கண்ணான பாரதத்தின் கண்மணியே வருககனவுகளை நனவாக்கும் கதிரவனே வருகநலமே நாடுகின்ற நாயகனே வருக...
மரக்கன்றை நட்ட அப்துல் கலாம், அங்கே விவசாயிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக எழிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் ஆடி, குழந்தையாகவே மாறி குதூகலித்தார் கலாம்; பல்லாயிரம் குழந்தைகள் "ஹேப்பி பர்த்டே' வாழ்த்துப்பாட, "கேக்' வெட்டினார். நிகழ்ச்சிக்கு "பாதையெங்கும் பசுமை' என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், பார்க்கும் இடமெல்லாமே அங்கே பச்சையாகத்தான் இருந்தது. பச்சை மூங்கிலில் மேடை, தேக்கு இலைகளினாலான கூரை, பச்சைக்கோரைப் பாய் விரிப்பு, மூங்கில் நாற்காலிகள், பச்சை கார்பெட், பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பச்சை நிறக் குடைகள், "மைக்' வயரும் கூட பச்சை... எங்கெங்கு காணினும் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியின் இனிய துவக்கவிழாவாக அந்த விழா அமைந்திருந்தது. தனது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இந்த விழாவில், கலாம் நேரடியாகப் பங்கேற்று, நாவல் மரக்கன்று ஒன்றை நட்டது சிறப்பம்சம்; கோவைக்கு மகாத்மா காந்தி வந்தபோது, அவர் நட்ட நாவல் மரத்திலிருந்து உருவாக்கிய மரக்கன்று அது என்பது சிறப்புச் செய்தி. அதன்பின், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அவர் பேசியது: ஐக்கிய நாடுகள் சபை, இந்த ஆண்டை வன ஆண்டாக அறிவித்துள்ளது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில், கோவையில் பசுமையைக்கொண்டு வரும் "பசும்புலரி' திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. ஒரு வாரத்துக்கு 2011 மரங்கள் வீதமாக 52 வாரங்களில் ஒரு லட்சத்து 4,572 மரக்கன்றுகளை நட்டுவித்து, அவற்றை 100 சதவீதம் வளர்ப்பதே இத்திட்டம். இத்திட்டத்தில், ஆயிரம் மரங்களை வளர்ப்போர்க்கு, "கிரீன் கார்டியன்', 100 மரக்கன்றுகளை வளர்க்க, "கிரீன் வார்டன்', 10 மரக்கன்றுகளை வளர்க்க "கிரீன் ஹேண்ட்' என்று நான்கு அடுக்கு பசுமை இணைப்பை ஏற்படுத்தியுள்ளது என்னைக் கவர்ந்தது. ஒரு லிட்டர் டீசல், 2.7 கிலோ கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது; நானும், எனது நண்பர்களும் கடந்த 2 நாள் பயணத்தில், 162 கிலோ கார்பனை உற்பத்தி செய்துள்ளோம். ஆண்டுதோறும் அண்டவெளியில் 36 பில்லியன் டன் கார்பன் உருவாகி, உலக வானிலை நிலவரம் மாறிக் கொண்டிருக்கிறது.
நாளைய பாரதத்தின் நம்பிக்கையே வருக!
பவானி கி÷ஷாரின் பரவசமூட்டும் குரலும், மழலைக் குரலும் இணைந்து பாடும் அந்தப் பாடல், பச்சைப் பட்டாடை போர்த்தியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலே எதிரொலிக்கிறது. செவிகளில் நுழைந்து, இதயத்தை ஊடுருவிய அந்தப் பாடலுக்கு நடுவே, பல ஆயிரம் குழந்தைகளின் வாழ்த்தொலியும் கலக்க, பள்ளிக் குழந்தை போல் துள்ளி வருகிறார் விழா நாயகன்... அப்துல் கலாம். நேற்று அவரது 80வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்குப் பரிசாகத்தான், அழகிய சூழலில், அன்பான குழந்தைகளுக்கு மத்தியில் அருமையாக அரங்கேறியது அந்த விழா. சிறுதுளி, ராக் அமைப்புகள் இணைந்து துவக்கியுள்ள "பசும்புலரி' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், நண்டங்கரை தடுப்பணை கரையில் நடந்த "பசுமைப்பொன்னாடை விழா'வின் காட்சிதான் இது.
ஒரு மரம், ஆண்டுக்கு 20 கிலோ கார்பனை உட்கொண்டு, 14 கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. நமது நாட்டிலுள்ள 100 கோடி மக்களும், ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்; மொத்தத்தில் நம்மால் ஒரு பில்லியன் மரங்களை வளர்க்க முடியும்; அப்படி வளர்த்தால், நாட்டின் தட்ப வெப்ப நிலையே மாறி, உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா மாறும். கோவையிலுள்ள விவசாயிகள், மஞ்சளுக்கு விலை கிடைக்க வில்லை, காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைகின்றன என்று என்னிடம் தெரிவித்தனர். இதற்குத் தீர்வு காண்கிற வாய்ப்பு, நம்மிடம் இருக்கிறது. மலையடிவாரத்தில் மழைக்காடுகளை உருவாக்கினால், யானைப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தலைவர் பாலசுப்ரமணியன், "ராக்' தலைவர் சுவாமிநாதன் உட்பட பலரும் பங்கேற்றனர்.
மரங்களே அழியாச் சொத்து! மரம் வளர்ப்பது தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கலாம் கூறிய உறுதிமொழி: நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாப்பேன்; நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன். எனது அழியாச் சொத்தாக மரங்களை, என் சந்ததிக்கு விட்டுச் செல்வேன்; நூறு கோடி மரம் நடும் இயக்கத்தில் என்னை ஈடுபடுத்தி, அதை சிரமேற்கொண்டு, செயல்படுத்துவேன். முதற்கட்டமாக, "பசும்புலரி'யின் அங்கமாக 10 மரங்களை நட்டு, இந்த நாட்டுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.
No comments:
Post a Comment