சர்வதேச அளவில் தங்கத்தை வாங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த15 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலையில் இந்தியாவின் மொத்த தங்க மதிப்பு 24 லட்சம் கோடி. அதாவது இந்திய பட்ஜெட்டை விட இருமடங்கு அதிகம். உலகம் முழுவதும் பல நாடுகளிடமிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்தாலும், அதிக அளவு வாங்குவது சுவிட்ஸர்லாந்திடமிருந்துதான். கடந்த ஆண்டு மட்டும் இந்த நாட்டிலிருந்து ரூ 6 லட்சம் கோடி அளவுக்கு சுவிஸ்ஸிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உலகின் அனைத்து நாட்டு தங்கமும் ஒரே தரம்தான் என்றாலும், சுவிடஸர்லாந்து தங்கத்தின் ஜொலிப்பு மட்டும் கூடுதலாக இருக்குமாம். இந்த தங்கத்தில் செய்யும் நகைகளின் ஃபினிஷிங் வெகு அழகாக அமையுமாம். எனவே வர்த்தகர்கள் அதிகமாக சுவிட்ஸர்லாந்து தங்கத்தையே நாடுகிறார்கள்.
சுவிட்ஸர்லாந்துக்கு அடுத்து அதிக அளவு இந்தியா தங்கம் வாங்கும் நாடு தென் ஆப்ரிக்கா. அதற்கு அடுத்த இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு. சர்வதேச அளவில் தங்க இருப்பு வைப்பதில், அமெரிக்காதான் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. ஆனால் தங்க மார்க்கெட்டைக் கட்டுப்படுத்துவதில் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். 1970-ல் மொத்த தங்க மார்க்கெட்டில் 47 சதவீதம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வசமிருந்தது. ஆனால் 2010-ல் இது 27 சதவீதமாக சுருங்கிப் போனது. ஆனால் 1970-ல் 35 சதவீத மார்க்கெட் ஆதிக்கம் கொண்டிருந்த இந்தியாவும் கிழக்கு ஆசியாவும், இப்போது 58 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளன. இது உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்.