|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை!

அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாளும் அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ரமேஸ்வரம் அக்னி தீர்த்தம்: நேற்று ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலும், நாகப்பட்டணம் மாவட்டம் கோடியக்கரையிலும் ஏராளமானோர் புனித நீராடுவது மரபு.

ஆயுள் பலம் கூடும்: ஆடி அமாவாசை விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதற்கு சுவையான கதை ஒன்றும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டுவந்தான். பல புண்ணிய தலங்களுக்கு சென்று விரதம் மேற்கொண்டு புண்ணிய நதிகளில் நீராடியதன் பலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு அழகேசன் என பெயரிட்டு சீராட்டி வளர்த்தான் கத்தலைராஜா. அந்த மகனுக்கு 16 வயதில் ஆயுள் முடியும் என்று ஒருநாள் காளி மாதாவிடமிருந்து வாக்கு வெளிப்பட்டது. அதைக்கேட்ட மன்னன் தன் மகனுக்காக தன்னுயிரை இழக்கத் துணிந்தான்.

அப்போது மீண்டும் காளிமாதா தோன்றி “உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான், என்றாள்”.

சிவன் பார்வதி: காலமும் விரைந்து ஓடியது. காளியின் வாக்குப் படியே 16 வயதில் அழகேசன் மரணமடைந்தான். இதனையடுத்து சடலத்திற்கு பெண்கொடுப்பவர்களுக்கு அவ-ருடைய குடும்பத்திற்கு தேவையான அளவு செல்வம் தரப்படும் என்று மன்னன் அறிவிக்கச் செய்தான். அப்போது கிராமத்தில் வசித்து வந்த தேவசர்மா என்பவரின் பெண் குழந்தை கங்காவை அவளுடைய அண்ணிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசனின் சடலத்திற்கு திருமணம் செய்து தர முன்வந்தனர்.

மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்ற கங்காவை மணவறையில் அமரவைத்தனர். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கண்ணைக்கட்டிவிட்டனர். திருமணம் நடந்தது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர். பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. தனது கணவன் அசதியின் காரணமாக உறங்குகிறான் என கங்கா நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே அவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள். அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். எவ்வித உணர்வும் இல்லாததால் அவளுக்கு நிலைமை புரிந்துவிட்டது.

உயிர் மீண்ட அழகேசன்: தனக்கு செய்யப்பட்ட மோசடியை அறிந்து கண்ணீர்விட்டாள். அப்போது வான் வழியே சிவனும் பார்வதியும், சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் கதறல் கேட்டது. இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதிதேவியின் காலில் விழுந்து புலம்பினாள் கங்கா. அத்துடன் சிவபெருமானின் கால்களை கட்டிக்கொண்டு தன் கணவனுக்கு உயிர் தராவிட்டால் அவ்விடத்தைவிட்டு அகலவிடமாட்டேன் என சூளுரைத்தாள். சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன்வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய். இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது. உன் கணவன் உடனே எழுவான், என்றார். அழகேசனும் எழுந்தான்.

உடனே பார்வதிதேவி, கங்காவிடம், இந்த வரலாற்றை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் இக்கதையை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்க வேண்டும், என அருள்பாலித்து விட்டு மறைந்தாள்.

அமைதி தரும் அவரைக்காய்!

சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி

என்று அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

மருத்துவ குணம்; அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

உடலுக்கு வலிமை: அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தை சுத்தமாக்கும்: அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவை குணமாக்கும்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

சரும நோய்களை குணமாக்கும்: முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும். முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பிசுரேஷ் பிரேமச்சந்திரன்!

 ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தற்போது தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. 
தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றோ, சம உரிமை வழங்க வேண்டும் என்றோ இலங்கை அரசுக்கு நினைப்பே இல்லை. 

அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தது. ஆனால் அதன் நினைப்பு பொய்யாகிவிட்டது. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வெற்றி பெற்றுத் தந்தனர்.

இலங்கை அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தான் செயல்படுகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயமாக்குவது, இரண்டாவதாக புத்தமயமாக்குவது, இறுதியாக சிங்களமயமாக்குவது தான் அதன் திட்டம். தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ, சம உரிமை வழங்கவோ, சுமூகமான அரசியல் தீர்வு காணவோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.

இந்நிலையில் இலங்கை அரசு எந்த நாடு சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இந்தியா சொல்வதை அதனால் மறுக்க முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கு வாங்கிக் கொடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும். ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்றார்.

நித்தியானந்தா இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி !

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம்,நித்தியானந்தாவை கைது செய்யக் கோரி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் நித்தியானந்தாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார். நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். 

இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா. கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தர் தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர் இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்றார்.

அதிகளவில் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்!


தமிழகத்தில் 92 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்-கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.பொறியியல் கல்லூரியில் நடந்தபயிற்சி முகாமை துவக்கி வைத்துஅவர் கூறியதாவது: &'தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2.20 லட்சம்சீட்டுக்கள் உள்ளனகவுன்சிலிங் மூலம் ஒரு லட்சத்து 47 ஆயிரம்பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு 73ஆயிரம் சீட்-கள் ஒதுக்கப்பட்டுள்ளனஇதுவரை 55 ஆயிரம் பேர்தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 92 ஆயிரம் சீட்கள் காலியாகஉள்ளனதற்போது 22 நாட்கள் கவுன்சிலிங் முடிந்துள்ளதுஇன்னும்13 நாட்கள் கவுன்சிலிங் நடக்க உள்ளதுஇது முடிந்த பின்பு 30 ஆயிரம்சீட் எப்படியும் காலியாக இருக்கும்இதனால்துணை கவுன்சிலிங்ஆக., 12 ல் நடக்க உள்ளது.
துணை கவுன்சிலிங்கில் இதுவரை விண்ணப்பிக்காதவரும்பிளஸ் 2 ல் பெயிலாகிதேர்வானவர்களும்விண்ணப்பிக்கலாம்.சி.., பிரிவை 46 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்இதையடுத்துகம்ப்யூட்டர்மெக்கானிக் பிரிவை தேர்வு செய்கின்றனர்இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதலாமாண்டுவகுப்புகள் ஆகஸ்ட் 22 முதல் துவங்குகிறது

பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி!

ஆனால், பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து, அலைக்கழிக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நேச நாடாக செயல்படும் சீனா, தன் முடிவைச் சொல்லாமல் சமாளிக்கிறது. அதற்கு, அங்கு நடைபெறும் ஜனநாயகமற்ற ஆட்சி கவசமாக உள்ளது.விலைவாசி உயர்வு ஏன்?
கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி, எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம். மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா, அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும், மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில், செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து, அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன. ஆனால், இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது. 

இந்தியாவில் தற்போது இருக்கும் அளவுகடந்த பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு இந்தச் சுழலும் ஒரு காரணம். ஏதோ தேவை அதிகரித்து, அதனால் பொருட்கள் விலை உயர்ந்தது என்ற அடிப்படை பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் தற்போது, விலை உயர்வு விண்ணை முட்டவில்லை. இது அபாய அறிகுறி.நாட்டின் மொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதில் 10 சதவீத அளவுக்குமேல் நிதிப்பற்றாக்குறை வந்தால், அந்த நாடு பொருளாதாரத்தில் தள்ளாட்டம் போடுகிறது என்று அர்த்தம். அந்த நாடு தலைகீழாக நின்றாலும், எங்குமே கடன் வாங்க முடியாது. ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கும் அமெரிக்கா, எளிதாக தன் பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்கிறது. காரணம், அது வலுவான நாடு.

டாலர் - யூரோ போர்:அமெரிக்க டாலர், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த "யூரோ' என்ற ஐரோப்பிய கரன்சி ஆகிய இரண்டுக்கும் இடையே, தற்போது பெரிய போர் நடக்கிறது. அடுத்த சில நாட்களில், யூரோ மேலும் பலமிழக்கும். டாலருக்கு பதிலாக, சுவிஸ் பிராங்க் கரன்சி, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் போக்கு வந்து விட்டது. தற்போது காணப்படும் அபாயத்தில் தங்கம், கச்சா எண்ணெய், கோதுமை, சர்க்கரை, சோயாபீன்ஸ் ஆகியவற்றின் விலை, விநியோகம்- தேவை என்ற 
கோட்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை.

அபாயத்தில் கிரீஸ், இத்தாலி:ஐரோப்பிய நாடுகளில், கிரீஸ் மிக மோசமாக இருக்கிறது; இத்தாலிக்கு அதிக அபாயம் காத்திருக்கிறது. ஜெர்மனி சிரமப்படுகிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த பொருளாதார இருள் சூழ்ந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் என்பதில் உள்ள 17 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அதில், பெரிய அளவில் முடிவு ஏற்படவில்லை. கிரீஸ் தடுமாற்றத்தை எந்த அளவு குறைப்பது என்று பேசிய அவர்கள், முடிவு எடுக்காமல் பின்வாங்கினர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடுகள் வரிசையில், மூன்றாவது நாடான இத்தாலி கடன் சுமையில் தவிப்பது கண்டு அச்சப்பட்டனர்.

நிபுணர் கருத்து:இன்று எல்லாரும் அமெரிக்காவின் கடன் சுமை பாதிப்பு பற்றி பேசும் போது, ஐரோப்பிய நாடுகள் தவிப்பு குறித்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறிய கருத்து இதோ:உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் (ஐ.எம். எப்.,) தந்த நிதியுதவிகள் எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், எல்லாத் தரப்பையும் அந்த வளர்ச்சி சென்றடையவில்லை. மத்திய தர மக்களைக் கூட முன்னுக்குக் கொண்டு வரவில்லை.தனியார்மயம் ஊழலை வளர்த்து, புதிய பணக்காரர்களை உருவாக்கி, முடிவில், அதிக வேலையின்மையை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக, உலகமயமாக்கல் தத்துவம், ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழவைத்து விட்டது.

உலகின் ஒரு பக்கம் பாதிப்பு என்றால், அடுத்த பக்கத்தில் அது பிரதிபலிக்கிறது.அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அங்கே தொழில்துறை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது ஐரோப்பிய நாடுகளின் தள்ளாட்டம், அமெரிக்காவை மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும். அரபு நாடுகளின் மகிழ்ச்சியை பாதிக்கும். அங்கிருந்து பலர், வேலை வாய் ப்புகளை இழந்து ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பலாம்.தற்போதைய பிரச்னைகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் தரலாம் என்றாலும், அதற்கான பலன் கிட்ட, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு, நிபுணர் ஸ்டிக்லிட்ஸ் கூறியுள்ளார். இது ஐரோப்பிய நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலை அபாயமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது

பா.ம.க.,வின் சுயலாபக் கணக்கு !

சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அணியில் போட்டியிட்டு படுதோல்வி கண்டதால், அந்த அணியிலிருந்து விலகி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடி முடிவு எடுத்துள்ளது.பொதுக்குழுவில், கட்சிப் பிரமுகர்கள் தி.மு.க., வை கடுமையாக விமர்சித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மட்டும், தி.மு.க.,வை விட்டு வெளியேறும் முடிவை பொறுமையாக எடுக்க விரும்பினார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் ஆதரவாளர்கள்,"தி.மு.க., கூட்டணி தேவையில்லை' என்ற முடிவை, உடனடியாக எடுக்க உறுதுணையாக இருந்தனர்.

அவர்கள் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நீடித்தால், மீண்டும் மோசமான தோல்வியை நாம் சந்திக்க நேரிடும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், வேலு போன்றவர்கள் நமக்கு பச்சைத் துரோகம் செய்து, நம்மை தோற்கடித்தனர். இப்போது தி.மு.க.,வின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தோல்வி அடைந்தால், தொடர் தோல்வி மூலம் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், எந்த வகையிலும் பலன் இல்லை. தி.மு.க., கூட்டணியில் ஒற்றை எம்.பி.,யாக இருக்கிற திருமாவளவன், தி.மு.க., தரப்புடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் மாறிவிட்டது. அக்கட்சியுடன் இனிமேல் இணைந்து பணியாற்ற, நமது தொண்டர்கள் தயாராக இல்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தி.மு.க., கூட்டணியை விட்டு, வெளியேறுவது என்ற பா.ம.க.,வின் முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் அதிர்ச்சியையோ, ஆச்சிரியத்தையோ ஏற்படுத்தவில்லை. தி.மு.க.,வை பொறுத்தவரையில், இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட முடிவாகக் கருதுகிறது. தி.மு.க., கூட்டணியை முறிப்பதற்கு, பா.ம.க., வின் சுயலாபக் கணக்கு தான் காரணம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் 2013ம் ஆண்டில், ஒரு ராஜ்யசபா சீட் பா.ம.க., வுக்கு தரவேண்டும் என, தி.மு.க., விடம் போடப்பட்ட தேர்தல் உடன்பாட்டினால், இனி லாபமில்லை. ஒரு ராஜ்யசபா சீட் பெறுவதற்கான எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விடம் இல்லை என்பதால், அக்கட்சியுடன் கூட்டணியை தொடர, பா.ம.க., விரும்பவில்லை.

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.,வின் கரிசனம் கிடைக்கும். அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில், முக்கிய எதிரிகளாகக் கருதப்படும் ராமதாஸ், அன்புமணி வழக்கு விசாரணையிலிருந்து மீளமுடியும் என்ற எதிர்பார்ப்பும், முக்கிய பங்கு வகிக்கிறது.வட மாவட்டங்களில் திருமாவளவனுடன் ராமதாஸ் கைகோர்ப்பதை, வன்னியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாவளவனை விட்டு விலகுவதால், பா.ம.க., வுக்கு லாபம் என்ற கருத்தும் கணிக்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுவரை ராமதாஸ் விமர்சனம் செய்யாமல் இருந்தார். இதனால் ராமதாஸ் மீது, வன்னியர்கள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர். இனிமேல், ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சிப்பதன் மூலம், வன்னியர்களின் அதிருப்தியைப் போக்க முடியும் என்ற கணக்கும் கணிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, பென்னாகரம் பார்முலா மூலம், ஓட்டு வங்கியை பலப்படுத்துவது, தி.மு.க., அணியில் போட்டியிட்டு தோல்வி அடைவதை விட, வட மாவட்டங்களில் தனித்து நின்று, கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பேராசையும், முக்கிய காரணமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க., பொதுச் செயலர் வடிவேல் ராவணன் தலைமையில், செப்டம்பர் மாதம் 11ம் தேதி பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரனின் விழாவில் ராமதாஸ் கலந்து கொள்கிறார். அவ்விழாவின் மூலம், தென் மாவட்டங்களில் பா.ம.க.,வை வளர்ப்பதற்கு, தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தினரை கையில் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி சுய லாபத்திற்காகவே தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரம்.

திமுகவினரின் வெள்ளையாக்கப்படும் கருப்பு பணம்!

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய அமைச்சராவதற்கு, கனிமொழி சிபாரிசு செய்தார் என்பது ஊரறிந்த ரகசியம். இதேபோல், நிதித் துறை பொறுப்பை கையில் வைத்திருப்பவரை சிபாரிசு செய்தவர், தி.மு.க., தலைவரின் மற்றொரு மகளான செல்வி. இவர் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன், அவருக்கு நிதித் துறை பொறுப்பு பெற்றுத் தரப்பட்டது.இவர் ஒரு வழக்கறிஞர் என்றாலும், தகுதியின் அடிப்படையில், அவருக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. திருவல்லிக்கேனி பெல்ஸ் சாலையில், இவர் மெஸ் ஒன்றை நடத்தி வந்தார். இவரை வைத்து, தி.மு.க.,வினர் எப்படி எல்லாம் பயன் அடைந்துள்ளனர் என்பது, மிகவும் சுவராசியமான தகவல்.

வருமான வரித் துறையை, பணம் சம்பாதிப்பதற்காக, இவர் பயன்படுத்திக் கொண்டார். இவரின் உத்தரவு படி, சில இடங்களில் சோதனை நடத்தப்படும். மேலும், வேறு சில இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இவரது உத்தரவு படி, திடீரென நிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தினால், வருமானவரித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவது நிச்சயம். காரணம், மந்திரியின் வாய்மொழி உத்தரவு மூலம் தான், சோதனைகள் நிறுத்தப்படுகின்றன.

சோதனை நடத்துவதற்கான வாரண்ட், வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலிடம் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. சோதனை நடத்தச் செல்லும் இடம், நபர் பற்றிய விவரங்கள் அனைத்தும் முன் கூட்டியே காண்காணிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்ட பின்னரே, சோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது.அப்படி இருக்கும்போது, அமைச்சரிடம் இருந்து வரும் போனின் மூலம், சோதனையை எப்படி நிறுத்த முடியும்? ஆனாலும், ஓய்வு பெற்றதற்கு பின், தமிழகம், கேரளாவில் வங்கி தீர்ப்பாயம் போன்ற முக்கிய பதவி வேண்டும் என்ற ஆசையில், அதிகாரிகள் பலிகடா ஆகி விடுகின்றனர்.

தி.மு.க., தலைவருக்கு பின்னரோ அல்லது காங்கிரசுடனான, தி.மு.க.,உறவு முறிந்து விட்டாலோ, வருமான வரித் துறை, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கருதி, தி.மு.க.,வினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாருக்குமே சந்தேகம் ஏற்படாத வகையில், எந்த வழியிலாவது, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பணத்தை கொண்டு வருவது மற்றும் வரித் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை செய்கின்றனர். இதன்மூலம், நிதித் துறை, விஞ்ஞானப்பூர்வமாக, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், தன் பதவிக் காலத்தின்போது, அவரது மகன் திருமணத்தை நடத்தினார். திருமணத்துக்கு முன், கட்சியில் உள்ள தன் விசுவாசிகளுக்கு, பல லட்ச ரூபாய்களை விநியோகம் செய்தார். பணத்தை கொடுத்த கையோடு, திருமணத்தின்போது, இந்த பணத்தை, டி.டி.,யாகவோ, பரிசு காசோலையாகவோ, திரும்பச் செலுத்தும்படியும், அவர்களிடம் அறிவுறுத்தினார். வருமான வரித் துறை விசாரணையில் இருந்து, தப்பிக்கும் நோக்கத்துடன் தான் அவர் இப்படிச் செய்தார்.

தொழில் கல்வி நிலையங்களுக்கு சொந்தமான அறக்கட்டளைகள், பல கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறு மாறும்போது, பணமும் கை மாறுகிறது. அறக்கட்டளை கைமாறுவது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்போது, அதுபற்றி தகவல், வருமான வரித் துறையினருக்கு தெரியாமல் இருக்காது.
அதேபோல், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், வரி தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக, விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயத்தின் மூலம், அதிக பணம் கிடைத்ததாக, முறைகேடாக சம்பாதித்த பணத்தை, கணக்கில் கொண்டு வருவது தான் அவரது திட்டம். முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம், பெரும்பாலான தி.மு.க.,வினர், இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை, பினாமிகள் மூலமாகவோ, சொந்தமாகவோ நடத்தி வருகின்றனர். 

ஆனால், என்ன செய்வது?அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதிகாரிகளின் குழந்தைகளின் கல்வி, மிகவும் முக்கியமானது. கட்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், விரும்பத் தகாத, தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவதை அதிகாரிகள் விரும்புவது இல்லை.ரூபாய் ஏழு அல்து எட்டு விலையுள்ள வாரப் பத்திரிகைக்கு, 15 ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. இதன்மூலம், விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி, பணத்தை கணக்கில் கொண்டு வருகின்றனர். சரி... இலவச பொருட்களையாவது விலை கொடுத்து வாங்கினார்களா என்றால் அதுவும இல்லை. மிரட்டல் நடவடிக்கைகள் மூலம், தொழிற்சாலைகளில் இருந்து, இலவசங்கள் பெறப்பட்டன.

இதே நிறுவனத்தால் நடத்தப்படும் நாளிதழ், அதிகம் விற்பனை செய்யப்படுவதாக காட்டப்படுகிறது. இதன் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தையும், முறைகேடாக சம்பாதித்த பணத்தையும், கணக்கில் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, நாளிதழின் விற்பனை ஒரு லட்சம் பிரதிகள் என்றால், விலையை குறைத்து விற்பதால், பல லட்சம் பிரதிகள் விற்பனையாவதாக கூறி, பெருமளவு பணத்தை, தினமும் கணக்கில் காட்டுகின்றனர்.

திரைப்பட தயாரிப்பு விவகாரத்திலும், தி.மு.க.,குடும்பத்தினர் இதே வழிமுறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு வாரமும், திரைப்படங்கள் வெளியாவதை அடுத்து, அவற்றை வெளியிடுவதற்காக, பெரிய அளவில் தியேட்டர்கள் முன் கூட்டியே, "புக்' செய்யப்படுகின்றன. பெரிய அளவு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. கொள்ளையடித்த பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தான் இவைகள் செய்யப்படுகின்றன.
இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு, "கால்ஷீட்' கொடுக்காத நடிகர், நடிகைகளின் வீடுகளில், அமைச்சரின் உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்படுகிறது. திரைப்படத் துறையை அழிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நோக்கம் இல்லை... ஆனால், இவர்களில் செயல்களால் அது தான் நடந்தது . இதனால் கொந்தளித்த, சினிமா துறையினர் அனைவரும், தி.மு.க., படு தோல்வி அடைய காரணமாக இருந்தனர். "எந்திரன்' திரைப்படம் தயாரிப்பு மற்றும் வெளியீடு விவகாரத்திலும் இது தான் நடந்தது. இதன்மூலம், அவர்களின் கறுப்பு பணம், வெள்ளையாக்கப்பட்டது.

இதுபோன்ற நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், விமான நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக் கொள்வதோ, வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதோ, அவர்களுக்கு எளிதாகி விடுகிறது.இவர்களின் கட்சியை சேர்ந்தவரே, நிதித் துறை இணை பொறுப்பு வகிக்கும்போது, இவர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க முடியும். கட்சிக்காகவும், கட்சியை சார்ந்தவர்களுக்காகவும் தான், அவர் வேலை பார்க்கிறார். இதற்காக, அரசின் பணம், அவருக்கு சம்பளமாகவும் கிடைக்கிறது.கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் பதவி வகித்து வருகிறார். இந்த கால கட்டத்தில், அமைச்சகத்துக்காக அவர் என்ன செய்துள்ளார்? அவரின் பங்கு என்ன? குறிப்பிட்ட, "டிவி' குழுமம் தான், இதனால் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது."சன் டிவி' செயல் இயக்குனர் மீது சேலத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசில் மோசடி புகார் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் அவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை யாருமே இந்த குடும்பத்தினர் செயல்களை எதிர்த்து போலீஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. காரணம், போலீஸ் இயந்திரம் முழுவதும் இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.வருமானவரித்துறையில் நேர்மையான, மனச்சாட்சிக்கு பயந்த அதிகாரிகள் உள்ளனர். நடக்கும் செயல்களை எல்லாம் அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அமைச்சர் பதவி இழந்தாலோ, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி முறிந்தாலோ, இழந்த கவுரவத்தை மீட்கவும், துன்புறுத்திய மந்திரியை பழிவாங்கவும், வருமானவரித்துறைக்கு அதிக வேலை வந்து விடும்.இவ்வாறு, வருமானத்துறையில் உள்ள, பல நேர்மையான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீருக்கடியில் சதுரங்க போட்டி புதுச்சேரியில் கின்னஸ் சாதனை!


 நீருக்கடியில் சதுரங்கம் விளையாடி, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில், விளையாட்டு வீரர்கள் ஈடுபட்டனர். புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான, கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை கோகோ லேண்ட் நீச்சல் குளத்தில், நீருக்குள் சதுரங்கம் விளையாடி, 3 உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடந்தது. அரசு கொறடா நேரு துவக்கி வைத்தார். காலை 11.12 மணிக்கு, 10 சதுரங்க வீரர்கள் 5 ஜோடியாக பிரிந்து, 12 அடி ஆழ நீச்சல் குளத்தில் பிரத்யேக நீச்சல் உபகரணங்கள் அணிந்து, நீருக்குள் மூழ்கியபடி விளையாடினர். நீரின் அழுத்தம், சுவாசப் பிரச்னை உட்பட, பல்வேறு தடைகளைக் கடந்து, 25 நிமிடங்களில் வெற்றிகரமாக விளையாடி முடித்தனர். இதில் ஐயப்பன், லியோ ஆனந்த், விக்னேஷ், ஜெகன்ராஜ் வெற்றி பெற்றனர். ராஜேஷ்குமார், அதிர்ஷ்டசெல்வம் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. 

இரண்டாவதாக, நீருக்கு மேல் மிதந்தபடியே, சதுரங்கம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சதுரங்கப் பலகை மிதந்தபடி இருக்க, இரண்டு செஸ் வீரர்கள் நீருக்குள் மிதந்தபடியே, செஸ் விளையாட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சதுரங்கப் பலகை மிதக்காமல் கவிழ்ந்ததால், இச் சாதனை தோல்வியில் முடிந்தது. மூன்றாவதாக, லியோ ஆனந்த் ஒரே நேரத்தில், 10 பேருடன் 22 நிமிடங்கள் சதுரங்கம் விளையாடினார். போட்டிகளை தேசிய செஸ் நடுவர் நடராஜன், துணை நடுவர் பாஸ்கர், நீச்சல் வீரர் பிரேமானந்தன் ஆகியோர் கண்காணித்தனர். அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் நடுவராகப் பணியாற்றினார். நீருக்கடியில் நடந்த சதுரங்கப் போட்டிகள் முழுவதும், பிரத்யேக கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, கின்னஸ், குளோபல், லிம்கா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் வைத்தியநாதன், சத்திய சாய் செஸ் பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார், சேலஞ்சர் அகாடமி தலைவர் வெங்கடேசன், ஸ்கூபா டெம்பிள் அட்வென்சர் அரவிந்த், பன்னீர்செல்வம், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி!

இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.

இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் இதைத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ராஜதந்திர கோரிக்கை கடிதம் ஒன்றை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. எனினும் வெளிநாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை இதுவரை அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 19 வது அமர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.


இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கலந்துரையாடலுக்காக சமாப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை இலங்கை நிராகரிக்கும் நிலையே உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உடன்பட்டால் மனித உரிமைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்பதே இதற்கான காரணம் என்று இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...