார் விழா நாயகன்... அப்துல் கலாம். நேற்று அவரது 80வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்குப் பரிசாகத்தான், அழகிய சூழலில், அன்பான குழந்தைகளுக்கு மத்தியில் அருமையாக அரங்கேறியது அந்த விழா. சிறுதுளி, ராக் அமைப்புகள் இணைந்து துவக்கியுள்ள "பசும்புலரி' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், நண்டங்கரை தடுப்பணை கரையில் நடந்த "பசுமைப்பொன்னாடை விழா'வின் காட்சிதான் இது.

மரக்கன்றை நட்ட அப்துல் கலாம், அங்கே விவசாயிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக எழிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் ஆடி, குழந்தையாகவே மாறி குதூகலித்தார் கலாம்; பல்லாயிரம் குழந்தைகள் "ஹேப்பி பர்த்டே' வாழ்த்துப்பாட, "கேக்' வெட்டினார். நிகழ்ச்சிக்கு "பாதையெங்கும் பசுமை' என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், பார்க்கும் இடமெல்லாமே அங்கே பச்சையாகத்தான் இருந்தது. பச்சை மூங்கிலில் மேடை, தேக்கு இலைகளினாலான கூரை, பச்சைக்கோரைப் பாய் விரிப்பு, மூங்கில் நாற்காலிகள், பச்சை கார்பெட், பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பச்சை நிறக் குடைகள், "மைக்' வயரும் கூட பச்சை... எங்கெங்கு காணினும் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியின் இனிய துவக்கவிழாவாக அந்த விழா அமைந்திருந்தது. தனது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இந்த விழாவில், கலாம் நேரடியாகப் பங்கேற்று, நாவல் மரக்கன்று ஒன்றை நட்டது சிறப்பம்சம்; கோவைக்கு மகாத்மா காந்தி வந்தபோது, அவர் நட்ட நாவல் மரத்திலிருந்து உருவாக்கிய மரக்கன்று அது என்பது சிறப்புச் செய்தி. அதன்பின், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அவர் பேசியது: ஐக்கிய நாடுகள் சபை, இந்த ஆண்டை வன ஆண்டாக அறிவித்துள்ளது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில், கோவையில் பசுமையைக்கொண்டு வரும் "பசும்புலரி' திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. ஒரு வாரத்துக்கு 2011 மரங்கள் வீதமாக 52 வாரங்களில் ஒரு லட்சத்து 4,572 மரக்கன்றுகளை நட்டுவித்து, அவற்றை 100 சதவீதம் வளர்ப்பதே இத்திட்டம். இத்திட்டத்தில், ஆயிரம் மரங்களை வளர்ப்போர்க்கு, "கிரீன் கார்டியன்', 100 மரக்கன்றுகளை வளர்க்க, "கிரீன் வார்டன்', 10 மரக்கன்றுகளை வளர்க்க "கிரீன் ஹேண்ட்' என்று நான்கு அடுக்கு பசுமை இணைப்பை ஏற்படுத்தியுள்ளது என்னைக் கவர்ந்தது. ஒரு லிட்டர் டீசல், 2.7 கிலோ கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது; நானும், எனது நண்பர்களும் கடந்த 2 நாள் பயணத்தில், 162 கிலோ கார்பனை உற்பத்தி செய்துள்ளோம். ஆண்டுதோறும் அண்டவெளியில் 36 பில்லியன் டன் கார்பன் உருவாகி, உலக வானிலை நிலவரம் மாறிக் கொண்டிருக்கிறது.

ஒரு மரம், ஆண்டுக்கு 20 கிலோ கார்பனை உட்கொண்டு, 14 கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. நமது நாட்டிலுள்ள 100 கோடி மக்களும், ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்; மொத்தத்தில் நம்மால் ஒரு பில்லியன் மரங்களை வளர்க்க முடியும்; அப்படி வளர்த்தால், நாட்டின் தட்ப வெப்ப நிலையே மாறி, உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா மாறும். கோவையிலுள்ள விவசாயிகள், மஞ்சளுக்கு விலை கிடைக்க வில்லை, காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைகின்றன என்று என்னிடம் தெரிவித்தனர். இதற்குத் தீர்வு காண்கிற வாய்ப்பு, நம்மிடம் இருக்கிறது. மலையடிவாரத்தில் மழைக்காடுகளை உருவாக்கினால், யானைப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தலைவர் பாலசுப்ரமணியன், "ராக்' தலைவர் சுவாமிநாதன் உட்பட பலரும் பங்கேற்றனர்.

மரங்களே அழியாச் சொத்து! மரம் வளர்ப்பது தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கலாம் கூறிய உறுதிமொழி: நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாப்பேன்; நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன். எனது அழியாச் சொத்தாக மரங்களை, என் சந்ததிக்கு விட்டுச் செல்வேன்; நூறு கோடி மரம் நடும் இயக்கத்தில் என்னை ஈடுபடுத்தி, அதை சிரமேற்கொண்டு, செயல்படுத்துவேன். முதற்கட்டமாக, "பசும்புலரி'யின் அங்கமாக 10 மரங்களை நட்டு, இந்த நாட்டுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.

வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம் சீனா!


வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால், அதற்கு சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே மற்றும் தைவான் நாடுகள் உரிமை கோரி வருகின்றன. இவற்றில், சீனா தென் சீனக் கடல் முழுமையும் தனக்குரியது என வாதாடி வருகிறது.இந்நிலையில், இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம் குறித்து நேற்று, "க்ளோபல் டைம்ஸ்' மற்றும் "சீனா டெய்லி' ஆகிய சீன பத்திரிகைகள் இந்தியாவுக்குக் கடும் மிரட்டல் விடுத்துள்ளன.
தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்' என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன. 

இதுகுறித்து அவற்றில் கூறியிருப்பதாவது:சீனா- வியட்நாம் இடையே, கடந்த 11ம் தேதி கடல்சார் பிரச்னைகள் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுநாள், வியட்நாம் இந்தியாவுடன் எண்ணெய் துரப்பண ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது வியட்நாமின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது.வியட்நாமோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், வியட்நாம் பிராந்தியத்தில் தனது அரசியல் செல்வாக்கையும் அதிகரிக்க இந்தியா கருதுகிறது.இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இதற்கு சீனா சம்மதிக்கக் கூடாது. இன்று சீனா சும்மா இருந்தால், நாளை பல நாடுகள் தென் சீன கடலுக்குள் நுழையும்.தென் சீன கடலில் நுழைந்து மீன்பிடிப்பதன் மூலம், சீனா உடனான பல பிரச்னைகளில் பேரம் படிய வைக்கலாம் என இந்தியா நினைக்கிறது.வெறும் வாய் வார்த்தைகளால் மட்டும் சீனா மறுப்பு தெரிவிக்காமல், இந்திய, வியட்நாம் பணியைத் தடுக்க என்ன வகையில் எல்லாம் இடையூறு செய்ய முடியுமோ, அந்த வகையில் செய்ய வேண்டும்.இவ்வாறு சீன பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' விவேகானந்தர் மாணவர் மன்றத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!


தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் பண பலம் மிக்க கட்சிகள் ஓட்டுக்கு காசை வாரி இறைத்தன. உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம், சேலை, சில்வர் குடம் உள்ளிட்ட பொருட்களை கொடுக்கும் நிலை உள்ளது.
:சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகத்தை வீடுகளில் ஒட்டி, விவேகானந்தர் மாணவர் மன்றத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளனர். 
தேர்தல் கமிஷன் எச்சரிக்கையை மீறி, பணம் கொடுத்து, ஓட்டுக்களை விலை பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களின் இந்த செயல்பாட்டை கண்டிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சேலம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நூதன பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையாப்பட்டியில் கிருஷ்ணா நகர் குடியிருப்பில் உள்ள வீடுகளில், விவேகானந்தா மாணவர் மன்றம் சார்பில், "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸை கதவுகளில் ஒட்டி வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஓட்டப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தலைவர் ஆசைக்கண்ணன், செயலளர் யோகா மற்றும் உறுப்பினர்கள், தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைக்கு சுயேட்சை வேட்பாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவேகானந்தா மாணவர் மன்ற செயலாளர் யோகா கூறியதாவது:உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தலின் போது சில வேட்பாளர்கள் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து, வாக்காளர்களை விலை பேசுகின்றனர். தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, ஒவ்வொருவரும் ஒட்டளிக்க வேண்டும். அதை வலியுறுத்தியும், பிடித்த நல்ல வேட்பாளரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தும், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய்...!


அதிக சம்பளம், இலவச தங்குமிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய், அந்தந்த நாடுகளின் சிறைகளில் அவதிப்பட்டு திரும்புகின்றனர். முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றால், கை நிறைய சம்பளத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. விவசாயம் இல்லாததால், பலர் நகரங்களை நோக்கி வேலை தேடி படையெடுக்கின்றனர். சிலர், "வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இவர்களை போன்றோர்களை தேடிக் கொண்டிருக்கும் மோசடி ஏஜன்டுகள், உள்ளூர் பிரமுகர்கள், வெளிநாட்டில் வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம். ராஜ வாழ்க்கை வாழலாம்' என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் மயங்குவோரிடம், சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு, "டூரிஸ்ட் விசா' எடுக்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு திரும்பி விட வேண்டும். இந்நிலையில், "டூரிஸ்ட் விசா' மூலம் வெளிநாட்டிற்குச் செல்லும் அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் "ஓவர் ஸ்டே' என்ற வகையில் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.பலரின் பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல், நாடு திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் இளைஞர்கள், பின், இந்திய அரசின் முயற்சியின் பேரில் நாடு திரும்பும் அவலமான சூழ்நிலை நிலவுகிறது.வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஐ.டி., இன்ஜினியர்கள் ஆனாலும் சரி, கட்டட வேலைக்கு செல்பவர்களானாலும் சரி, இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் அவர்களுக்கு வேலை, சம்பளம், மருத்துவக் கவனிப்பு, பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து குடியுரிமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "முதலில் எம்ப்ளாய்மென்ட் விசா மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுலா விசா (டூரிஸ்ட் விசா) மூலம் வேலைக்கு செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு) சான்றிதழ் பெற வேண்டும். இதை, புரெக்டக்டர் ஆப் இமிகிரன்ட் என்ற அதிகாரியிடம் பெறலாம்.அடுத்ததாக, வேலை வாய்ப்பு தரும் நிறுவனம் தனக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள் என்னென்ன ஆகியவை குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரத்திற்கு கொடுத்து, அங்கு அட்டஸ்டட் பெற வேண்டும். அதோடு. தங்கள் சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்து அனுப்பப்போகிறது என்ற தகவலும் கொடுக்கப்பட வேண்டும். (இந்தியாவில் ஆட்களை எடுக்கும் நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்)மூன்றாவதாக, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும் தொழிலாளியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல், இந்திய தூதரகத்தில் அட்டஸ்டட் செய்யப்பட வேண்டும். குறைந்தது, இந்த மூன்று விதிமுறைகளை கடைபிடித்தால் கூட போதும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வேலைக்கு சேர்ந்த பின் அவதிப்பட வேண்டியதிருக்காது' என்றார்.

வெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு, சென்னையில் தமிழக அரசின் சார்பில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட்' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம், பிரான்ஸ், ஓமன், பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி, தங்களுக்கு தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன.ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு.


இது குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் முறைப்படி ஆட்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறோம். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவோர், முதலில் எங்கள் நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று எங்களிடம் கேட்கும். அப்போது, அதற்கு தகுதியுடையவர்களை அங்கு அனுப்பி வைக்கிறோம். மேலும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து, அதன் மூலமும் ஆட்களை எடுத்தும் அனுப்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்வோர், "எம்ப்ளாய்மென்ட் விசா' உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற உதவுகிறோம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. நாங்கள், 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறோம். எங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்க்கு பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதம்' என்றார்.

தொடர்பு கொள்ளலாமே! சம்பளம், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல விரும்புவோர், தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தை அணுகலாம். அனைத்து பணிகளுக்கும் இந்நிறுவனம் ஆட்களை அனுப்புகிறது.இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையார், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை 044 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

10 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு, ஐந்து லட்சம் எக்டேர் குறைந்துள்ளது விவசாயத் துறை!


தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு, ஐந்து லட்சம் எக்டேர் குறைந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை, விவசாயத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ல், 53 லட்சம் எக்டேராக இருந்த விவசாய நிலங்களின் பரப்பளவு, தற்போது 48 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது.தொழில் துறை வளர்ச்சியும், நகரமயமாதலும் தான் இதற்கான முக்கிய காரணங்கள். சென்னை, புதுவை, கோவை மற்றும் மதுரை நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே விளை நிலங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

சென்னை, புதுவை, கோவை, மதுரை: கடந்த 10 ஆண்டுகளில், சென்னை அருகே உள்ள மாவட்டங்களில், காஞ்சிபுரம்- 29,234 எக்டேர், திருவள்ளூர்-14,032 எக்டேர், வேலூர்-36,097 எக்டேர் மற்றும் திருவண்ணாமலை-17,031 எக்டேர், விளை நிலங்களை இழந்துள்ளன.அதே போல், புதுவை அருகே உள்ள கடலூர்-18,816 எக்டேர், விழுப்புரம்-4,029 எக்டேர், விளை நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது.கோவை மற்றும் வடமேற்கு மாவட்டங்கள், அதிக தொழில் வளர்ச்சி கண்டு வருவதால், இங்கு தான் அதிகப்படியான விளைநிலங்கள் அழிக்கப் பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிகமாக, தர்மபுரி-2,51,850 எக்டேர், கோவை-1,37,200 எக்டேர், ஈரோடு-1,08,803 எக்டேர், சேலம்-56,524 எக்டேர், நாமக்கல்-40,653 எக்டேர், கிருஷ்ணகிரி-9,702 எக்டேர் வீதம், விளை நிலங்கள் குறைந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் 34,443 எக்டேர், திண்டுக்கல்-16,365 எக்டேர், விருதுநகர்-15,749 எக்டேர், சிவகங்கை-6,782 எக்டேர் குறைந்துள்ளது.

தனி சட்டம் தேவை?  விளை நிலங்களின் பரப்பளவு குறைந்தது குறித்து,விவசாயத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், விளை நிலங்களை காப்பாற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒரு ஏக்கர் விளை நிலத்தை தனியார் வாங்கி வீட்டு மனைகளாக பிரிக்க வேண்டுமானால், அந்த மாவட்டத்தில் விவசாயத் துறை இணை இயக்குனரிடம் "இந்த நிலம் விவசாயத்திற்கு லாயக்கற்றது' என, "என்.ஓ.சி' சான்றிதழ் வாங்க வேண்டும்.அந்த உத்தரவினால் விளை நிலங்கள், வீட்டு மனைகளாக்கப்பட்டது தவிர்க்கப்பட்டது. அதன் பின்பு, அந்த உத்தரவு படிப்படியாக கைவிடப்பட்டது. விளை நிலத்தின் பரப்பு குறைவதால், உணவு உற்பத்தி குறைந்து, விலையேற்றம் அதிகரிக்கும். விவசாய நிலம் அழிக்கப்பட்டு வருவதைத் தடுக்க, தனியாக சட்டம் கொண்டு வருவதுடன், அதை கண்காணிக்க தனி ஆணையமும் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், விவசாய நிலங்கள் மேலும் குறையும் அபாயம் உள்ளது. இவை குறைந்தால், உணவு உற்பத்தி குறைந்து, உணவுப் போருட்களின் விலை மேலும் உயரும் சூழல் உருவாகும்.

ஹரியானாவின் ஹிசார் இடைத்தேர்தல் காங்கிரஸ் படுதோல்வி!

ஹரியானாவின் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ்(பஜன்லால்) வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய் சுமார் 6323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது அவருக்கு அடுத்தபடியாக ஐஎன்எல்டி வேட்பாளர் அஜய் செளதாலா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். எனினும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெய்ப்ரகாஷ் இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. குல்தீப் பிஷ்னோய்க்கு 355941 வாக்குகளும், அஜய் செளதாவுக்கு 349618 வாக்குகளும், ஜெய்ப்ரகாஷுக்கு 149785 வாக்குகளும் கிடைத்தன.


இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும், இந்தத் தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கும், செளதாலாவுக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவிவந்ததாகவும், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டது புதிய திருப்பம் என்றும் ஹரியானா வட்டாரங்கள் தெரிவித்தன. அண்ணா ஹசாரே குழுவினர் பிரசாரம் மேற்கொள்ளவில்லையெனினும் நான்தான் வெற்றிபெறுவேன். அண்ணா ஹசாரே குழுவினர் காங்கிரஸுக்கு எதிராக மட்டும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அனைத்து ஊழல் கட்சிகளுக்கு எதிராகவும்தான் பிரசாரம் மேற்கொண்டனர். எனவே நான் அண்ணா ஹசாரேவால்தான் வெற்றிபெற்றேன் என்று கூறமுடியாது என குல்தீப் பிஷ்னோய் கூறினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...